ஒன்றிய அரசுக்கு பழ.நெடுமாறன் கடும் கண்டனம்

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில்….

நீட் தேர்வு -சமுதாய ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கு ஏற்படுத்தியுள்ள பாதிப்பைக் குறித்து ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை தர ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராசன் தலைமையில் ஒரு குழுவை தமிழக அரசு அமைத்திருப்பதை எதிர்த்து, பா.ச.க.வின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவிற்கு ஒன்றிய அரசின் சார்பில் அளிக்கப்பட்ட பதில் மனுவில், தமிழக அரசு தனியாகக் குழு அமைப்பதற்கு அதிகாரம் இல்லை. மாநில அரசின் அதிகாரவரம்பை மீறிய செயல் என குறிப்பிட்டுள்ளது.

ஒன்றிய அரசின் இந்தப் போக்கினை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மாநில அரசுகளைக் கலந்துகொள்ளாமல் தன்னிச்சையாக நீட் தேர்வை ஒன்றிய அரசு கொண்டுவந்தது மாநிலங்களின் உரிமைகளைப் பறித்ததாகும். இதன் விளைவாகத் தமிழகத்தில் சமுதாய ரீதியில் பின்தங்கிய மாணவர்கள் பெருமளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அது குறித்து ஆராய்ந்து தமிழக அரசிடம் அறிக்கை தருவதற்காக இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் ஒன்றிய அரசிடமும், உச்சநீதிமன்றத்திலும் முறையிட்டு சமூக நீதியை நிலை நிறுத்துவதற்கான உரிமையும், கடமையும் மாநில அரசுக்கு உண்டு. அதை மறுப்பது எதேச்சதிகாரப் போக்காகும்.

ஏற்கெனவே மாநிலங்களுக்குத் தன்னாட்சி அதிகாரங்கள் வழங்குவது குறித்து ஆராய்வதற்காக நீதியரசர் ராசமன்னார் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டதையும் மற்றும் பல மாநில அரசுகள் இத்தகைய குழுக்களை அமைத்ததையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அரசியல் சட்டத்தைத் திருத்துவதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கும் போது நீட் தேர்வை குறித்து ஆராய்வதற்காக குழு அமைப்பது அரசியல் சட்ட வரம்பை மீறியதாகும் என ஒன்றிய அரசு கூறுவது நகைப்புக்குரியதாகும்.

குறிப்பிட்ட பிரச்சனைக்காகத் தனக்குப் பரிந்துரைகள் அளிக்கக் குழுவை அமைக்கும் அதிகாரம் கூட மாநில அரசுக்குக் கிடையாது என வாதிடும் ஒன்றிய அரசின் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response