
தமிழ்நாட்டில்,காங்கிரசு உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது தவெக.இந்நிலையில்,முதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் பணிகளை அக்கட்சி தொடங்கியுள்ளது. இதன் ஒருபகுதியாகவே, வடமாநிலங்களில் ‘ரீல்ஸ்’ பரப்பப்பட்டு வருகிறது.
அண்மையில் சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,எதிர்காலத்தில் தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.அதைத் தொடர்ந்து,விஜய்தான் அடுத்த பிரதமர் என
தவெகவினர் பேசத்தொடங்கினர்.இது காங்கிரசுக் கட்சியினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
விஜய்தான் பிரதமர் வேட்பாளர் என தவெகவினர் சொல்வதை காங்கிரசு இரசிக்கவில்லை என்பதன்
வெளிப்பாடாகவே அக்கட்சியின் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர், “தவெகவினர் இன்னும் இரசிகர் மன்ற மனநிலையிலேயே உள்ளனர்” என்றார்.
இதற்கிடையே, தனியார் நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்பில், ‘2029 மக்களவைத் தேர்தலில் பிரதமர் பதவிக்கான பந்தயத்தில் விஜய் 9 விழுக்காடு ஆதரவுடன் 3 ஆவது இடத்தில் இருக்கிறார்’ என தெரிவிக்கப்பட்டது.
இது தில்லி காங்கிரசு தலைமையிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, “நமது
நிலைப்பாட்டைத் தெளிவாகத் தெரிவித்து விடுங்கள்” என தில்லி தலைமை தமிழ்நாடு காங்கிரசுக்கு
அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
அதனால்தான்,தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன், “2029 தேர்தலில் பிரதமர் வேட்பாளராக இராகுல் காந்திதான் நிறுத்தப்படுவார்” என்றார்.
சுற்றுலாத் துறை அமைச்சர் இராஜேஷ்குமார், “2029 தேர்தலில் இராகுல் காந்திதான் பிரதமராக வருவார். ஒருவேளை தவெக அதற்கு உடன்படாவிட்டால் காங்கிரசுக் கட்சியின் 2 அமைச்சர்களும் இப்பதவியில் நீடிக்க
மாட்டார்கள்” என்றார்.
இவற்றிற்கு தவெக தரப்பில் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை.
இதனால்,விரைவில் செயற்குழுவைக் கூட்டி,இராகுலை பிரதமராக ஏற்கும் கட்சியுடன்தான் கூட்டணி என
தீர்மானம் நிறைவேற்றவும் தமிழ்நாடு காங்கிரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில்,சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை,தமிழ்நாடு காங்கிரசு தலைவர்
மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி பாமஉ ஆகியோர் நேற்று திடீரென சந்தித்தனர்.
அப்போது,தமிழகத்தில் தவெக ஆட்சியமைக்க நாங்கள்தான் உறுதுணையாக இருந்தோம்.ஆட்சியிலும் அங்கம்
வகிக்கிறோம்.தற்போது ‘விஜய்தான் பிரதமர் வேட்பாளர்’ என்று தவெகவினர் தொடர்ந்து பேசி வருவதால்,
அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணிக்குள் பிரச்சினைகள் உருவாகின்றன.எனவே,இந்தச் சிக்கலுக்கு உடனே முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு முதல்வர் விஜய்,உறுதியான எந்தப் பதிலும் சொல்லாமல்,கட்சியினரிடம் இதுகுறித்துப் பேசுகிறேன் என்று பட்டும்படாமல் பதிலளித்தார் என்று கூறப்படுகிறது.
இதனால் காங்கிரசுக் கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


