பாவலர் அறிவுமதியின் பாரி – உயிர்நேய உச்சம்

முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி என்கிற வாசல் நுழைந்து பாரியைத் தேடிப்போனால் அவர்
முன்னூறு கிராமங்களை மட்டுமே ஆண்ட குறுநில மன்னர் அதேநேரம் சேர சோழ பாண்டியர் ஆகிய மூவேந்தர்களையும் எதிர்த்தவர்,போரின்போது முன்னூறு கிராமங்களையும் மக்களுக்கே கொடுத்து தோல்வியையே தோல்வியுறச் செய்தவர் என்கிற வியப்புத் தகவல்களெல்லாம் வரிசைகட்டி நின்றன.

மிகநீண்ட இடைவெளிக்குப் பிறகு பாவலர் அறிவுமதி மீண்டும் பாரியைக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார்.

பல்லாண்டுகளாக பாரி குறித்து ஆய்ந்து ஆய்ந்து அவர் படைத்திருக்கும் பெருவிருந்தை உட்கொள்ளும் பேறுபெற்றேன்.

சங்க இலக்கியச் சான்றுகளுடன் அவர் எடுத்துரைத்திருக்கும் ஒவ்வொரு சொல்லும் பெருமிதத்தால் நெஞ்சம் விம்மச் செய்யும் பெருஞ்சொற்கள்.

முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி என்கிற பெருமைக்கு,ஏன் கொடுத்தான் பாரி? என்றொரு வினாவை எழுப்பி அவர் பகர்ந்திருக்கும் விடைகள் அண்ணாந்து பார்த்து மலைக்குமளவு விண்ணேறி நிற்கின்றன.

தேர்க்கால்கள் பட்டு உயிர்விட்ட பச்சையங்களைப் பற்றிப் பேசி பச்சைப்படுகொலைகள் என ஏசி,அடுத்த அடி எடுத்து வைக்க யோசிக்க வைத்திருக்கிறார்.

அடர்ந்த புல்தரையில் வெறுங்காலில் நடந்தால் தடம் உருவாகும் என்ற பெரியவர்களின்
பேச்சைக் கேட்டு ஒரே நேர்க்கோட்டில் நடந்து நடந்து ஒரு பாதையை உருவாக்கி இது என் தடம் என்று பெருமிதம் பேசிய முற்காலம் நினைவு வந்தது.அவ்வளவு புற்களைக் கொன்றுவிட்டு பெருமை வேறா? என்று பிரம்பெடுத்திருக்கிறார் பாவலர்.

வண்டுகளின் வாழ்விணைய தன் இணையைக் காண தாமதம் செய்த மறவர்கள் பற்றிய பாடலும் பாவலரின் இனிந்துரையும் என் இனமடா? என இறும்பூதெய்த வைத்திருக்கிறது.

முதல் தமிழ்நாடு மூவேந்தரும் சேர்ந்து வந்ததே முதன்மை என்பன உட்பட ஒவ்வொரு கருத்தும் உலகளவு.

சங்ககாலப் பாடல்கள் சங்கம் வளர்த்த மதுரை எல்லாம் அன்றும் இன்றும் இங்குதானிருக்கின்றன.அவற்றுக்குள் உள்நுழைந்து உள்நுழைந்து எல்லா உயிர்களும் உயிர்களே என்கிற உன்னதம் பேசிய பாடல்களைத் தேடித் தேடி எடுத்து வந்து திகட்டத் திகட்டப் பரிமாறியிருக்கும் பாவலர் அறிவுமதி நிகழ்காலத் தமிழ்வேந்தர்.தமிழின விழுமிய பா ஆட்சியில் பரவசமடைய வைத்திருக்கும் அவருக்கு நெஞ்சம் நெகிழ் தமிழ் வணக்கங்கள்.

– அ.தமிழன்பன்

இந்த பைந்தமிழ் ‘பாரி’ நூல் பெற…..

குமிழ்முனை சைமன்
அண்ணாநகர்
தூத்துக்குடி 638004
9363090284

Leave a Response