கண்ணூர் சிபிஎம் மாநாட்டில் மு.க.ஸ்டாலினின் காத்திர உரை

திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெற்று வரும் மார்க்சிஸ்ட் கட்சியின் 23 ஆவது அகில இந்திய மாநாட்டில் கலந்துகொண்டார்.

மாநாட்டில், ‘ஒன்றிய – மாநில உறவுகள்’ என்னும் தலைப்பிலான கருத்தரங்கில் நேற்று பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.

அப்போது அவர் ஆற்றிய உரை…

மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பிலான 23 ஆவது மாநாட்டில் நான் கலந்து கொள்ள வேண்டும் என்று முதல்வர் பினராயி விஜயன் என்னிடம் கேட்டதுமே உடனடியாக ஒப்புக் கொண்டேன். முதல்வர் பினராயி விஜயன் என்னிடத்தில் காட்டும் அன்பு அதற்கு முக்கியக் காரணம். அனைத்துக்கும் மேலாக – என்னுடைய பெயர் ஸ்டாலின்.

முதலில் உங்கள் மாநிலத்தின் முதலமைச்சர் பினராயி விஜயனை வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன். இந்தியாவில் மாநில முதலமைச்சர்களில் இரும்பு மனிதராக அவர் செயல்பட்டு வருகிறார். ஒரு கையில் போராட்டக் குணம், ஒரு கையில் பல்வேறு தொலைநோக்குத் திட்டங்கள் கொண்டவராக இருப்பதால்தான் ஒன்றிய அரசைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தனது ஆட்சியை மிகச் சிறப்பாக நடத்தி வருகிறார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசாங்கம் 356 ஆவது பிரிவைப் பயன்படுத்தி முதன்முதலில் கலைக்கப்பட்டது கேரளத்தில் தான். தமிழ்நாட்டிலும் மக்களின் பேராதரவோடு தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக அரசாங்கம் 356 ஆவது பிரிவைப் பயன்படுத்தி இரண்டு முறை கலைக்கப்பட்டது. 1976-ஆம் ஆண்டு முதல்முறையும் 1991 ஆம் ஆண்டு இரண்டாவது முறையும் இது நடந்தது. எனவே ஒன்றிய, மாநில உறவுகளைப் பற்றிப் பேசுவதற்கான முழு உரிமையும் தமிழ்நாட்டுக்கும் உண்டு. கேரளாவுக்கும் உண்டு. திமுகவுக்கும் உண்டு. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் உண்டு.

நான் ஏதோ தமிழ்நாட்டைக் காப்பதற்காக மட்டுமோ பினராயி விஜயன் கேரளாவைக் காப்பாற்றுவதற்கு மட்டுமோ இந்த முழக்கத்தை முன்வைக்கவில்லை. இந்தியாவைக் காப்பாற்ற வேண்டுமானால் முதலில் மாநிலங்கள் காப்பாற்றப்பட வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமைதான் நம்முடைய பண்பாடு ஆகும். ஆனால் இந்த வேற்றுமைகள் அனைத்தையும் அழித்து ஒற்றைத்தன்மையை உருவாக்க நினைக்கிறார்கள்.

ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே உணவு, ஒரே தேர்வு, ஒரே கல்வி, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கலாச்சாரம் – என்று எல்லாவற்றையும் ஒரே -ஒரே – ஒரே என்று கோரஸ் பாடுகிறார்கள். இப்படியே போனால் ஒரே கட்சி என்று ஆகிவிடும். ஒரே கட்சியானால் – ஒரே ஆள் என்று ஆகிவிடும். இதை விட ஆபத்தானது வேறு இருக்க முடியாது.

நமது அரசியலைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் ஒற்றைத்தன்மை கொண்ட ஆட்சியை உருவாக்கவில்லை. அதிகாரங்களை மூன்றாகப் பிரித்து,மாநிலப் பட்டியல், ஒன்றியப் பட்டியல், ஒத்திசைவுப் பட்டியல் என்றுதான் வைத்தார்கள். பஞ்சாயத்து ராஜ் சட்டத்துக்குப் பிறகு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனியாக உரிமைகள் தரப்பட்டன. ஆனால், கிராமங்களை, மாநிலங்களை அழிக்க நினைப்பவர்களாக ஒன்றிய ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கே விரோதமானது.

அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகார வரம்பைக் கடந்து தனது அதிகார எல்லையை விரித்துச் செல்கிறது ஒன்றிய அரசு. இந்திய நாட்டை பிரிட்டிஷார் ஆண்டார்கள். அவர்கள் கூட இத்தகைய அதிகாரம் பொருந்திய ஒற்றைத்தன்மையை உருவாக்க நினைக்கவில்லை. அதிகாரத்தைக் கையில் வைத்திருந்து அடக்கியாளும் எண்ணத்தோடு இருந்த ஆங்கில ஆட்சிகூட செய்யாததை இன்றைய பாஜக அரசு செய்கிறது என்று வெளிப்படையாகவே நான் குற்றம் சாட்டுகிறேன். மக்களுக்குத் தேவையான அனைத்தையும் செய்யும் மாநிலங்களை – ஒன்றிய அரசை நோக்கிக் கையேந்த வைப்பதில்தான் ஒன்றிய ஆட்சியாளர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். மாநிலத்தின் நிதி உரிமையைப் பறிக்கும் வகையில் ஜிஎஸ்டி முறையைக் கொண்டு வந்தார்கள். வரி வருவாயைப் பறித்தார்கள். இழப்பீடு தருவதாகச் சொன்னார்கள். தமிழ்நாட்டுக்கு மட்டும் ரூ.21 ஆயிரம் கோடி நிதி வரவேண்டி உள்ளது.

கிராமங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்களைக் கூடத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற அதிகார வெறியோடு ஒன்றிய பாஜக அரசு செயல்படுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அமைச்சரவை இருக்கும்போது, ஆளுநரை வைத்துக் கொண்டு ஆட்சி செலுத்துவது என்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது அல்லவா?. இதனை ஒரு ஒன்றிய ஆட்சியே செய்யலாமா?.

தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை இரண்டு முறை நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவை இன்னமும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் தமிழகத்திலுள்ள மாநில ஆளுநர் தாமதித்து வருகிறார்; நாள் கடத்தி வருகிறார்.சட்டத்தின்படிதான் ஆளுநர் நடக்கிறாரா?. நீட் மசோதா மட்டுமல்ல 11 மசோதாக்கள் ஆளுநர் வசம் இருக்கின்றன. அதற்கெல்லாம் அவர் அனுமதி தரமறுப்பதற்கு என்ன காரணம்?.

“மாநிலங்களுக்கு உரிமைகள் வழங்காத காரணத்தால்தான் இந்திய அரசியலில் பல சிக்கல்களும் முரண்பாடுகளும் தொடர்கின்றன’’ என்று தமிழ்நாட்டை ஐந்து முறை ஆண்ட முத்தமிழறிஞர் கலைஞர் சொன்னார். கோட்டையில் இருக்கிறேன், ஆனால் கோட்டையைச் சுற்றியுள்ள இடத்தில் புல்லை வெட்டுவதற்கான அதிகாரம் இல்லை’ என்றார் முதலமைச்சர் கலைஞர்.

இன்று தமிழ்நாடு முதலமைச்சரான நானாக இருந்தாலும் – கேரள முதலமைச்சரான பினராயி விஜயனாக இருந்தாலும் – தலையாட்டி பொம்மைகளாக இருந்தால் நமது ஆட்சிக்கு எந்த நெருக்கடியும் தர மாட்டார்கள். தலையாட்டி பொம்மையாக நாம் இருக்க வேண்டுமா? இதுதான் என் கேள்வி.

ஏழை எளிய, விளிம்பு நிலை மக்களின் உயர்வுக்காகத் திட்டங்கள் தீட்டினால் – கல்வி உரிமையைப் பேசினால் – நமது தென்னகத்தின் பண்பாட்டைப் பற்றிப் பேசினால் – சமதர்மக் கொள்கைகளைப் பேசினால் – உடனடியாக நமது செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடுவார்கள். அடித்தட்டு மக்களின் உயர்வுக்காக உழைக்கும் தலைவர்கள் அனைவரும் இத்தகைய முட்டுக்கட்டைகளை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். சட்டமன்றத்தாலும் – நீதிமன்றத்தாலும் – மக்கள் மன்றத்தாலும் – இதனை நாம் எதிர்கொள்ளத்தான் வேண்டும். எதிர்கொண்டு வருகிறோம்.

இத்தகைய பிரச்னைகளை எதிர்கொள்வதற்காக மாநிலங்களை ஒருங்கிணைத்து குழு அமைத்து நாம் போராட வேண்டும். தென்மாநில முதலமைச்சர்களின் குழு அமைக்கப்பட வேண்டும். அதன்பிறகு ஒட்டுமொத்தமாக மற்ற மாநில முதலமைச்சர்கள் கொண்ட குழுவையும் தனியாக அமைக்க வேண்டும்.

மாநிலங்கள் அதிக அதிகாரம் கொண்டவையாக ஆக்கப்பட இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும். அதற்கு அரசியல் எல்லைகளைக் கடந்து நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தையும் ஒன்று திரட்டி ஓரணியில் வைத்துள்ளோம். நாங்கள் அனைவரும் தேர்தல் காலத்தில் மட்டும், தொகுதிகளைப் பங்கிட்டுக் கொள்ளும் கட்சிகளாக இல்லாமல், கொள்கை உறவாக தொடர்ந்து வருகிறோம். அதுதான் எங்களது வெற்றிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது. ஒற்றுமை தான் பலம் என்பதை அனைத்துக் கட்சிகளும் உணர வேண்டும்.

இந்தியாவைக் காப்பாற்ற அனைவரும் ஒன்று சேர்ந்தாக வேண்டும்.

இந்தியாவின் பன்முகத்தன்மை – கூட்டாட்சித் தத்துவம்-ஜனநாயகம் – மதச்சார்பின்மை – சமத்துவம் – சகோதரத்துவம் – மாநில உரிமைகள் – கல்வி உரிமைகள் ஆகிய அனைத்தையும் காப்பாற்ற வேண்டுமானால் அரசியல் மன மாச்சரியங்களை விட்டு அனைவரும் ஒன்றாக வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்’’ என்று நான் குறிப்பிட்டேன். அதே வேண்டுகோளைத்தான் இங்கும் வைக்கிறேன். உடன்பாடான கொள்கை கொண்ட கட்சிகள் இடையே நல்லுறவு உருவாக வேண்டியது இன்றைய அரசியல் சூழ்நிலையில் மிகவும் தேவையானது ஆகும். இத்தகைய கட்சிகள் ஒன்று சேர்ந்தால்தான் வெற்றி பெற முடியும். அந்த அரசியல் வெற்றியால் மட்டும்தான் சமூகநீதியை – சமத்துவத்தை – மதச்சார்பின்மையை உருவாக்க முடியும். அத்தகைய வெற்றிக்கான திட்டமிடுதல்களை அனைத்துக் கட்சிகளும் தொடங்க வேண்டும்.

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

Leave a Response