அண்மையில் நடந்து முடிந்த உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசுக் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. இதில், பஞ்சாப் மாநிலத்தில் 137 ஆண்டு பழமையான கட்சியான காங்கிரசு,2012 இல் தொடங்கப்பட்ட ஆம் ஆத்மியிடம் ஆட்சியைப் பறிகொடுத்தது. 403 தொகுதிகள் கொண்ட உபி.யில் வெறும் 2 தொகுதியில் மட்டுமே வென்றுள்ளது. இதன் மூலம், நாடு முழுவதும் காங்கிரசு ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை வெறும் 2 ஆக (சட்டீஸ்கர், ராஜஸ்தான்) சரிந்துள்ளது.
இந்தத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, கட்சித் தலைமை மீதான அதிருப்திக் குரல்கள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி விட்டன. குலாம் நபி ஆசாத் தலைமையிலான ஜி23 அதிருப்தித் தலைவர்கள், கட்சியின் தலைமைப் பொறுப்பில் மாற்றம் வேண்டுமென பரிந்துரைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து காங்கிரசு அவசர செயற்குழு கூட்டத்தைக் கூட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இக்கூட்டத்தில் சோனியா, ராகுல், பிரியங்கா ஆகிய மூவரும் கட்சியில் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்ய இருப்பதாக நேற்று முன்தினம் தகவல்கள் வெளியாகின. ஆனால் இத்தகவல்களைக் காங்கிரசுக் கட்சி மறுத்தது.
இந்த பரபரப்பான சூழலில், காங்கிரசு அவசர செயற்குழுக் கூட்டம், டெல்லியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று மாலை கூடியது.
கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா, மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூனா கார்கே, கே.சி.வேணுகோபால், அஜய் மக்கான், ப.சிதம்பரம், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
அதிருப்தி தலைவர்களில் குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா மற்றும் முகுல் வாஸ்னிக் ஆகியோர் பங்கேற்றனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஏ.கே.அந்தோணி உள்ளிட்ட 6 மூத்த தலைவர்கள் உடல் நலக்குறைவால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
சுமார் 4 மணி நேரம் நடந்த செயற்குழுக் கூட்டத்தில் 5 மாநில தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் அனைத்துத் தலைவர்களின் கருத்தையும் கவனமாகக் கேட்டறிந்த தலைவர் சோனியா காந்தி, அவர்கள் முன்மொழிந்த மாற்றங்களை உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதைத் தொடர்ந்து சோனியா காந்தியே கட்சியின் தலைவராக நீடிக்க வேண்டுமென கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதே சமயம், 2024 ஆம் ஆண்டு நடக்க உள்ள மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்சியை வலுப்படுத்த, முக்கிய பொறுப்புகளில் விரைவில் அதிரடி மாற்றம் செய்வதெனவும் செயற்குழுவில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அளித்த பேட்டியில், ‘‘சோனியா காந்தி தலைமையின் மீதான நம்பிக்கையை செயற்குழு ஒருமனதாக உறுதிப்படுத்தி உள்ளது. அதே சமயம், கட்சியைச் சீரமைக்கவும் வலுப்படுத்தவும் அவர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடருக்குப் பிறகு, கட்சியின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் கூட்டப்படும். அதைத் தொடர்ந்து மீண்டும் செயற்குழு கூடி, கட்சியில் மேற்கொள்ள வேண்டிய முக்கிய மாற்றங்கள் குறித்து முடிவு செய்யப்படும்,’’ என்றார்.
காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறுகையில், ‘‘அனைத்துத் தொண்டர்களும் ராகுல் தலைவராக வேண்டுமென விரும்புகிறார்கள். விரைவில் அனைத்து பொறுப்புகளுக்கும் உட்கட்சித் தேர்தல் நடத்தப்படும். அதன் மூலம் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார்,’’ என்றார்.
முன்னதாக, கூட்டத்திற்கு வந்த தலைவர்கள் சிலர் ராகுல் காந்தி மீண்டும் கட்சியில் முழு நேர தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டுமென விருப்பம் தெரிவித்தனர். டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காங்கிரசார் தலைமையகம் முன்பாகக் குவிந்திருந்தனர். அவர்களும் ராகுல் தலைவராக வேண்டும் என முழக்கமிட்டனர்.
2019 ஆம் ஆண்டில் மக்களவைத் தேர்தலில் காங்கிரசுக் கட்சி தொடர்ந்து 2 ஆவது முறையாகத் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து கட்சித் தலைவர் பதவியை ராகுல் ராஜினாமா செய்தார். அதன் பின் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
செயற்குழுக் கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, ‘‘கட்சி விரும்பினால் நாங்கள் மூவரும் (சோனியா, ராகுல், பிரியங்கா) எங்கள் பொறுப்புகளை ராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறோம்’’ எனக் கூறியதாகவும் அதை ஏற்க செயற்குழு மறுத்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.