ஜேப்பியார் குடும்பத்திடமிருந்து மீட்கப்பட்ட அரசு நில சர்ச்சை – விவரம்

சென்னை அருகே செம்மஞ்சேரியில் ஜேப்பியார் கல்விக் குழுமம் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து இருந்த 128 ஏக்கர் அரசு நிலம் கடந்த திமுக ஆட்சியில் மீட்கப்பட்டது.அந்த இடத்தில் ரூ.261 கோடி செலவில் (குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி)சர்வதேச விளையாட்டு நகரம் அமைக்கத் திட்டமிடப்பட்டது.பின்னர்,அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அந்தத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில்,ஜேப்பியார் கல்விக் குழுமத்திடம் இருந்து மீட்கப்பட்ட நிலம் மீண்டும் அவரிடமே ஒப்படைக்கப்பட உள்ளதாகவும்,சர்வதேச விளையாட்டு நகரத் திட்டத்தை தவெக அரசு
கைவிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பே ஜேப்பியார் மகள் ரெஜினா தவெகவில் இணைந்து பணியாற்றி வந்தார். மேற்கண்ட ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்ட இடத்தின் அருகில் உள்ள ஜேப்பியார் கல்லூரியில்தான் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை விஜய் நடத்தினார்.

தேர்தல் முடிந்த பிறகு தவெக அமைச்சரவையில் ஜேப்பியாரின் மருமகனும்,ரெஜினாவின் கணவருமான
மரியவில்சன் நிதியமைச்சராகப் பொறுப்பேற்றார்.விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் ஆதவ் அர்ஜூனாவும், மரிய வில்சனும் நெருங்கிய நண்பர்கள். இதை ஆதவ் அர்ஜூனாவே சட்டசபையில் சொல்லியுள்ளார்.இதுமட்டுமின்றி ஜேப்பியார் குடும்பத்துடன் முதல்வர் விஜய்யும் நெருங்கிப் பழகி வருகிறார்.

இந்நிலையில்,சர்வதேச விளையாட்டு நகரத்தைக் கைவிட்டு மீண்டும் அவர்களிடமே மீட்கப்பட்ட நிலத்தை ஒப்படைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திருந்தது.

இதுகுறித்து தமிழ்நாடு சட்டசபையில் ஆகஸ்ட் 31 அன்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

அப்போது நடந்த விவாதம்….

உதயநிதி ஸ்டாலின்…

எங்கள் தலைவர் தலைமையிலான ஆட்சியில்,தமிழ்நாட்டிலிருந்து ஒலிம்பிக் தரத்திலான விளையாட்டு வீரர்களை உருவாக்க,சென்னையில் ஒரு இன்டர்நேஷனல் ஸ்டாண்டர்டு விளையாட்டுக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று,செம்மஞ்சேரியில் 128 ஏக்கரில் 261 கோடி ரூபாய் மதிப்பீட்டில்,ஒரு குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கின்ற பணிகளை,நாங்கள் தொடங்கியிருந்தோம்.இந்த அரசு,பரந்தூர் விமானநிலையத்தை இரத்து செய்ததோ,அதேபோல் இப்போது`குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி’ திட்டத்தையும் இரத்து செய்திருக்கிறது என்று செய்திகள் வந்திருக்கின்றன.அரசின் கவனத்திற்கு ஈர்க்கிறேன்.ஏன்,இந்தத் திட்டம் கைவிடப்பட்டது என்று இந்த அரசைக் கேட்கிறேன’ என்றார்.

இதற்குப் பதிலளித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது…

தமிழ்நாட்டில் இருந்து ஒலிம்பிக் பதக்கம் வாங்கியது கிடையாது.38 மாவட்டங்களுக்கும் பெண்,ஆண் விடுதிகள் உருவாக்க உள்ளோம்.அதன்பிறகு 10 ஒலிம்பிக் அகாடமி உலகத்தரத்தில் உருவாக்க இருக்கிறோம்.சர்வதேச தரத்தில் ஒலிம்பிக் நகரத்தை உருவாக்க உள்ளோம்.30 ஆண்டுகள் இந்தத் துறையில் எனக்கு அனுபவம் உள்ளது. செம்மஞ்சேரியில் உள்ள விளையாட்டு நகரத்தை முழுமையாக இரத்து செய்யவில்லை.மறுகட்டமைப்பு செய்ய இருக்கிறோம்.நீர் விளையாட்டு,வில் வித்தை,ஸ்கேட்டிங் போர்டு,பன்னோக்கு விளையாட்டு அரங்குகள் உள்ளிட்ட இதரவசதிகள் செய்திருக்கிறார்கள்.அந்த இடம் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும்.அதற்கு தனித்திட்டம் இருக்கிறது.விளையாட்டு நகரத்தை ஒலிம்பிக் தரத்தில் உருவாக்கவேண்டும். இதுதான் கடந்த அரசின் கொள்கை.இந்த அரசின் கொள்கையும் அதான்.மாற்றுக் கருத்து இல்லை.ஆனால் 46 விளையாட்டுகளை உள்ளடக்கிய விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்து கொண்டிருக்கிறோம்.முதல்வர் ஆய்வில் இருக்கிறது.விரைவில் நல்ல செய்தியை கொடுப்பார்.உலகத்தரத்தில் ஒலிம்பிக் போட்டிக்கு ஏற்றவாறு விளையாட்டு நகரத்தை மறுகட்டமைப்பு செய்யவிருக்கிறோம்.ஆரம்பக்கட்டப் பணிகளும் தொடங்கவில்லை.கடந்த ஆட்சியாளர்கள் தேர்தல் வாக்குறுதியில் இதைச் சொல்லி,அதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரியது,8.1.2026 இல்தான். 5 ஆண்டுகள் எதுவும் செய்யவில்லை.அடிக்கல் நாட்டியது 18.2.2026. நாங்கள் உறுதியாகச் சொல்கிறோம்.
கூடியவிரைவில் முதல்வர் நல்லசெய்தி கொடுத்ததும்,6 மாதங்களில் அதற்கான பணிகளைத் தொடங்குவோம்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்….

எங்களின் தேர்தல் அறிக்கையில்,இதைச் சொல்லியிருந்தோம்.128 ஏக்கர் சென்னைக்கு அருகில் கிடைப்பது என்பது சாதாரண விசயம் கிடையாது.மூன்று இடங்களுக்கு சாத்தியக்கூறு இருந்தது.நாங்களும் டி.பி.ஆர் ப்ராஜெக்ட் எல்லாம் தயார் செய்திருந்தோம்.சி.எம்.டி.ஏ சார்பாக ஒரு தனியார் கன்சல்டன்ட் நியமிக்கப்பட்டிருந்தார்கள்.அந்த கன்சல்டன்ட் ஆய்வின்படிதான் செம்மஞ்சேரியில் `ஸ்போர்ட்ஸ் சிட்டி’ அமைக்கலாம் என்று அறிக்கை கொடுத்தார்கள்.அதன்பிறகு தொடர்ந்து பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியிருக்கிறோம்.`ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன்,ஸ்போர்ட்ஸ்மேன்களுடன் கலந்து ஆலோசனை செய்திருக்கிறோம்.ஹை லெவெல் சைட் இன்ஸ்பெக்சனும் நடத்தப்பட்டது.அந்த இன்ஸ்பெக்சனின் அடிப்படையில் பல்வேறு பரிந்துரைகளும் வழங்கப்பட்டுள்ளன.`குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி’அமைக்கின்ற பணியை பேஸ்மேனரில் மூன்று பேஸ்களாக நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டு,அது இறுதி செய்யப்பட்டது.பேஸ் ஒன்றுக்கான வேலையை எங்களின் தலைவர்,அப்போதைய முதலமைச்சராக இருக்கும்போது,கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி தொடங்கி வைத்தார். இந்தியாவிலேயே முதன்முறையாக `பி.எம்.எக்ஸ் சைக்கிளிங் டிராக்’, இந்தியாவிலேயே மிகப்பெரிய `வாட்டர் ஸ்போர்ட்ஸ் ஸ்பெசிலிட்டி’ என்று 25 விளையாட்டுகளுக்குத் தேவையான 30க்கும் மேற்பட்ட உட்கட்டமைப்புகள் அங்கு வரவிருந்தன.முதற்கட்டப் பணிகளை 18 மாதங்களில் முடிக்கவேண்டும் என்று அவர்களுக்கு இலக்கு கொடுக்கப்பட்டது.இப்போது நம் அமைச்சர்களும் இந்தத் திட்டத்தை கைவிடவில்லை,இதில் சில ஆல்ட்ரேஷன் செய்யப்போகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.எனவே,இதை தயவுசெய்து சீக்கிரம் செய்து முடித்தால், விளையாட்டு வீரர்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா….

உறுதியாக இந்த அரசு சர்வதேசத் தரத்திலான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும்.1994 இல் ஜெயலலிதாவுக்கு பிறகு சர்வதேசதரத்தில் விளையாட்டு மைதானம் உருவாக்கப்படவில்லை.அதுதான் உண்மையான தகவல்.இந்த 5 ஆண்டுகளில் முழுப்பணிகளும் முடிந்து விளையாட்டு நகரம் திறக்கப்படும்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்….

அமைச்சர் பல வருடங்களாக விளையாட்டுத் துறைக்குக் கட்டமைப்புகள் இல்லை என்று சொல்கிறார். பல வருடங்களாக விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தவர் நம் அவைமுன்னவர் செங்கோட்டையன்தான். அவரிடத்தில் அதை அவர் கேட்டுப் பெற்றுக் கொள்ளவேண்டும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Leave a Response