நயினார் நாகேந்திரனை மாட்டிவிட்டது அண்ணாமலை? – கசியும் வதந்தி

சென்னையில் இருந்து நெல்லைக்கு கடந்த 6 ஆம் தேதி இரவு புறப்பட்டுச் சென்ற நெல்லை எக்ஸ்பிரஸ் தொடர்வண்டியில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தேர்தல் செலவிற்குப் பணம் கொண்டு செல்லப்படுவதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்ததின் பேரில் தாம்பரம் தொடர்வண்டி நிலையத்திற்கு வந்த நெல்லை எக்ஸ்பிரஸ் வண்டியை தேர்தல் பறக்கும்படை அதிகாரி செந்தில் பாலமணி தலைமையில் பறக்கும் படையினர், தாம்பரம் தொடர்வண்டித்துறை காவல்துறையினர் மற்றும் தாம்பரம் காவல்துறையினர் உதவியுடன் அதிரடி சோதனை செய்தனர். அந்த வண்டியில் எஸ் 7 பெட்டியில் 6 பைகளில் மூன்று பேரிடம் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில், கொளத்தூர், திருவிக நகர் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (33), அவரது தம்பி நவீன் (31), ஸ்ரீவைகுண்டம் பெருமாள் (25) என்பதும், நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான புரசைவாக்கம் பகுதியில் உள்ள ப்ளூ டைமண்ட் விடுதியிலும், நயினார் நாகேந்திரனின் உறவினர் சேப்பாக்கம் பகுதியில் நடத்தி வரும் விடுதி ஒன்றிலும் இருந்து நெல்லைக்கு தேர்தல் செலவுக்குப் பணத்தைக் கொண்டு சென்றதும் தெரிய வந்தது.

சதீஷ் மற்றும் அவரது தம்பி நவீன் இருவரும் நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான புரசைவாக்கம் பகுதியில் உள்ள ப்ளூ டைமண்ட் விடுதியில் வேலை செய்ததும், பெருமாள் நயினார் நாகேந்திரனின் உறவினர் என்பதும், சதீஷிடம் பாஜக உறுப்பினர் அட்டை இருந்ததும், 3 பேரும் பணத்தை திருநெல்வேலிக்குக் கொண்டு சென்றதும் தெரிந்தது. இந்தப் பணம் தாம்பரம் வட்டாட்சியர் நடராஜனிடம் ஒப்படைத்து, அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டது.

தொடர்ந்து, பிடிபட்ட 3 பேர் மீதும் தாம்பரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து 20 நாட்களுக்கு தினமும் காலை 10 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜராகி மூன்று பேரும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தினர். நாகேந்திரனுக்குச் சொந்தமான விடுதியில் சதீஷ் 6 வருடங்களாக மேலாளராக வேலை செய்ததும், ஜெய்சங்கர், ஆசைத்தம்பி, முருகன், கோவர்தனன் ஆகியோர் பணம் கொடுப்பார்கள்.

அதை மொத்தமாகத் தங்களிடம் கொண்டு வந்து கொடுக்கும்படி நாகேந்திரன் கூறியதாக வாக்குமூலம் அளித்ததின் அடிப்படையில் நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் ஒருவர் மூலம் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஆசைதம்பி, முருகன், சென்னை அபிராமிபுரத்தைச் சேர்ந்த பாஜக மாநில தொழில்துறை பிரிவின் தலைவர் கோவர்தனன், தாம்பரம் பாஜக நிர்வாகியும், கட்டுமான நிறுவன உரிமையாளருமான ஜெய்சங்கர் ஆகியோரும் பணத்தை நெல்லை எக்ஸ்பிரஸ் வண்டியில் கொண்டு வந்த சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய 8 பேரும் இந்த வழக்கு தொடர்பாக ஒரு வாரத்திற்குள் தாம்பரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

விசாரணையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள உணவு விடுதியில் இருந்து அதிகப்பணம் கைமாறியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த உணவு விடுதி இருக்கும் கட்டிடம் பாஜக தொழில் துறைப் பிரிவு தலைவரான கோவர்த்தனனுக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது. அங்கும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டு, ரூ.1.10 இலட்சம் ரொக்கத்தைக் கைப்பற்றினர்.அவருக்கும் காவல்துறையினர் சம்மன் அனுப்பினர்.

இந்நிலையில் நேற்று மாலை கோவர்தனனின் மகன் வழக்கறிஞருடன் தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராகி, தந்தை கோவர்தனனுக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், தங்களுக்கும் பிடிபட்ட பணத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை எனவும், தந்தை உடல்நிலை சரியான பிறகு அவர் விசாரணைக்கு ஆஜரானார் என எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்றனர்.

இதற்கிடையே, நயினார் நாகேந்திரனுக்காகப் பணம் கொண்டு செல்லும் தகவலை தேர்தல் பறக்கும்படையினரிடம் சொன்னது பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலைதான் என்கிற குற்றச்சாட்டு அரசியல் உயர்மட்டங்களில் கமுக்கமாகப் பேசப்பட்டுவருகிறது.

பாஜக தில்லி தலைமையிடம் நயினார் நாகேந்திரன் மிகுந்த நற்பெயர் பெற்றுவருவதாகவும் அதனால் தன் பதவிக்குச் சிக்கல் வரலாம் என்பதாலேயே நயினார் நாகேந்திரன் பற்றி அண்ணாமலை தரப்பு துப்பு கொடுத்ததாகவும் பேசப்படுகிறது.

Leave a Response