அதிமுக உட்கட்சிச் சிக்கல் – பஞ்சாயத்து செய்த மோடி

சென்னையில் நடந்த அரசு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி நேற்று மாலை வந்தார். விமானநிலையத்தில் அமைச்சர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வரவேற்றார். அதிமுக சார்பில் அவர் மட்டுமே கலந்து கொண்டார்.

இந்தநிலையில், விழா முடிந்து இரவு 8.10 மணிக்கு சென்னை விமானநிலையத்துக்கு மோடி வந்தார். பின்னர் விஐபிக்களுக்கான அறையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார் ஆகியோர் மோடியை தனியாகச் சந்தித்துப் பேசியுள்ளனர்.

சுமார் ஒரு மணி நேரம் அவர்களுடன் மோடி ஆலோசனை நடத்தியதாகச் சொல்லப்படுகிறது.

இந்த ஆலோசனையின்போது கடந்த சில நாட்களாக எடப்பாடி பழனிச்சாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் குறித்து மத்திய உளவுத்துறை அனுப்பிய அறிக்கையின் அடிப்படையில் விசாரித்ததாகவௌம் இருவரும் மோதிக் கொள்வதால், கட்சி தேய்ந்து விட்டது. நீங்கள் ஒன்றிணையாவிட்டால், கட்சி காணாமல் போகும் என்று மோடி எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.அதோடு, மற்றொருபுரம் சசிகலா தனியாக அதிமுக நிர்வாகிகளை இழுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்கிறார். இதனால் கட்சிக்குள் மேலும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நீங்கள் எல்லோரும் ஒன்றிணையவேண்டும் என்று மோடி சொன்னாராம்.

மோடியைச் சந்தித்த 5 பேரில், எடப்பாடி பழனிச்சாமி உள்பட 4 பேரும் ஒரே அணியைச் சேர்ந்தவர்கள்.
அதனால் சசிகலாவைக் கட்சியில் சேர்த்தால் தேவையில்லாத பிரச்னைதான் உருவாகும். கட்சியில் தற்போது 2 கோஷ்டி இருப்பது, 3 கோஷ்டியாக மாறிவிடும். அவரைக் கட்சியில் சேர்க்காமல், அரசியலை விட்டே ஒதுங்கச் செய்தால் நன்றாக இருக்கும் என்று கூறியதாகக் கூறப்படுகிறது.

ஆனாலும் அதிமுக வலுவாக இருக்கவேண்டுமெனில் நீங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றவேண்டும் என்று வற்புறுத்திவிட்டுச் சென்றதாகச் சொல்கிறார்கள்.

எது எப்படியோ? தமிழ்நாட்டில் வலிமையாக இருக்கவேண்டிய அதிமுகவை இவர்களே தில்லியில் அடகுவைக்கிறார்கள் என்கிற விமர்சனமும் பரவலாக இருக்கிறது.

Leave a Response