நீட் விலக்கு சட்டமுன்வடிவைக் கிடப்பில் போட்டிருக்கும் ஆளுநர் – திமுகவின் அடுத்தகட்ட நடவடிக்கை

நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் சனவரி 31 ஆம் தேதி குடியரசுத்தலைவர் இராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. பிப்ரவரி 1 ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒன்றிய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து,குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மற்றும் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் ஆகியன நடந்தன.

அந்த கூட்டத் தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 11 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரின் 2 ஆவது அமர்வு நேற்று தொடங்கியது. இது, வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் ஒரே நேரத்தில் காலை 11 மணிக்குத் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும், இரு அவைகளிலும் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து மக்களவையில், உக்ரைனில் படித்த 18,000 மாணவர்களின் எதிர்கால நிலை குறித்து விவாதிக்கக்கோரி காங்கிரசு உறுப்பினர் மணீஷ் திவாரி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசை வழங்கினார். இதேபோல், தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர்.

கடந்த மே மாதம் திமுக ஆட்சி அமைந்ததும், நீட் விலக்குக் கோரும் சட்ட மசோதாவை தமிழக சட்டமன்றத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக ஆளுநர் மாளிகைக்குச் சென்று,ஆளுநரைச் சந்தித்து மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொண்டார். ஆனால், 142 நாட்களுக்குப் பிறகு பிப்ரவரி 1 ஆம் தேதி நீட் விலக்கு கோரும் மசோதாவை சபாநாயகருக்கே திருப்பி அனுப்பினார்.

ஆளுநரின் இந்தச் செயலுக்குப் பல்வேறு கட்சியினர், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து, தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் பிப்ரவரி 8 ஆம் தேதி கூடி, மீண்டும் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் மாளிகையில் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் இதுவரை தமிழக ஆளுநர் இந்த மசோதாவை குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்கவில்லை. 2 ஆவது முறையாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால், கண்டிப்பாக அனுப்பியே ஆக வேண்டும். இதனால் அவர் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் ஆளுநர் முடிவு எடுக்காததைக் கண்டித்து விவாதம் நடத்தக்கோரி மக்களவையில் திமுக சார்பில் நேற்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

மேலும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, நீட் விலக்கு மசோதா குறித்து ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்துவது குறித்து விவாதிக்கக்கோரி சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸையும் வழங்கி உள்ளார். இந்த ஒத்தி வைப்பு தீர்மானத்தை இந்தக் கூட்டத் தொடரிலேயே விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் கர்நாடகாவைச் சேர்ந்த நவீன் சேகரப்பா என்பவர் உயிரிழந்தார். இவர், நீட் தேர்வு காரணமாக மருத்துவ படிப்புக்கான இடம் கிடைக்காமல் உக்ரைன் சென்றதாகக் கூறப்படுகிறது. உக்ரைன் உள்ளிட்ட வெளிநாடுகளில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் நீட் தேர்வால் இடம் கிடைக்காமல் சென்று உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், ஒத்திவைப்பு தீர்மானம் மீது பல அரசியல் கட்சிகள் ஆதரவாகப் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Response