மறைந்தார் ஈரோடு தமிழன்பன் – அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வு

தமிழ்ப் பெருங்கவி ஈரோடு தமிழன்பன்,நவம்பர் 22,2025 அன்று மறைந்தார். மூச்சுத் திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி மறைவெய்தினார்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை நெசவாளர் குடும்பத்தில் செ.இரா.நடராசன்-வள்ளியம்மாள் இணையரின் மகனாக 1933 செப்டம்பர் 28 ஆம் நாளில் பிறந்தவர் ஈரோடு தமிழன்பன். இவரது இயற்பெயர் ந.செகதீசன்.தமிழன்பன் எனும் புனைபெய்ரில் கவிதைகள் எழுதி கவியரங்குகளிலும் கலந்து கொண்டவர்.கலைஞர் கருணாநிதி தலைமையில் ஒரு கவியரங்கில் கலந்து கொண்டபோது அவரை ஈரோடு தமிழன்பன் என்று அழைத்தார் கலைஞர்.அதுவே அவருடைய பெயராக நிலைத்துவிட்டது.

இவருக்கு தமையர் இருவர், தம்பியர் ஐவர், தங்கை ஒருவர்.

ஈரோடு தமிழன்பன் சென்னிமலையில் பள்ளிப் படிப்பையும், கரந்தைத் தமிழ்க் கல்லூரியிலும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் உயர்கல்விப் படிப்பையும் முடித்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுகலைப் பட்டமும் தனிப்பாடல் திரட்டு ஓர் ஆய்வு என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றார்..ஈரோடு தமிழன்பன் அக்டோபர் 26, 1972 அன்று சாந்தகுமாரியை மணந்தார்.இவருக்கு பாப்லோ நெரூதா (சிலி நாட்டின் உலகப் புகழ் பெற்ற கவிஞரின் பெயர் இது), பாரதிதாசன் ஆகிய இரு மகன்களும் இவருக்கு உண்டு இருவரும் மருத்துவர்கள்.

ஈரோடு தமிழன்பன், ஈரோட்டில் மதரசா இஸ்லாமியா உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியை தொடங்கினார். சென்னை, புதுக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். அதன்பின் சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் செய்தி வாசிப்பாளாராகப் பணியாற்றினார்

கவிஞர், சிறுகதை ஆசிரியர், புதின ஆசிரியர், நாடக ஆசிரியர், சிறார் இலக்கியப் படைப்பாளி, வரலாற்று ஆசிரியர், திறனாய்வாளர், செய்தி வாசிப்பாளர், கட்டுரையாளர், ஓவியர், சொற்பொழிவாளர், ஹைக்கூ கவிஞர் உள்ளிட்ட பன்முகத் திறமைகளைக் கொண்டவர்.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களுடன் நெருங்கிப் பழகியவர். மறைந்த பெரும்புலவர் பெரியார் பேருரையாளர் பேராசிரியர் ந.இராமநாதன் அவர்களின் மாணவர். மரபுக் கவிதையில் தொடங்கி நவீன புதுக்கவிதை முறைக்கு முன்னோடியாகப் பாதை அமைத்தவர். ஏராளமான கவிஞர்களை உருவாக்கியவர். இளந்தலைமுறைக் கவிஞர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தவர்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வழங்கிய கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி விருது, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கத்தின் ‘உலகத் தமிழ்ப் பீட விருது’ போன்ற பல உயரிய விருதுகளைப் பெற்றவர்.
இவரின் படைப்புகள் 90 க்கும் மேற்பட்ட கவிதை உரைநடைத் தொகுப்புகளாக வெளிவந்துள்ளன.2004 ஆம் ஆண்டு வணக்கம் வள்ளுவ என்ற கவிதைப் படைப்பு நூலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.

நேற்று இவர் மறைந்ததிலிருந்து தமிழ்மக்களும் அரசியல்தலைவர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்திவருகின்றனர்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.அதோடு,அவருடைய தமிழ்த் தொண்டினைச் சிறப்பிக்கும் விதமாக அவருக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி நிகழ்த்த உத்தரவிட்டுள்ளார்.

Leave a Response