கடலூர் திமுக சமஉ அய்யப்பன் மீது நடவடிக்கை – 3 முக்கிய காரணங்கள்

தமிழ்நாட்டில் பிப்ரவரி 19 அன்று ந் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

அதைத்தொடர்ந்து மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களுக்கான தேர்தல் மார்ச் 4 ஆம் தேதி நடந்தது. இதில் தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில், திமுக தலைமை அறிவித்ததை மீறி, சில இடங்களில் திமுக போட்டி வேட்பாளர்கள் வென்றனர்.

அவர்கள் உடனடியாகப் பதவி விலக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். மறைமுகத் தேர்தலில் சில இடங்களில் நடந்த நிகழ்வுகள் என்னை மிகவும் வருத்தமடைய வைத்துள்ளது. கட்டுப்பாட்டை சிலர் காற்றில் பறக்கவிட்டு தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புகளில் உட்கார்ந்திருக்கிறார்கள். எந்தத் தோழமை உணர்வு நமக்கு மக்கள் மனதில் நல்லெண்ணம் உருவாக்கியதோ, அந்தத் தோழமை உணர்வை எந்தக் காலத்திலும் உருக்குலைந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
திமுக தலைமை அறிவித்ததை மீறி தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாகத் தங்கள் பொறுப்பை விட்டு விலக வேண்டும். விலகாவிட்டால் அவர்கள் திமுகவின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று மு.க.ஸ்டாலின் எச்சரித்திருந்தார்.

மு.க.ஸ்டாலினின் இந்த அறிவிப்புக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் கடலூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் கோ.அய்யப்பன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்ட அறிவிப்பில், ‘கடலூர் கிழக்கு மாவட்டம், கடலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.அய்யப்பன் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி (சஸ்பெண்ட்) வைக்கப்படுகிறார்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு மூன்று முக்கிய காரணங்கள் சொல்லப்படுகின்றன.

கடலூர் மாநகராட்சியில் திமுக சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளர் சுந்தரி ராஜா என்பவர் களம் இறக்கப்பட்டார். அவருக்கு எதிராக போட்டி வேட்பாளராக கீதா குணசேகரன் நிறுத்தப்பட்டார்.
இருந்த போதிலும் திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ வேட்பாளர் சுந்தரி ராஜா வெற்றி பெற்றார். எதிர்த்துப் போட்டியிட்டவர் அய்யப்பனின் ஆதரவாளர் என்று கூறப்படுகிறது.

இதேபோல, நெல்லிக்குப்பம் நகராட்சித் தலைவர் பதவி கூட்டணிக் கட்சியான விசிகவுக்கு ஒதுக்கப்பட்டது. இதில் போட்டி வேட்பாளராக திமுக வேட்பாளர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் நிறுத்தப்பட்டார். அவர் வெற்றியும் பெற்றார். இவரும் அய்யப்பனின் ஆதரவாளர் என்று கூறப்படுகிறது.

இவை மட்டுமின்றி விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், முதலமைச்சர் மு.க்.அஸ்டாலினை நேரில் சந்தித்து அய்யப்பன் மீது குற்றம் சுமத்தினார் என்றும் சொல்லப்படுகிறது.

இவற்றால்தான் அய்யப்பன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

Leave a Response