சோனியா காந்தி எதிர்ப்பு – பணிந்தது ஒன்றிய அரசு

எதிர்ப்புகள் வலுத்த நிலையில் சர்ச்சைக்குரிய கேள்வியைக் கைவிடுவதாக சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவித்துள்ளது.
சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வின் கேள்வித் தாளில் “வாசிப்பு உரைநடை பகுதி” (Comprehension) இடம் பெற்றிருந்தது.

அதில், “பெண் விடுதலை என்பது குழந்தைகள் மீதான பெற்றோர் அதிகாரத்தை சிதைத்திருக்கிறது என்பதை மக்கள் தாமதமாகவே உணர்கிறார்கள். கணவனின் செல்வாக்கிற்கு கீழ்ப்படிதலை மனைவி ஏற்பதன் வாயிலாகவே அவள் தன் குழந்தைகளிடம் இருந்து கீழ்ப்படிதலை பெற முடிகிறது.
பெண்களுக்கு அதிகம் சுதந்திரம் கிடைப்பதுதான், பல்வேறு குடும்ப, சமூகப் பிரச்சினைகளுக்குக் காரணம். பெண்கள் தங்களின் கணவருக்குக் கீழ்ப்படிவதில்லை. அதனால் பிள்ளைகள் பெற்றோருக்கும், வேலையாட்கள் எஜமானருக்கும் அடிபணிவதில்லை” போன்ற கருத்துகள் இடம் பெற்றிருந்தன.

இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. மக்களவையில் பேசிய காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு கேள்வித்தாளில் பெண்களைப் பற்றிய பிற்போக்குக் கண்ணோட்டத்தில் இருக்கும் கேள்வி குறித்த விவாகரத்தை எழுப்பி மத்திய அரசிடம் இருந்து விளக்கம் கோரினார். பிரதமர் மோடி அரசு இதற்காக மன்னிப்பு கோர வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.

இந்நிலையில், சர்ச்சைக்குரிய கேள்வி கைவிடப்படுகிறது. அந்தக் கேள்விக்கான முழு மதிப்பெண்ணும் மாணவர்களுக்கு வழங்கப்படும். அந்த கேள்வியில் உள்ள வாக்கியங்கள் சிபிஎஸ்இ வழிகாட்டுதல்களுக்கு இணங்க அமையவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response