நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதனின் அத்துமீறிய செயல்கள் – பெ.சண்முகம் கண்டனம்

மதுரை திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் வீரர்களை அழைத்துச் செல்ல உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன், நீதிபதியாக நீடிக்கத் தகுதி இல்லாதவர் என்று சிபிஎம் தமிழ்நாடு செயலாளர் பெ.சண்முகம் கடுமையாகச் சாடியுள்ளார்.

இது தொடர்பாக பெ.சண்முகம் கூறியுள்ளதாவது….

திருப்பரங்குன்றத்தில் இன்றைய தினம் (டிசம்பர் 3,2025) வழக்கமாக தீபம் ஏற்றப்படும் இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டுள்ளது. இத்தகைய உறுதியான முயற்சியை எடுத்த தமிழ்நாடு அரசுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இத்தகைய நிலையில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன், புதியதாக ஒரு இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அந்த இடத்தில் தீபத்தை ஏற்றுவதற்கு பாதுகாப்பாக உயர்நீதிமன்ற காவல் பணியில் இருக்கக் கூடிய மத்திய பாதுகாப்புப் படையை (CISF) பயன்படுத்த வேண்டும் என நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டிருப்பது என்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

அந்த மத்திய காவல் படையைச் சேர்ந்தவர்கள்- நீதிமன்றக் காவல்பணிக்கு வந்தவர்கள்; அவர்களை வேறு பணிகளில் ஈடுபடுத்துவது என்பது ஒரு அத்துமீறிய செயல்.

நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன், மாநில அரசுடன் மோதல் போக்கைக் கடைபிடிக்கும் வகையில்தான் இத்தகைய உத்தரவைப் பிறப்பித்துள்ளார். கார்த்திகை தீபத்தை ஏற்றவேண்டும் என்பதுதான் எல்லா மக்களது விருப்பம். ஆனால் குறிப்பிட்ட ஒரு இடத்தில்தான் ஏற்றவேண்டும் என பிடிவாதம் பிடிப்பது யாராலும் ஏற்கத்தக்கது அல்ல.

ஆகையால் ஜிஆர் சுவாமிநாதன், நீதிபதியாக நீடிக்கவே தகுதியற்றவர்; இப்படி மக்கள் மத்தியில் மோதலையும் மத்திய காவல் படையினருக்கும் மாநில அரசுக்கும் இடையே மோதலையும் உருவாக்கும் வகையில் உத்தரவை வெளியிட்டிருக்கும் ஜிஆர் சுவாமிநாதன் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்; நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு உடனடியாக தடை விதிக்கவேண்டும்.

திருப்பரங்குன்றம் அமைதியாக இருப்பதற்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காமல் இருக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உடனடியாக இதில் தலையிட வேண்டும். நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனின் இத்தகைய அத்துமீறலுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உறுதியான நிலைப்பாட்டை எடுக்கவேண்டும். தமிழ்நாடு அரசுக்கு மார்க்சிஸ்ட் கட்சி, தமிழ்நாட்டு மக்கள் துணை நிற்பார்கள். நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனின் அடாவடித்தனமான அத்துமீறலை அனுமதிக்க முடியாது.

இவ்வாறு பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

Leave a Response