பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து மாநிலங்களவையை முடக்கியது காங்கிரசு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று தொடங்கியது.அதில் கருத்தடை திருத்த மசோதா உள்ளிட்டவை இன்று தாக்கல் செய்யப்பட இருந்தது.

அப்போது காங்கிரசு உறுப்பினர்கள் மாநிலங்களவையின் மையப்பகுதிக்குச் சென்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து விவாதிக்க வேண்டும் எனவும், மத்திய அரசு இதற்கான விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர்.

இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்த மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, முதல் நாளிலேயே கடுமையான நடவடிக்கைகளை தாம் எடுக்கவிரும்பவில்லை எனக் கூறினார்.

இதனால் அவையில் அமளி நிலவியது. காங்கிரசு உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவை கூடியதும் காங்கிரசு மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்சினை குறித்துப் பேசினார்.

அவர் பேசுகையில் ‘‘பெட்ரால் விலை 100 ரூபாயைத் தொட்டு விட்டது. டீசல் விலை 80 ரூபாய்க்கு அதிகமாக விற்கிறது. பெட்ரோல், டீசலுக்கு விதிக்கப்படும் கலால் வரி மூலம் நாடுமுழுவதும் 21 இலட்சம் கோடி ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதனைக் கணிசமாகக் குறைத்தாலே பெட்ரோல், டீசல் விலை குறையும்’’ எனக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து காங்கிரசு உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பெட்ரால், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர். இதனால் அவை 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் பிற்பகல் 1 மணிக்கு கூடியபோதும் தொடர்ந்து காங்கிரசு உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்துப் பேச அனுமதிக்கக் கோரி அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

Leave a Response