தமிழீழம் அமைந்தே தீரும் – மாவீரர் நாளில் வைகோ உறுதி

நவம்பர் 27. மாவீரர் நாளை ஒட்டி, மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ, தமது இல்லத்தில் தமிழ் ஈழம் அமையக் களத்தில் உயிர்க் கொடை ஈந்த விடுதலைப்புலிகளுக்கு, வீரவணக்கம் செலுத்தினார்.

அப்போது அவர் ஆற்றிய உரை….

இந்த நாள், தமிழ்ஈழத் தாயகத்தை மீட்பதற்காக, தாயக விடுதலைக்காகத் தங்கள் உயிர்களை ஈந்த மாவீரர்கள் நினைவைப் போற்றுகின்ற நாள்.

உலகம் இதுவரை கண்டும், கேட்டும் இராத மாபெரும் விடுதலைப் புரட்சியை நடத்திய தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் ஆணையை ஏற்று, அவரைத் தங்கள் நெஞ்சில் உயிராகக் கருதுகின்ற மாவீரர்கள், வீராங்கனைகள், களத்தில் நின்று போராடி, தங்கள் உயிர்களை ஈந்தனர்.

1982 ஆம் ஆண்டு, லெப்டிணன்ட் கர்னல் சங்கர் என்ற சத்தியநாதன், சிங்களப் படைகளின் துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்டு, மருத்துவத்திற்காகக் கடல் தாண்டி தமிழ்நாட்டுக்கு வந்தார். அப்போது இங்கே இருந்த தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுடைய மடியில் தலை வைத்தவாறு, தாய் தந்தை உறவுகளைப் பற்றி எண்ணாமல், தம்பி, தம்பி என்று தலைவரைப் போற்றி உயிர் துறந்த நாள், இந்த நாள் ஆகும்.

இனி இந்த நாள் மாவீரர் நாளாகப் போற்றப்படும்; அவர்களுடைய தியாகம் நினைவு கூரப்படும்; அவர்கள் சிந்திய செங்குருதியின் மீது ஆணையிட்டு, நமது தாயகக் கனவு நிறைவேறுவதற்காக களத்தில் போராடுவோம் என, வன்னிக் காடுகளுக்கு உள்ளே, தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள், 1989 நவம்பர் 27 ஆம் நாள் அறிவித்தார்கள். அந்த ஆண்டின் தொடக்கத்தில்தான், பிப்ரவரியில், நான் அங்கே வன்னிக்காடுகளுக்குச் சென்று, தேசியத் தலைவருடனும், விடுதலைப்புலிகளுடனும் இருந்தேன்.

இன்று உலகம் முழுமையும் பல்வேறு நாடுகளில், ஈழச் சகோதரர்களும், சகோதரிகளும், மாவீரர் நாள் கடைப்பிடிக்கின்றார்கள்.

விடுதலைப்புலிகள்,உலகம் இதுவரை கண்டும் கேட்டும் இராத போரை விடுதலைப்புலிகள் நடத்தினார்கள். ஓயாத அலைகள், அக்கினி அலைகள், யானை இறவுப் போர்க்களங்களில் வெற்றி மேல் வெற்றி பெற்றார்கள்.

ஆனால், அதன்பிறகு, இந்தியா, அமெரிக்கா, சீனா உட்பட ஏழு அணு ஆயுத வல்லரசுகள் சிங்களப் படைகளுக்கு ஆதரவாகக் களம் இறங்கின. தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தினார்கள். அதன் விளைவாக, விடுதலைப் புலிகளுக்குப் பின்னடைவு ஏற்பட்டது. உயிர்க்கொடை ஈந்த மாவீரர்களின் உடல்களும், எலும்புகளும் அந்த மண்ணில்தான் கலந்து இருக்கின்றன. அவர்கள் சிந்திய செங்குருதி வீண்போகாது. நான் பிரஸ்ஸல்சில் அறிவித்தது போல் சுதந்திரத் தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு ஒரு நாள் நடந்தே தீரும். தமிழ் ஈழம் அமைந்தே தீரும்.

இவ்வாறு வைகோ உரை ஆற்றினார்.

Leave a Response