மறைந்தார் மதுரை ஆதீனம் – மு.க.ஸ்டாலின் இரங்கல்

தமிழகத்தில் உள்ள தொன்மையான சைவ மடங்களில் மதுரை ஆதீனமும் ஒன்று. இந்த ஆதீனம் சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது.

இந்த மடத்தின்கீழ் தஞ்சை மாவட்டம் கஞ்சனூர் அக்னீஸ்வர சுவாமி கோயில், திருப்புறம்பியம் காசிநாத சுவாமி கோயில், கச்சனம் கைசின்னேஸ்வர சுவாமி கோயில் உள்ளிட்ட பல கோயில்கள் உள்ளன. இந்த ஆதீனத்துக்குச் சொந்தமாக பல ஆயிரம் ஏக்கர் நிலங்களும் உள்ளன.

இதில், குருமகா சன்னிதானமாக இருந்தவர் மதுரை ஆதீனம் என்றறியப்படும் அருணகிரிநாதர்.இவர் வயது முதிர்வு காரணமாக கடந்த 9 ஆம் தேதி திடீர் என உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது.

உடனடியாக அவர் மதுரை கே.கே. நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் மறைந்தார்.

இவருடைய திடீர் மறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கற்குறிப்பில்….

ஆன்மீகப் பணியிலும் மக்கள் பணியிலும் அருந்தொண்டாற்றி அனைவரின் அன்பிற்கும் உரியவராகத் திகழ்ந்த மதுரை ஆதீனம் திரு. அருணகிரிநாதர் அவர்களின் மறைவுச்செய்தி அறிந்து துயருற்றேன். அன்னாரது மறைவால் வாடும் ஆன்மீகப் பெருமக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response