கூட்டணி அமைத்தார் டிடிவி.தினகரன் – அதனால் ஏற்பட்ட அவப்பெயர்

தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக, திமுக கூட்டணிக் கட்சிகளைத் தவிர்த்து, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக எனப் பல முனைகளாக இந்தத் தேர்தலில் போட்டி நிலவுகிறது. தேர்தலில் எந்தெந்தக் கட்சிகளுடன் கூட்டணி என்பது குறித்து இரு தினங்களில் தெரியவரும் என அமமுக பொதுச் செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஐதராபாத் பாராளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சியுடன் அமமுக கூட்டணி அமைத்துள்ளது.

இது தொடர்பாக, அமமுக தலைமைக்கழகம் இன்று (மார்ச் 8) வெளியிட்டுள்ள அறிவிப்பு:

“06.04.2021 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத்தேர்தலில், அமமுகவும், அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் கட்சியும் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அமமுகவுக்கும் ஏஐஎம்ஐஎம் கட்சிக்கும் இடையே இன்று ஏற்பட்ட ஒப்பந்தப்படி அமமுகவின் தலைமையிலான கூட்டணியில், ஏஐஎம்ஐஎம் கட்சிக்கு தமிழ்நாட்டில் கீழ்க்காணும் மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.

1. வாணியம்பாடி (47)

2. கிருஷ்ணகிரி (53)

3. சங்கராபுரம் (79)”.

இவ்வாறு அமமுக தெரிவித்துள்ளது.

இதற்கான ஒப்பந்தத்தில், அமமுக சார்பாக டிடிவி தினகரனும், ஏஐஎம்ஐஎம் சார்பாக அக்கட்சியின் தமிழ்நாடு பொறுப்பாளர் முகமது ரஹமதுல்லா தாயப், தமிழ்நாடு தலைவர் வக்கீல் அஹமது ஆகியோரும் கையெழுத்திட்டுள்ளனர்.

ஐதராபாத் பாராளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி கடந்த ஆண்டு நடைபெற்ற பிகார் தேர்தலில் 5 இடங்களைக் கைப்பற்றியது. மேலும், கணிசமான வாக்குகளையும் பிரித்ததால், காங்கிரசு-ராஷ்டிரிய ஜனதா தளக் கூட்டணிக்கு ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதன் மூலம் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ள ஒவைசியின் கட்சி, பிகாரைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்திலும் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்கிறது.

முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்று தமிழகத்திலும் காலூன்ற ஏஐஎம்ஐஎம் கட்சி தீர்மானித்துள்ள நிலையில், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, சங்கராபுரம் ஆகிய 3 தொகுதிகள் ஏஐஎம்ஐஎம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

ஒவைசி கட்சிக்கு தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் போட்டியிட பட்டம் சின்னத்தைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இவர் பாசகவின் ஆள் என்றும் ஒவ்வொரு மாநிலத்திலும் எதிர்க்கட்சிகளுக்குச் செல்ல வேண்டிய இஸ்லாமிய வாக்குகளைப் பிரிப்பதன் மூலம் பாசகவுக்கு வலுச்சேர்க்கிறார் என்கிற குற்றச்சாட்டு உண்டு.

இப்போது தமிழகத்திலும் கால் பதிக்கும் இவர் டிடிவி.தினகரனுடன் சேர்ந்திருப்பதால் பாசகவைத் தீவிரமாக எதிர்ப்பவர் என்கிற பெயர் பெற்றிருந்த அவருக்கும் பாசகவின் ஆளாக மாறிவிட்டார் என்கிற அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.

Leave a Response