
திமுகவுக்கு எதிராக தமிழ்நாட்டில் ஒரு பலமான கூட்டணி அமைக்கத் திட்டமிட்டது பாஜக. ஆனால், கூட்டணியில் இருந்த ஓபிஎஸ் மற்றும் டிடிவி.தினகரன் ஆகியோர் ஒவ்வொருவராக வெளியேறியதால் அமித்ஷா அதிர்ச்சியடைந்தார்.
விரைவில் தமிழ்நாட்டிற்கு வர உள்ள அமித்ஷா கூட்டணியை இறுதி செய்யும் முயற்சியில் ஈடுபடுகிறார் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில், பாஜக மேலிட அழைப்பை ஏற்று, கடந்த 2 நாட்களுக்கு முன் ஓபிஎஸ் திடீரென டெல்லி சென்று அமித்ஷா மற்றும் பாஜக தலைவர்களைச் சந்தித்துப் பேசி உள்ளார். அப்போது, அதிமுகவில் எடப்பாடியை ஓரங்கட்டிவிட்டு, புதிய தலைமையை உருவாக்கி அதன் கீழ் பிரிந்தவர்கள் சேர்க்கலாமா? அல்லது புதிய கட்சி தொடங்குவதா? என்று அமித்ஷா-ஓபிஎஸ் ஆலோசனை நடத்தி உள்ளனர். இதனால், எடப்பாடி கடும் அதிர்ச்சியில் உள்ளார்.
இந்நிலையில், பாஜக மேலிடத்துடனும், பாஜக தமிழ்நாடு தலைவர் நயினார் நாகேந்திரனுடன் கடும் மோதலில் ஈடுபட்டு வரும் அண்ணாமலை நேற்று அவசர அவசரமாக டெல்லி சென்று உள்ளார். திருப்பூர் மாவட்டம் இடுவாய் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னக்காளிபாளையம் பகுதியில் திருப்பூர் மாநகராட்சி குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து, அண்ணாமலை தலைமையில் நேற்று போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், அந்தப் போராட்டத்தை இரத்து செய்துவிட்டு, நேற்று மதியம் திடீர் அவசரப் பயணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அண்ணாமலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது வீட்டில் நேற்று மாலை அண்ணாமலை சந்தித்துப் பேசினார். அப்போது, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் பாஜக அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் உடன் இருந்தனர்.
தனக்கு எதிராக இருக்கும் ஓபிஎஸ் மற்றும் அண்ணாமலை ஆகியோரை அடுத்தடுத்து வரவழைத்து அமித்ஷா சந்தித்திருப்பதால் எடப்பாடி பழனிச்சாமி கடும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.


