மக்களை ஏமாற்றாதீர்கள் – மோடிக்கு இராகுல் வேண்டுகோள்

இந்தியாவில் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்ததில் இருந்தே தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. இதனால் வரலாறு காணாதவகையில் பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை எட்டியது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.120 க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.100 க்கு மேல் விற்பனையானது. இந்த வரலாறு காணாத விலை ஏற்றத்தால் சமான்ய மக்கள் கடும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.

இந்த கடும் விலை உயர்வால், காய்கறி உள்ளிட்ட பொதுமக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்த்துள்ளது. மேலும் வீட்டு உபயோக எரிவாயு உருளை விலையும் ஆயிரம் ரூபாயைக் கடந்துள்ளது. அதேபோல் எண்ணெய் விலையும் உச்சத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.8ம், டீசல் மீதான கலால் வரி ரூ.6ம் குறைக்கப்பட்டுள்ளது என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மே 21 ஆம் தேதி அறிவித்தார். ஒன்றிய அரசின் இந்த முடிவால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.50 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறைந்துள்ளது.

இதையடுத்து ஒன்றிய அரசின் பெட்ரோல், டீசல் விலை குறைப்பிற்கு எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். அதிகமாக விலையை உயர்திவிட்டு ரூ. 9 மட்டும் விலையை குறைத்தால், மக்கள் உங்களை நம்பமாட்டார்கள் என விமர்சித்துள்ளனர்.

இந்நிலையில், மக்களை முட்டாளாக்கும் போக்கை ஒன்றிய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என காங்கிரசுக் கட்சியின் தலைவர் இராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில்,

2020 ஆம் ஆண்டு மே 21 இல் ரூ.69.05 ஆக இருந்த விலை நடப்பு ஆண்டில் இதே தேதியில் ரூ.105.4 ஆக உயர்ந்தது. 2020 மார்ச் 1 ஆம் தேதி ரூ.95.04 ஆக விற்பனையான பெட்ரோல், 2022 மே 21 ஆம் தேதி ரூ.105.4 ஆகவும், தற்போது மே 22 இல் ரூ.96.07க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல் விலை மீண்டும் நாள்தோறும் ரூ.0.8 மற்றும் ரூ.0.3 என்ற அளவில் உயரலாம். பணவீக்கத்திலிருந்து உண்மையான நிவாரணம் பெறுவதற்கு மக்கள் தகுதியானார்கள். மக்களை முட்டாளாக்கும் போக்கை ஒன்றிய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response