சசிகலாவுடன் சீமான் சந்திப்பு இதற்காகத்தானா?

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை முடிந்து சசிகலா, சனவரி மாதம் 27 ஆம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து விடுதலை ஆனார்.அப்போது மருத்துவமனையில் இருந்ததார். அதன்பின் பெங்களூருவிலேயே ஓய்வெடுத்து வந்த சசிகலா பிப்ரவரி 8 ஆம் தேதி சென்னை வந்தார். சசிகலாவுக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பிறகு அவர் தியாகராயநகரில் உள்ள தனது இல்லத்தில் தங்கி ஓய்வு எடுத்து வருகிறார்.

இந்த நிலையில்,நேற்று ஜெயலலிதாவின் 73 ஆவது பிறந்த நாளையொட்டி தியாகராயநகரில் உள்ள தனது இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு அவர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். அப்போது, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் உடன் இருந்தார்.

அதைத் தொடர்ந்து அங்கிருந்தவர்களுக்கு சசிகலா இனிப்பு வழங்கினார். பின்னர் அவர் கூடியிருந்தவர்கள் மத்தியில் பேசியதாவது….

நான் கொரோனாவில் இருந்தபோது தமிழக மக்கள், தொண்டர்களின் வேண்டுதலால் நலம் பெற்று திரும்பியிருக்கிறேன்.

ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து தமிழக சட்டமன்றத் தேர்தலைச் சந்திப்போம். நம்முடைய இயக்கம் நூறாண்டைக் கடந்தும் ஆட்சியில் இருக்க வேண்டும் என்று ஜெயலலிதா கூறிச் சென்றுள்ளார். அதை மனதில் நிறுத்தி, வெற்றிக்காகப் பாடுபட வேண்டும். இது தான் நம்முடைய இலக்கு.

தொண்டர்கள் ஒன்றாக இணைந்து மீண்டும் ஆட்சி தொடர வேண்டும் என்பதே என் விருப்பம்.. விரைவில் தொண்டர்கள், பொதுமக்களையும் சந்திக்க நான் வருவேன். வரும் சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதா கூறியபடி வெற்றிக் கனியைப் பறிக்க வேண்டும்.

இவ்வாறு சசிகலா பேசினார்.

அதன்பின்னர், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார், ராதிகா சரத்குமார், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் பாரதிராஜா,இயக்குநர் அமீர், அனைத்து விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன். டிராபிக்ராமசாமி ஆகியோர் சசிகலாவைச் சந்தித்துப் பேசினர்.

இந்நிலையில், டி.டி.வி. தினகரன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது……

ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களைக் குறிப்பிட்டு சசிகலா பேசியிருக்கிறார். உண்மையான தொண்டர்கள் யார் என்பது அவரவருக்குத் தெரியும். அ.ம.மு.க. பொதுக்குழுக் கூட்டம் வியாழக்கிழமை (இன்று) நடக்க இருக்கிறது.இந்தக் கூட்டத்தில் தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்வோம். எங்கள் தலைமையில் 3 ஆவது அணி அமையும், அது முதலாவது அணியாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சசிகலாவை சரத்குமார், சீமான் உள்ளிட்டோர் சந்தித்த பிறகு எங்கள் தலைமையில் 3 ஆவது அணி அமையும் என்று டிடிவி.தினகரன் பேசியிருக்கிறார்.அதனால்,அக்கூட்டணியில் ச்மத்துவ மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி ஆகியன இணையக்கூடும் என்று சொல்லப்படுகிறது.

இதனால் முதன்முறையாக நாம் தமிழர் கட்சி கூட்டணி சேர்ந்து தேர்தலைச் சந்திக்கவிருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

Leave a Response