டிரம்ப் அடாவடி – இந்திய வர்த்தகத்துக்குப் பின்னடைவு

ஈரான் நாட்டில், ஷியா மதத் தலைவர் அயத்துல்லா அலி காமேனி தலைமையிலான ஈரான் அரசுக்கு எதிராக கடந்த டிசம்பர் முதல் பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஈரான் அரசுக்கு எதிராகப் போராடும் மக்களுக்கு உதவ அமெரிக்கா தயாராக இருக்கிறது என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் அண்மையில் பகிரங்கமாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது வான் வழி தாக்குதல் நடத்தக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அணு குண்டுகளைத் தயாரிக்க ஈரான் தீவிர முயற்சி செய்வதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. இதன் காரணமாக ஈரான் மீது அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இதனால் ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

இந்தச் சூழலில்,சனவரி 12 ஆம் தேதி, ட்ரம்ப் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகளுக்கு கூடுதலாக 25% வரி விதிக்கப்பட்டுள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

இப்போது ரஷ்யா, சீனா, இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்தியாவில் இருந்து பாசுமதி அரிசி, தேநீர், சர்க்கரை, மருந்துகள், நகைகள், மின் சாதனப் பொருட்கள் உள்ளிட்டவை ஈரானுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஈரானில் இருந்து உலர் பழங்கள், இரசாயனங்கள் உள்ளிட்டவை இறக்குமதி செய்யப்படுகிறது.

இந்தியாவில் இருந்து ஈரானுக்கு ஆண்டுதோறும் 12 இலட்சம் டன் பாசுமதி அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன்படி சுமார் ரூ.12,000 கோடிக்கு வர்த்தகம் நடைபெறுகிறது. அமெரிக்க அரசின் கூடுதல் வரி விதிப்பு காரணமாக இந்தியாவின் பாசுமதி அரிசி ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஈரானில் உள்ள சாபகார் துறைமுகத்தை இந்தியா நிர்வகித்து வருகிறது.இந்தியா தனது நீண்டகால அணுகுமுறைக்கு இன்றியமையாத ஒன்றாகக் கருதும் சாபகார் துறைமுகத்தை மேம்படுத்துவதற்காக சுமார் 500 மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது.

சாபகார் துறைமுகம், சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடத் திட்டத்திலும் ஒரு முக்கியமான மையமாக உள்ளது. இந்தப் போக்குவரத்து வலையமைப்பு, சூயஸ் கால்வாயைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, இந்தியாவை இரஷ்யா மற்றும் ஐரோப்பாவுடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஈரான் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்துள்ள நிலையில், சாபகார் துறைமுகத்துக்கு மட்டும் விதிவிலக்கு அளித்து உள்ளது. இது வரும் ஏப்ரலில் நிறைவடைகிறது. எனவே, சாபகார் துறைமுகம் மீதும் அமெரிக்க அரசு பொருளாதாரத் தடைகளை விதிக்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதுவும் இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனச் சொல்லப்படுகிறது.

அமெரிக்கா இப்போது இந்திய பொருட்களுக்கு 50% வரி விதிக்கிறது. இந்தச்சூழலில்,ஈரானுடன் வர்த்தகம் செய்வதால் அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response