அமித்சாவின் அறிவுரையை ஏற்று காங்கிரசை கழற்றிவிடும் விஜய்?

2029 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளராக இராகுலை முன்னிறுத்த காங்கிரசிக் கட்சி முடிவு செய்துள்ளது.தமிழக காங்கிரசு தலைவர் மாணிக்கம் தாகூர், இராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று கூறி வருகிறார்.தற்போது தவெகவுடன் காங்கிரசு கூட்டணி அமைத்து அமைச்சரவையில் அங்கம் வகித்து வருகிறது.

இந்நிலையில்,அண்மைக்காலமாக தமிழ்நாடு சட்டமன்றத்திலும்,பொதுவெளியிலும் அடுத்த பிரதமர் விஜய் என தவெகவினர் கூறி வருகின்றனர்.

இதற்கு பதிலளித்த மாணிக்கம்தாகூர்,தவெகவினர் இன்னமும் இரசிகர் மன்ற மனநிலையிலேயே உள்ளனர். காங்கிரசு மட்டும் ஆட்சி அமைக்க ஆதரவு தரவில்லை என்றால் இன்னும் தவெக கதையை அமித்ஷா முடித்து இருப்பார் என்று விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் தூத்துக்குடி மாநகர் முழுவதும் விஜய்யை,இன்றைய முதல்வர்,நாளைய பிரதமர் என வர்ணித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதிமுகவில் இருந்து விலகி சமீபத்தில் தவெகவில் இணைந்த சுதாகர் படத்துடன் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றன.

காங்கிரசை கூட்டணியிலிருந்து வெளியேற்றும் உள்நோக்கத்தில் தான் விஜய்யை பிரதமர் என அழைத்து தவெகவினர் சுவரொட்டி ஒட்டுகின்றனர். இதற்கு விஜய்யின் ஆசி இருக்குமோ? என்று காங்கிரசார் சந்தேகிக்கின்றனர்.

சென்னையில் தென்மண்டல முதல்வர்கள் மாநாடு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடந்தபோது முதல்வர் விஜய்யிடம், அகில இந்திய அளவில் செல்வாக்கு இழந்த காங்கிரசை நீங்கள் ஏன் தோளில் தூக்கிச் சுமக்கிறீர்கள்? அதைக் கழற்றிவிடுங்கள் என்று அவர் கூறியதாகத் தெரிகிறது.

திமுகவின் முதுகில் குத்திவிட்டு விலகிய காங்கிரசை எக்காலத்திலும் இனி கூட்டணியில் சேர்க்கமாட்டோம் என்று அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கூறிவரும் நிலையில்,தவெகவும் கைவிட்டால் காங்கிரசு நட்டாற்றில் நிற்கும் என்பது அமித்ஷாவின் கணக்கு.

2029 இல் இராகுல்தான் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் என்று காங்கிரசார் கூறிவரும் நிலையில் அந்தக்கட்சியை கூட்டணியில் இருந்து கழற்றி விட விஜய்யை பிரதமர் வேட்பாளர் என தவெகவினர் கூறி வருவதாக காங்கிரசு தொண்டர்கள் கொந்தளிக்கின்றனர்.

இச்சிக்கல் பெரிதாகிக் கொண்டே போகும் நிலையில் விஜய்யின் அமைச்சரவையில் காங்கிரசு நீடிக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Leave a Response