நாடாளுமன்றத்தில் நேற்று டி.ஆர்.பாலு பேசிய பேச்சு பெரும் கவனம் பெற்றிருக்கிறது.
அவர் பேசியதாவது….,
தற்செயலாக நாளை (பிப்ரவரி 3) அறிஞர் அண்ணா நினைவு தினம் வரும் வேளையில், அவர் மாநிலங்களவையில் உறுப்பினராக இருந்தபோது பேசியதை இங்கே பதிவு செய்கிறேன். “நான் ஒரு திராவிட நாட்டில் இருந்து வருகிறேன். நான் ஒரு திராவிடன் எனக் கூறிக்கொள்வதில் பெருமை கொள்கிறேன். இப்படிச் சொல்வதால் நான் குஜராத்திக்கோ மராட்டியருக்கோ எதிரானவன் இல்லை. திராவிடன் என்பவனுள் ஏதோவொன்று வித்தியாசமாக, தனித்துவமாக, உறுதியாக எழுப்புவதற்கு ஒன்று உண்டு.
குடியரசுத் தலைவர் தனது உரையில் உள்ளூர் மொழிகள் தேசிய கல்விக் கொள்கையின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருவதாகக் கூறியிருந்தார். இளநிலை பட்டப்படிப்புகளுக்கு உள்ளூர் மொழிகளில் தேர்வுகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டிருந்தார். நீட் என்ற போட்டித் தேர்வு நடத்தப்படுவது ஒரு கொடுமையான விசயம். தமிழ்நாட்டில் அந்தத் தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் 30க்கும் அதிகமான இளம் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
யாருக்கும் தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது எனத் தெரியவில்லை. நீட் தேர்வு வினா அனைத்தும் மத்திய பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பிளஸ்டூ வரை மாநில பாடத்திட்டப்படி மாணவர்கள் படிக்கிறார்கள். இரு வேறு பாடத்திட்டத்துக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. அதனால் மாணவர்கள் தேர்ச்சி பெறாமல் தற்கொலை செய்கின்றனர்.
இதையடுத்து தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சிக்கு வந்ததும் நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. 80 ஆயிரத்துக்கும் அதிகமான பிரமாண பத்திரங்கள் பெறப்பட்டன. அந்தக் குழுவே தமிழக மாணவர்களுக்கு நீட் தேவை இல்லை. அது ஒழிக்கப்பட வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரை செய்தது.
அதன்படி அனைத்துக் கட்சிக் குழுவினர் சேர்ந்து வலியுறுத்தியதன் அடிப்படையில், தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கலுக்கு ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிறகு அதற்கென சட்டமும் இயற்றப்பட்டு மாநில ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால், கடந்த ஐந்து மாதங்களாக அந்த மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு மாநில ஆளுநர் அனுப்பி வைக்காமல் இருக்கிறார். தொடக்கத்தில் மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சரை மாநில ஆளுநரிடம் பேச தமிழக முதல்வர் அனுப்பினார். பிறகு முதல்வரே நேரில் சென்று மாநில ஆளுநரிடம் சென்று பேசினார். எதுவும் நடக்கவில்லை.
பிறகு தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி எம்.பிக்கள் குழு குடியரசுத் தலைவரைச் சந்திக்க முயற்சித்தது. அவருக்கு உடல் நலமில்லாததால் மனுவை அதிகாரி மூலம் பெற்றுக் கொண்டு அனுப்பினார். பிறகு நாங்கள் இந்திய உள்துறை அமைச்சரைச் சந்தித்து மனு அளித்தோம். 20 நிமிடங்கள் நாங்கள் பேசியதைக் கேட்டறிந்த பிறகும் இந்த விசயத்தில் எதுவும் நடக்கவில்லை.
அதனால்தான் குடியரசுத் தலைவர் இந்த விவகாரத்தில் தலையிட்டு அந்த மசோதாவை தமது பரிசீலனைக்கு அனுப்பி வைக்க மாநில ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
எல்லாத் தளங்களிலும் நாங்கள் சென்று முறையிட்ட பிறகும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த விசயத்தை நாங்கள் எப்படி சமாளிக்கப்போகிறோம் எனத் தெரியவில்லை.
ஆளுநர் பதவி வகிப்பவருக்கு அரசியலமைப்புப் பற்றித் தெரிந்திருந்தும் அவர் எதுவும் செய்யாமல் இருக்கிறார். உள்துறை அமைச்சர் ஆவன செய்வதாக உறுதியளித்த பிறகும் கூட எதுவும் நடக்கவில்லை.
இதைத்தொடர்ந்து குடியரசு தின அணிவகுப்பு அலங்கார ஊர்தித் தேர்வின்போது தமிழகம் சார்பில் முன்மொழியப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார், வ.உ.சிதம்பரம் பிள்ளை போன்றோரின் பெருமை அறியாமல் அவர்களின் பின்புலம் பற்றி தேர்வுக்குழு உறுப்பினர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
மாநிலத்தில் ஒவ்வொரு முறையும் தேவை எழும்போது எங்களுடைய நலன்களைக் கோரி பிச்சைப் பாத்திரம் ஏந்தி இத்தனை தூரம் வருவது நல்லதாக இருக்காது. அத்தகைய சூழலை பிரதமர் நரேந்திர மோதி அனுமதிக்கக் கூடாது
இவ்வாறு டி.ஆர்.பாலு பேசினார்.