
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் மு.வீரபாண்டியன்,நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது….
ஒன்றிய, மாநில தனியார் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஒன்றிய அரசிடம் மட்டுமே இருக்கும் வகையில் சட்ட வரைவு தயாரிக்கப்பட்டிருப்பது மாநில உரிமைகள் மீது தொடுக்கப்படும் தாக்குதலாகும்.
ஆளுநரின் தவறான செய்கைகளுக்கு நாட்டின் குடியரசுத் தலைவரும் துணை போவது அதிர்ச்சியளிக்கிறது.
இலங்கையில் தமிழர்களுக்குப் பயன் கிடைக்கும் வகையில் கூட்டாட்சி முறையிலான அதிகாரப் பகிர்வு உறுதி செய்யப்பட வேண்டும்.
இந்தியப் பொருட்கள் மீது அமெரிக்கா விதித்த 500 சதவீத வரி விதிப்பால் திருப்பூர், கோவை போன்ற தொழில் நகரங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும். இதைக் கண்டித்து கோவை, திருப்பூர், ஈரோடு, சென்னையில் சனவரி 23 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
மேலும், புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் உட்பட தொழிலாளர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ஒன்றிய அரசைக் கண்டித்து பிப்ரவரி 12 ஆம் தேதி நடைபெறவுள்ள அனைத்துத் தொழிற்சங்கப்
பொது வேலைநிறுத்தத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவளிக்கும்.
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கு மலையேற விருப்பம் இருக்கிறது என்றால் இமயமலைக்குச் சென்று பயிற்சி எடுத்து, இமயமலையில் ஏறி இறங்கலாம்.ஏன் திருப்பரங்குன்றத்தில் மட்டும் ஏற நினைக்கிறார்? அமைதிக்கு எதிரான இந்த பதற்றஅரசியல் அவர்களுக்குக் கைகொடுக்காது. தமிழ்நாட்டின் ஆட்டமே வேறு.
இவ்வாறு அவர் கூறியுள்ளர்.


