இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் – தமிழகத்தை வழிமொழிந்த இராகுல்காந்திக்குப் பெரும் வரவேற்பு

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று காங்கிரசுத் தலைவர் இராகுல் காந்தி பேசினார்.

அவர் பேசியதாவது….

குடியரசுத் தலைவர் உரை என்பது நாட்டின் தலைமைக்கான உரையாக இல்லாமல் அரசு அதிகாரிகள் கொடுத்த தகவலாகவே உள்ளது. தற்போது 2 இந்தியாக்கள் உள்ளன.ஒன்று பணக்கார இந்தியா,இன்னொன்று ஏழை இந்தியா என தற்போது நாடு இரண்டாக உள்ளது. பணக்காரர்கள் செல்வமும் அதிகாரமும் மிக்கவர்களாக உள்ளனர். நாட்டின் நிலவரம் குறித்த கவலையை இங்கே வெளிப்படுத்த விரும்புகிறேன். வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கு ஒன்றிய அரசு கூறி வரும் நிலையில் 3 கோடி இளைஞர்கள் வேலை இழந்துள்ளனர்.

புதிதாக வேலை வாய்ப்பை உருவாக்காவிட்டாலும் வேலை இழப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்ஜெட்டில் ஏழை, எளிய மக்களுக்கு நிவாரணம் அளிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. செல்வந்தர்கள், பெருநிறுவனங்களுக்குச் சலுகைகள் கிடைக்கின்றன. உதவி கிடைக்காமல் சிறு குறு தொழில்கள் நசிந்துள்ளன. சிறு, குறு தொழில்களை மத்திய அரசு அழித்துவிட்டது.

ஒரு குடிமகனாக நாட்டில் நடைபெற்று வரும் விசயங்கள் குறித்துக் கவலை கொண்டுள்ளேன். 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வேலையில்லாத் திண்டாட்டம் நாட்டில் நிலவுகிறது.இந்தியாவின் டாப் 100 பணக்காரர்களின் சொத்து மதிப்பு, 55 கோடி மக்களை விட அதிகம் என்பதை ஏழை இந்தியா வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறது. இந்நாட்டு மக்கள் எப்போதுமே அமைதியாக இருப்பார்கள் என்று நினைத்து விடாதீர்கள்.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் மிகப்பெரிய இலக்கு பாகிஸ்தானையும் சீனாவையும் தனித்தனியாக வைத்திருப்பதுதான். நீங்கள் அவர்களை ஒன்றிணைத்தீர்கள். இதுதான் நீங்கள் இந்திய மக்களுக்கு எதிராகச் செய்த மிகப்பெரிய குற்றம். மேக் இன் இந்தியா என கூறிக் கூறியே சிறுதொழில்களை அழித்துவிட்டீர்கள்; 5 கோடி மக்களை வறுமைக் கோட்டிற்கு கீழே தள்ளிவிட்டீர்கள்.

நீட் தேர்வு விலக்கு வேண்டும் என தமிழகம் உங்களிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது. தமிழகத்தின் கோரிக்கைகள் உங்கள் காதுகளுக்கு எட்டவில்லை. தமிழகம் மீண்டும் மீண்டும் நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என்று உங்களிடம் கோரிக்கை வைக்கும். நீங்கள் மறுத்து அவர்களை வெளியேற்றுகிறீர்கள். மக்களின் கருத்தை அரசர் கேட்காது போல உங்கள் அரசு செயல்படுகிறது. தமிழ் மொழியும், தமிழ் கலாச்சாரமும் தனித்துவம் கொண்டவை. அவற்றை மதித்து சம உரிமை கொடுக்கப்பட வேண்டும். அனைத்து மாநில மக்களுக்கும் சமஉரிமை கொடுக்கப்பட வேண்டும்.

மாநிலங்களைக் கலந்தாலோசிக்காமல், இந்தியாவை ஓர் அரசு ஆட்சி செய்ய முடியாது. நீங்கள் அரசியலமைப்பைப் படித்திருந்தால், இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என்று குறிப்பிட்டிருப்பதைக் காண முடியும். இந்தியா என்றால் இரண்டு விதமான பார்வைகள் உள்ளன. அதில் ஓன்று இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம். ஒரு மாநிலத்துடன் பேசுவது, அதன் பிரச்சனைகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதுதான் ஒன்றியத்தின் பணிகள்.

கூட்டாட்சி என்பதே அதன் அர்த்தம். தமிழகத்தில் உள்ள என் சகோதரரிடம் உங்களுக்கு என்ன வேண்டும் என நான் கேட்பேன். அவர்கள் தேவையை என்னிடம் சொல்வதுபோல எனக்குத் தேவையானதை நானும் கேட்டுப் பெறுவேன். இதுதான் கூட்டாட்சி. இது ராஜ்ஜியம் அல்ல. இந்தியா ஒரு ராஜ்ஜியம் கிடையாது; நீங்கள் ராஜாவும் இல்லை. இதை மறந்துவிடாதீர்கள். மாநில சுயாட்சியில் மொத்த இந்தியாவும் தமிழகத்திடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களை உங்களால் ஆள முடியாது. அது உங்களால் முடியவே முடியாது

இவ்வாறு அவர் பேசினார்.

உரையை முடித்து நாடாளுமன்ற வளாகத்தைவிட்டு வெளியேவரும் போது, தமிழகத்தை அதிகமுறை உச்சரித்தது ஏன் என அவரிடம் ஒருவர் கேள்வியெழுப்பினார். அதற்கு ‘நான் ஒரு தமிழன்’ என்று பதில் கொடுத்துள்ளார். அந்த காணொலி இப்போது வேகமாகப் பரவிவருகிறது.

இராகுல்காந்தியின் உரைக்குப் பெரும் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

Leave a Response