எடப்பாடியின் பின்புலத்தில் பாஜக – அம்பலப்படுத்திய பதிவுகள்

அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே தலைமைப் போட்டி கடுமையாக நடந்துவருகிறது.

நீதிமன்றங்களிலும் தேர்தல் ஆணையத்திலும் அந்தச் சிக்கல் இப்போது இருக்கிறது.

இந்நிலையில், ஓ.பன்னீர் செல்வம் கொரோன தொற்று பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஓ.பன்னீர்செல்வத்துக்குக் கடந்த சில நாட்களாக சளி பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதையடுத்து நேற்று காலையில் அவர் கொரோனா பரிசோதனை செய்தார். பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த் கேர் மருத்துவமனையில் பன்னீர்செல்வம் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஓ.பன்னீர்செல்வம் நேற்று இலேசான கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர், எங்கள் நிபுணர்கள் குழுவின் கண்காணிப்பின் கீழ் உள்ளார். அவர் உடல்நிலை தற்போது சீராக இருக்கிறது. மருத்துவக் குழுவின் ஆலோசனைப்படி மருந்து உட்கொண்டு வருகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாஜகவைச் சேர்ந்த ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள பதிவில்…..

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் முதல்வருமான திரு.பன்னீர்செல்வம் அவர்கள் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்தேன்.
அவர் பூரண நலம் பெற்று பொதுப்பணியை முழு உத்வேகத்துடன் விரைவில் தொடர இறைவனை பிரார்த்திக்கிறேன்.

என்று கூறியுள்ளார்.

அதேபோல் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில்….

முன்னாள் முதல்வர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான திரு ஓ.பன்னீர்செல்வம்
அண்ணன் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்ற செய்தியை அறிந்தேன்.

அவர் பூரண நலம் பெற்று மக்கள் பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்!

எனக் கூறியுள்ளார்.

இவர்கள் இருவருமே ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிடாமல் எதிர்க்கட்சித் துணைத்தலைவர், முன்னாள் முதல்வர் என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம், அதிமுகவில் நடக்கும் தலைமைப் போட்டியில் எடப்பாடியை பாஜக மறைமுகமாக ஆதரிக்கிறது என்பது தெரியவந்துள்ளது.

Leave a Response