இராகுல் பிரதமராக 54 விழுக்காடு ஆதரவு மோடிக்கு 32 – கருத்துக்கணிப்பு தகவலால் பாஜக அதிர்ச்சி

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நிறைவுற்று ஓராண்டு கடந்துவிட்டது. இந்த ஓராண்டில் இம்மாநிலங்களில் பதவி வகிக்கும் முதலமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் தொடர்பாக ஐ.ஏ.என்.எஸ் சார்பாக சி வோட்டர் நிறுவனம், அண்மையில் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது.

இந்தக் கருத்துக்கணிப்பில் தமிழ்நாடு அரசின் செயல்பாட்டில் 30 விழுக்காடு பேர் முழு திருப்தியையும் 51 விழுக்காடு பேர் சிலவற்றில் திருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர். அதேநேரம், மாநில அரசின் செயல்பாட்டில் திருப்தியில்லை என, 17 விழுக்காடு பேர் தெரிவித்துள்ளனர். அடுத்ததாக, மாநில முதலமைச்சராக மு.க.ஸ்டாலினின் செயல்பாடு குறித்து 41 விழுக்காடு பேர் திருப்தி தெரிவித்துள்ளனர். 44 விழுக்காடு பேர் ஓரளவு மட்டுமே திருப்தியடைந்துள்ளதாகவும் 13 விழுக்காடு பேர் முதலமைச்சராக ஸ்டாலினின் செயல்பாடு அதிருப்தி அளிப்பதாகவும் கூறியுள்ளனர்.

அசாம் முதலமைச்சரான ஹிமாந்த பிஸ்வா சர்மாவின் செயல்பாடு சிறப்பாக உள்ளதாக 43 விழுக்காட்டினருக்கும் அதிகமானோரும், கேரள முதல்வர் பினராயி விஜயனின் செயல்பாடு திருப்தியளிப்பதாக 41 விழுக்காடு பேரும் கூறியுள்ளனர். மேற்கு வங்க முதலமைச்சராக மம்தா பானர்ஜியின் செயல்பாடு மிகவும் திருப்தியளிப்பதாக 39 விழுக்காடு பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

அடுத்ததாக, தமிழ்நாட்டில் பிரதமர் நரேந்திர மோதிக்கு அதிக வரவேற்பு கிடைக்காததும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக, பதில் அளித்தவர்களில் 40 விழுக்காடு பேர் பிரதமரின் செயல்பாடு திருப்தியளிக்கவில்லை எனக் கூறியுள்ளனர். 17 விழுக்காடு பேர் முழு திருப்தியில் உள்ளதாகவும் 40 விழுக்காடு பேர் ஓரளவு திருப்தி அளிப்பதாகவும் கூறியுள்ளனர்.

அதேநேரம், இராகுல் காந்திக்கு தமிழ்நாடு அதிக மதிப்பெண் கொடுத்துள்ளதாகவும் சி வோட்டர் தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் பிரதமர் பதவிக்கு யார் பொருத்தம்? என்ற கேள்விக்கு இராகுல் காந்திக்கு ஆதரவாக 54 விழுக்காடு பேரும், நரேந்திர மோதிக்கு ஆதரவாக 32 விழுக்காடு பேரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இக்கருத்துக் கணிப்பு பாஜகவினருக்கு அதிர்ச்சியளிப்பதாக அமைந்துள்ளது என்கிறார்கள்.

Leave a Response