கலைஞர் புகழ் வணக்க நிகழ்வில் பாவலர் அறிவுமதி உரை – முழுமையாக

மதுரையில் கலைஞர் மு.கருணாநிதிக்கு இலக்கியவாதிகள் புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி ஆகஸ்ட் 19 அன்று நடைபெற்றது.

நிகழ்வில் பாவலர் அறிவுமதி, சா.கந்தசாமி, கலாப்ரியா, எஸ்.ராமகிருஷ்ணன், அருள்மொழி, வாசந்தி, மு,மேத்தா, பா.விஜய், சு.வெங்கடேசன்,இமையம்,காஜாகனி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

பாவலர் அறிவுமதியின் உரையில்…..

இன்றைய செய்தி நாளைய வரலாறு

என்ற தலைவர்

நேற்றைய செய்தி இன்றைய வரலாறாக மாறி இருக்கிற இந்தக்கண்ணீர் தருணத்தில்…

எழுத்தாளர்களாகிய நாங்கள் எங்கள் தமிழைத் தர இங்கே வரிசைகட்டி அமர்ந்திருக்கிறோம்

நான் அதிக நேரம் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை

எனக்கு திராவிட இயக்கம் திமு கழகம் என்ன தந்தது என்பதைச் சொல்லவேண்டும்

நான் வீராணம் ஏரிக்கரையில் வாழைக்கொல்லை என்ற ஊரில் என் அம்மாவைப் பெற்றவன்.
வெள்ளிமலையிலிருந்து கச்சிராபாளையம் வழியே இறங்கி வருகிற மணிமுத்தாற்றங்கரையில் அப்பாவைப் பெற்றவன்.

அங்கேயும் எங்கள் உறவுகள் உங்கள் உறவுகள்
என் ஊரிலும் எம் சு.கீனனூர் எனும் அந்த மக்கள் உங்கள் மக்கள்

எனவே இந்த இடத்தில் என் வரலாற்றைச் சொல்லுகிறபோது அது நம் கழக வரலாறாகவும் இருப்பதை நீங்கள் உணர்வீர்கள்

என் அப்பாவுக்கும் என் அம்மாவுக்கும் நான்கு குழந்தைகள். நான் கடைசிப் பிள்ளை.என் உடன் பிறந்தார்களுக்குக் கிடைக்காதது எனக்குக் கிடைத்தது.

என் பெரியக்காவுக்குப் பெயர் ருக்குமணி

என் சின்னக்காவுக்குப் பெயர் சீதா

என் அண்ணனுக்குப் பெயர் இராமசாமி. எனக்குக் கிடைத்த பெயர் மதியழகன்

என் இரண்டு அக்காள்களுக்கும் என் அண்ணனுக்கும் புராணப்பெயர்கள் எனக்கு வரலாற்றில் கிடைத்த தமிழ்ப்பெயராக வரலாறு.

1949இல் நான் பிறந்தேன். அதே ஆண்டு திமுகழகம் பிறந்தது. எனவே கழகத்தின் வரலாறும் என் வரலாறும் வெவ்வேறானது அல்ல.

தாய்மொழி தமிழில் என் தாய்க்கு சாகிற வரை கையெழுத்து போடத்தெரியாது

இப்படி இங்கே அமர்ந்திருக்கிற பலபேரும் இத்தகைய அம்மாக்களுக்குப் பிறந்தவர்களாக இருக்கலாம்.

நான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிற போது நான் எழுதுகிற கடிதங்களை என் அம்மா படிக்கமுடியாது. தெருவில் போகிற படித்த பையன்களைக் கூப்பிட்டுப் படிக்கச்சொல்லி அந்தத் தமிழில் மகனின் முகம் பார்த்த அம்மா என் அம்மா

எனவே திராவிட இயக்கத்தின் வரலாறு என்பது கைநாட்டுப் பேர்வழிகளை கையெழுத்தாக்கிய வரலாறு என்பதை மறந்துவிடாதீர்கள்

இதை எத்தனை மேடைகளில் ஏற்றி என்னைச் சொல்லச் சொன்னாலும் சொல்லுவேன் எனக்குத் தமிழைக் கொடுத்தது திராவிட இயக்கம் திராவிட இயக்கம் என்பதை அழுத்திச்சொல்லுவேன்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்த நாவலராக இருந்தாலும் பேராசிரியராக இருந்தாலும் மதியழகனாக இருந்தாலும் இவர்களெல்லாம் ஒவ்வொரு திருமணத்திற்கும் ஈருருளியில் போய் அல்லது நடந்து போய் திருமணங்களை நடத்தி வைத்த பட்டதாரிகள்

அவர்களுக்குச் சற்றும் குறைவில்லாத அதிகம் படிக்காத ஐயா கலைஞர் அவர்கள் அவர்களையெல்லாம் தாண்டி தன்னுடைய வாழ்க்கையின் நீளத்தில் தமிழின் நீளத்தையும் தமிழ் வரலாற்றின் நீளத்தையும் நமக்கு உழைத்துக் கொடுத்தவர் கலைஞர் அவர்கள்.

ஒரு நிகழ்ச்சி…

ஒரு நாள் என்னுடைய தந்தை அவர், 1949இல் கட்டிய கழகக்கொட்டாயை வள்ளுவர் படிப்பகமாக வைத்து நடத்தியவர், அதில் கிடைத்த ஒவ்வொரு தலைவர்களும் பேச்சாளர்களாக இருந்தார்கள். ஒவ்வொரு பத்திரிக்கைகளுக்கும் சொந்தக்காரர்களாக இருந்தார்கள்

என்னுடைய வீட்டில் பத்துப் பதினைந்து பத்திரிகைகள் எனது தந்தை படித்துக் கொண்டிருப்பார் அந்த வள்ளுவர் படிப்பகத்தில் இருந்த நூல்கள்தாம் என்னை இங்கு
இன உணர்வுக் கவிஞனாக நிறுத்தி வைத்திருக்கிறது.

இந்தச்சூழ்நிலையில் ஒரு நாள் என் தந்தை, வாங்க திரைப்படம் பார்க்கப் போகலாம் என்று விருத்தாசலத்திற்கு அழைத்துச் சென்றார்.எட்டு மைல் நடந்தே செல்கிறோம்.

அந்த ஊரில் தங்கமணி பேலஸ் என்கிற திரையரங்கில் படம் பார்க்கப் போனால், அங்கே மின்சாரம் இல்லை.
செயற்கை மின்சாரமும் இல்லை.

படம் மன்னாதி மன்னன் என்று நினைக்கிறேன் எம்ஜிஆர் படம்.

அதற்கடுத்து, வாங்க வீட்டுக்குப் போகலாம் என்கிறார்.

இல்லையப்பா ராசேசுவரி என்கிற திரையரங்கு இருக்கிறது அங்கே படம் பார்க்கச் செல்லலாம் என்கிறோம் நானும் என் அண்ணனும்.

என்ன படம் ஓடுகிறது? என்று கேட்கிறார்.

ஆலயமணி என்கிறோம்.

முடியாது அந்தப்படம் பார்க்க உங்களைக் கூட்டிப்போக மாட்டேன் வாங்க வீட்டுக்குப் போகலாம் என்று அழைக்கிறார்.

ஏனப்பா எங்களுக்குப் படம்தானே பார்க்க வேண்டும் அந்தப்படம் இல்லையென்றால் என்ன இந்தப்படம் பார்க்கிறோம் என்று சொல்லுகிறோம்.

இல்லை இல்லை அது சிவாஜி அவர்கள் நடித்த படம் அதை உங்களுக்குக் காட்ட மாட்டேன் என்று சொல்லி, எங்களுக்குப் பட்டாணி வாங்கிக் கொடுத்து விருதாச்சலத்திலிருந்து சு.கீனனூர் அழைத்துப் போனவர் என் அப்பா.

அதற்கடுத்து கொஞ்ச நாட்கள் கழித்து சேத்தியாத்தோப்பில் அன்பு அச்சகம் வைத்திருந்த என் கணபதி அண்ணன் கடையில் இருந்து, ஒரு ஆளை அனுப்பி படம் பார்க்க இரண்டு பேரையும் அழைத்து வாருங்கள் என்று என்னையும் என் அண்ணனையும் அழைத்து வரச்சொல்கிறார்

சேத்தியாத்தோப்பிற்குப் போகிறோம் அங்கே போய் வாசவி திரையரங்கில் பார்த்தால் வாசலில் சிவாஜி அவர்களுடைய சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது

என்னப்பா எட்டு மைல் நடத்திட்டுப் போய் எங்களை சிவாஜி படம் பார்க்கக்கூடாது என்று திருப்பி நடத்தி அழைச்சிட்டு வந்தீங்க இன்னைக்கு அவர் படத்திற்குதான் கூட்டி வந்திருக்கீங்க? என்று கேட்டவுடன்

என் தலைவர் கலைஞர் எழுதிய உரையாடல் எழுதிய படம் என்றார். அந்தப்படம் பராசக்தி.

இந்த நிகழ்விலிருந்து, திராவிட முன்னேற்றக்கழகம் என்பது தலைவர்களின் இயக்கம் அன்று,அது தொண்டர்களின் இயக்கம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்

அவர்கள் கொள்கை மாறாதவர்கள் தமிழ்ப்பற்றில் என்றைக்கும் இடம் மாறாதவர்கள், அப்படி ஒரு அப்பாவிற்குப் பிறந்த பிள்ளை நான்.

குமரியிலே 133 அடியில் திருவள்ளுவருக்குச் சிலை திறக்கிற அந்தச் சூழலில் ஐயா அவர்களுக்கு நான் ஒரு மடல் எழுதுகிறேன்.

ஐயா உங்கள் பிள்ளை அறிவுமதி பேசுகிறேன் ஒரு கற்புக்கெடாத திமுக செயலாளரின் பிள்ளை. 1949இல் என் தந்தை திறந்த திமு கழக கொட்டகை வள்ளுவப் படிப்பகமாக இருந்ததால்தான் நான் இன்றைக்கு உங்கள் தமிழ் விரல் பிடித்து ஒரு கவிஞனாக ஒரு எழுத்தாளனாக ஒரு இன உணர்வு மிக்கவனாக இருக்கிறேன்.

நீங்கள் நாளை கன்னியாகுமரியில் சிலை திறக்கிற நேரத்தில் ஒரு 1330 ஊர்களில் வள்ளுவர் படிப்பகம் திறக்கிறேன் என்று அறிவித்தால் என்னைப் போன்று ஆயிரம் அறிவுமதிகளை அந்தந்த ஊரில் நீங்கள் உருவாக்கலாம் என்று ஒரு தொண்டனின் பிள்ளையாக நான் மடல் எழுதுகிறேன்.

கடிதம் படித்தவர், என்னடா அறிவுமதி 1330 ஊர்களை மட்டும் கேட்கிறாய், தமிழகத்தின் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் அய்யன் வள்ளுவர் படிப்பகம் திறப்பேன் என்று அறிவித்தார்.

ஒரு தொண்டனின் பிள்ளையின் சின்ன மடலுக்கு அந்தத் தமிழ் உணர்வுக்கு மதிப்பு தந்தவர்.

நான் அவரைப்பற்றி ஒரு 150 பக்கத்தில் எழுதக்கூடிய செய்திகள் இருக்கின்றன இந்த இடத்தில் நான் அதிகம் பதிவு செய்ய இயலாது. ஏனென்றால் நான் அவரிடத்தில் கோபமாகவும் எழுதியிருக்கிறேன்.

“சூரியனே உனக்குச் சூடு இல்லையா”
என்றும் எழுதியிருக்கிறேன். ஆனால் அதற்காக என்னை அவர் கோபித்துக் கொண்டதில்லை.

அதற்கடுத்து நான் ஒரு சிறுகதைத் தொகுப்பை அனுப்பினேன். அதற்கு முரசொலி அலுவலகத்தில் மடல் எழுதி. பக்கத்துத் தெருவில்தான் அபிபுல்லா சாலையில் தான் தம்பி அறிவுமதியுடைய அலுவலகம் அவர் கையிலேயே கொடுத்துவிடு என்று ஓட்டுநரிடம் கொடுத்து அனுப்பினார்.

தம்பியின் கையில் கொடுத்து விட்டு வரவேண்டுமென்று பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு போகவேண்டிய சூழலிலும் ஒரு எழுத்தாளனை
சக இலக்கியவாதியை மதித்து ஒரு பிள்ளையை தாயாக மதித்த அந்த தன்மை.

உங்களுக்குத் தெரியும்,
பொங்கலுக்கு நீங்கள் நான்கு நாட்கள் விடுமுறை கொடுத்தீர்கள் திமுக ஆட்சியில்,
அதை நுட்பமாக உணர்ந்தவர்கள் அதில் இரண்டு நாட்களை பிடுங்கிக் கொண்டார்கள்

அதற்கடுத்து கலைஞர் முதல்வராகிறார் இரண்டு மூன்று நாட்களில் நான் ஒரு மடல் எழுதுகிறேன்

ஐயா உங்கள் ஆட்சியில் பொங்கலை ஒட்டிய தமிழ் நாட்களுக்கு நான்கு நாட்கள் விடுமுறை கொடுத்தீர்கள் அதனால் பல ஊர்களிலிருந்து சேரிகளிலிருந்து நகரம் சார்ந்து வாழப் புறப்பட்டவர்கள் தங்கள் பிள்ளைகளை அந்த நான்கு நாட்களில் ஊர்களுக்கு அழைத்துப்போய்

உங்கள் தாத்தா வீடு இது, நாங்கள் நீச்சல் அடித்த குளம் இது, ஏரி இது, ஆறு இது,இது மாடு,
இது ஆடு என்று தமிழ் அடையாளங்களை ஊட்டிக்கொண்டு வருகிற நாட்களாக அந்த நான்கு நாட்கள் திமுக ஆட்சியில் பயன்பட்டது

அதை உணர்ந்தவர்கள் விடுமுறையில் தங்கள் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு போகாத வண்ணம் ஒரு சூழ்ச்சியில் இரண்டு நாட்களைப் பிடுங்கி விட்டார்கள் இறையன்பு போன்ற அதிகாரிகளைக் கேட்டு அந்த இரண்டு நாட்களை மீண்டும் தந்தால் நன்றாக இருக்கும் என்று

காலை 8 மணிக்கு சண்முகநாதன் அண்ணனிடம் எனது மடல் சேர்க்கப்பட்டது இரவு 7.30க்கு அரசு அதிகாரமாக நான்கு நாட்கள் மீண்டும் கலைஞரால் தரப்பட்டது

ஆனால் அடுத்த ஆட்சி மாறிற்று. இரண்டு வாரங்களில் அந்த இரண்டு நாட்கள் மறுபடியும் பிடுங்கப்பட்டது.

செயல்தலைவருக்கும் கனிமொழிக்கும் சொல்லுவது, இதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

வள்ளுவர்கோட்டம் இப்போது வள்ளுவரின் பெருமையைச் சொல்லுகிற இடமாக இல்லை, வடநாட்டுக்காரர்கள் வந்து துணி விற்பனை செய்கிற இடமாக மாற்றப்பட்டிருக்கிறது

ஆட்சி மாறுகிறபோது அந்த அறிவாலயம், கலைஞர் பார்த்து மகிழுகிற அந்த வள்ளுவர்கோட்டம் அழகு பெற வேண்டும், பொலிவு பெற வேண்டும்.

அதைப்போலவே குமரிமுனையில் இருக்கிற 133அடி சிலை. விவேகானந்தர் பாறைக்கு கப்பல் போகிறது, படகு போகிறது, அதுபற்றி நமக்குக் கவலையில்லை. அதில் விருப்பப்பட்டவர்கள் அதைப்போய்ப் பார்க்கட்டும். பார்ப்பது சரி.

ஆனால் அதில் போகிற படகோட்டிகள் வள்ளுவர் சிலையைப் பார்க்க வரும் வெளிநாட்டுத் தமிழர்களை அழைத்துப்போக மாட்டேன் என்று சொல்லுகிறார்கள் என்று குற்றச்சாட்டு வைக்கிறார்கள்

இதுவெல்லாம் உள்ளாக உள்ளாக நடக்கிற சூழ்ச்சிகள்.

ஒரு வேதனை, 1330 ஊராட்சி ஒன்றியங்களுக்கு நான் வள்ளுவர் படிப்பகம் கேட்டேன் அனைத்து ஊர்களிலும் வள்ளுவருக்கு நான் இடம் தருகிறேன் என்று சொன்னார் கலைஞர்.

ஆனால், அவருக்கு ஆறடி கொடுக்க அவர்கள் அழுதார்கள். பரவாயில்லை, அப்படியாவது அவர்கள் அந்தத் தலைவருக்கு அழுதிருக்கிறார்கள் நன்றி சொல்லுவோம்.

அந்த வெளியீட்டு மலரில் நான் எழுதிய கவிதை ஒன்று
“இரண்டு அடி கொடுத்தால்தான் தானே திருந்துவாய் வாங்கிக்கொள் வள்ளுவனிடம்” என்று எழுதினேன்

எத்தனை முறை புறை ஊற்றிப்பார்த்தாலும் புளிக்காத பால் முப்பால் என்று எழுதினேன்.

அத்தகைய வள்ளுவனுக்குச் சிலை எடுத்து அவர் பேசிய அந்தப்பேச்சை இப்போது கேளுங்கள். வள்ளுவன் மீது அந்தத் தலைவன் எவ்வளவு உள்ளார்ந்த அன்பு வைத்திருந்தார். அப்படியே களுக்கென்று அதில் ஒரு முறை அழுதிருப்பார். அவ்வளவு ஆழமாக வள்ளுவன் மீதும் இளங்கோ மீதும் சங்கத்தமிழ் மீதும் வைத்திருந்த அன்பு சாதாரண அன்பல்ல.

எனவே தொண்டர்களே இந்த இடத்தில் நாம் தவறினால், திமு கழகத்தை ஸ்டாலின் அவர்களை நாம் இங்கே அமர வைக்க வேண்டிய இடத்தில் அமர வைக்க வேண்டும் என்று கொளத்தூர் மணி என்ற என் அண்ணன் சொன்னதை நான் உள்வாங்கிக்கொண்டு சொல்கிறேன்.

நமக்குள்ளாக ஆயிரம் முரண்பாடுகள் இருக்கலாம் விமர்சனங்கள் இருக்கலாம் அவற்றையெல்லாம் தாண்டி இப்போது நம்மைக் கழுகுகள் சூழ்ந்து இருக்கிற நேரம்.

இந்த இடத்தில் தமிழர்கள் நாம் நம்முடைய உணர்வுகளை அங்கே கடற்கரையில் அண்ணாவிடத்திலும் கலைஞரிடத்திலும் தொண்டர்கள் நீங்கள் பெருகிற அதே நேரத்தில், அந்த இயக்கத்தை வழி நடத்துகின்ற முன்னோடிகளாக நீங்கள் தயவுசெய்து ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நம் தமிழ் உணர்வுப் பிள்ளைகள் கைப்பேசியில் காட்டிய வெளிச்சத்தின் எச்சரிக்கையையும் உணர்ந்து உங்களுடைய இயக்கச் செயல்பாடுகளை நீங்கள் விழிப்போடு கொண்டுவாருங்கள்.

இளைஞர்களுடைய இயக்கமாக இது இப்போது மாறியிருக்கிறது. அதற்குரிய தமிழ் உணர்வும்,
இன உணர்வும் மிக்க ஒரு மிகச்சிறந்த செயல்பாடுகள். ஓடி ஓடி உழைக்க வேண்டிய நேரம் உங்களிடத்தில் இருக்கிறது.

எல்லோருக்கும் விபத்து மயிரிழையில் தமிழர்களுக்கு விபத்து நூலிழையில். எச்சரிக்கை எச்சரிக்கை.

வணக்கம்.

இவ்வாறு அறிவுமதி உரையாற்றினார்.

– தொகுப்பு – அ.தமிழ்ச்செல்வன்

Leave a Response