அடுத்த மதுரை ஆதீனம் தேர்வு – நித்யானந்தாவுக்கு இடமில்லை

தமிழகத்தில் உள்ள தொன்மையான சைவ மடங்களில் மதுரை ஆதீனமும் ஒன்று. இந்த ஆதீனம் சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது.

இந்த மடத்தின்கீழ் தஞ்சை மாவட்டம் கஞ்சனூர் அக்னீஸ்வர சுவாமி கோயில், திருப்புறம்பியம் காசிநாத சுவாமி கோயில், கச்சனம் கைசின்னேஸ்வர சுவாமி கோயில் உள்ளிட்ட பல கோயில்கள் உள்ளன. இந்த ஆதீனத்துக்குச் சொந்தமாக பல ஆயிரம் ஏக்கர் நிலங்களும் உள்ளன.

இதில்,292 ஆவது குருமகா சன்னிதானமாக இருந்தவர் மதுரை ஆதீனம் என்றறியப்படும் அருணகிரிநாதர்.இவர் வயது முதிர்வு காரணமாக கடந்த 9 ஆம் தேதி திடீர் என உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது.

உடனடியாக அவர் மதுரை கே.கே. நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் மறைந்தார்.

மடாதிபதி அருணகிரிநாதர் மறைவைத் தொடர்ந்து 293 ஆவது மடாதிபதியாக ஹரிஹரர் தேசிகர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2019 ஆம் ஆண்டில் மதுரை ஆதீனம் அருணகிரிநாதரால் இளவரசராக முடிசூட்டப்பட்டவர் ஹரிஹரர் தேசிகர். மதுரை ஆதீனமாக ஹரிஹரர் தேசிகருக்கு 10 நாளில் முடிசூட்டப்பட உள்ளதாக திருவாவடுதுறை ஆதீனம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக், 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த மடத்தின் இளைய ஆதீனமாக நித்யானந்தாவை நியமனம் செய்தார் அருணகிரிநாதர். அதனால், பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டன. இந்நியமனத்தை காஞ்சி, திருவாவடுதுறை ஆதீன மடங்கள் உள்ளிட்ட அனைத்து சைவ மடங்களும் கடுமையாக எதிர்த்தன.

ஆனாலும், நித்யானந்தாவை நீக்க முடியாது என ஆதீனம் அருணகிரிநாதர் அறிவித்தார்.

இந்நியமனத்துக்கு பல்வேறு குழுவினர் எதிர்ப்பு தெரிவித்து, பல போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் மதுரை ஆதீன மடத்தை அரசே ஏற்கப் போவதாகத் தகவல்கள் பரவின. இதையடுத்து 2012 ஆம் ஆண்டே நித்யானந்தாவை வாரிசுப் பொறுப்பில் இருந்து நீக்கி உத்தரவிடுவதாக மதுரை ஆதீனம் அறிவித்தார். இதையடுத்து நித்யானந்தா நியமனம் குறித்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.

இப்போது அருணகிரிநாதர் மறைவுக்குப் பிறகு நித்யானந்தா மீண்டும் மத்துக்கு வருவாரா? என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. அதை முறியடிக்கும் விதமாக உடனடியாக 203 ஆவது ஆதீனம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Leave a Response