அண்ணாமலையின் அநாகரீகம் – சென்னை பத்திரிகையாளர் சங்கம் கடும் கண்டனம்

சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று (27.05.22) அக்கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அந்தச் சந்திப்பில், நேற்று முன்தினம் (26.05.22) பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்திருந்த சமயம் அவரை வரவேற்பதற்கு பாஜக சார்பாக விதிமுறைகளை மீறி பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதில் அளித்த அண்ணாமலை, காவல்துறையின் அனுமதியுடன்தான் பேனர் வைக்கப்பட்டதாகவும், விதியை மீறி பேனர் வைத்ததற்கான ஆதாரம் உள்ளதா? என்று செய்தியாளரிடம் கேட்டார். இதற்கு அந்தச் செய்தியாளர், தன்னிடம் உள்ள ஆதாரம் குறித்து விளக்க ஆரம்பித்த போது, அதைக் காது கொடுத்துக் கேட்காமல், அவரைப் பேச விடாமல் தடுத்த அண்ணாமலை, உங்களுக்கு “200 ரூபாய் நிச்சயம்” என்று செய்தியாளரை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார்.

அண்ணாமலையின் இந்தப் பேச்சுக்குக் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து சென்னை பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் அதன் பொதுச்செயலாளர் மணிமாறன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்….

பத்திரிகையாளர்களைப் பற்றி அவதூறாகப்  பேசி வரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு சென்னை பத்திரிகையாளர் யூனியன் கடும் கண்டனம் தெரிவிக்கிறது.

சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 27-05-2022 அன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது விதிகளை மீறி பேனர் வைக்கப்பட்டது குறித்து பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு “உங்களுக்கு 200 ரூபாய் ” என அவரை இழிவுபடுத்தி அண்ணாமலை பதிலளித்தார். இதற்கு எதிர்ப்பு எழுந்தவுடன், “சரி 500 ரூபாய் வாங்கிக் கொள்ளுங்கள்…” “ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொள்ளுங்கள்.., 2 ஆயிரம் ரூபாய் அறிவாலயத்தில் இருந்து கிடைத்துவிடும்” என்றெல்லாம் அடுத்தடுத்து அவதூறுகளை அண்ணாமலை அள்ளி வீசியுள்ளார். இந்த அவதூறுகளுக்கு தர்மம் என்று விளக்கம் வேறு கொடுத்துள்ளார்.

பத்திரிக்கையாளர்கள் தங்களுடைய கடமைகளைச்  செய்வதற்கு அறிவாலயத்தில் கையூட்டு வாங்குகிறார்கள் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் அண்ணாமலைக்கு சென்னை பத்திரிகையாளர் யூனியன் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.

கேள்வி கேட்கும் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்துவது, அநாகரிகமாக நடந்துகொள்வது, மிரட்டுவது போன்ற நடவடிக்கைகளை மாநில பாஜக தலைவர் அண்ணாமலை நிறுத்திக்கொள்ள வேண்டும். பத்திரிகையாளர்களின் உரிமையையும் ஊடக சுதந்திரத்தையும் மதிக்க வேண்டும் என்றும் சென்னை பத்திரிக்கையாளர் யூனியன் கேட்டுக்கொள்கிறது. வலியுறுத்துகிறது.

மணிமாறன்
பொதுச்செயலாளர்
சென்னை பத்திரிகையாளர் யூனியன்

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response