தமிழீழத்தில் பாசறைப்பாணருக்கு நினைவேந்தல் – உணர்வுமயம்

பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா ஏப்ரல் 28 அன்று அதிகாலை மறைவுற்றார்.அவருக்கு தமிழீழம் மற்றும் உலகெங்கும் நினைவு வணக்க நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

அவற்றின் தொடர்ச்சியாக,பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு தமிழீழம் கிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

அதுபற்றிய விவரம்….

தமிழீழத் தேசியத் தலைவரால் “பாசறைப் பாணர்” விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்ட தமிழீழத் தேசிய எழுச்சிப் பாடகர் தேனிசை செல்லப்பா அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நினைவேந்தல் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் உரையாற்றும்போது,
“தேனிசை செல்லப்பா என்பவர் வெறும் கலைஞர் மட்டுமல்ல,அவர் எமது ஈழவிடுதலைப் போராட்டத்தின் விடுதலை உணர்வை ஆழமாக விதைத்த ஒரு உன்னத மனிதர்.

தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவராக இருந்தாலும், ஈழ மண்ணின் மீது கொண்ட பற்றினால் இங்கு வந்து எமது விடுதலையின் ஒரு பங்காளியாக மாறியவர்.செல்லப்பா அவர்களின் பாடல்கள் எமது போராட்ட உணர்வை மக்களிடையே கடத்தி,இளைஞர்களை விடுதலைக்காகப் போராடத் தூண்டிய வலிமை மிக்கவை என்பதை அவரது பல பாடல்கள் எமக்குப் பறைசாற்றியிருக்கின்றன.

ஈழவிடுதலைப் போர் என்பது சொல்லொணாத் தியாகங்களால் கட்டியெழுப்பப்பட்டது.தேனிசை செல்லப்பா போன்ற ஆளுமைகளின் அர்ப்பணிப்பும் தியாகமும் எமது போராட்டப் பாதையில் ஒரு பெரும் சக்தியாக அமைந்திருந்தது.இத்தகைய தியாகங்களின் பலத்தினால் நாம் கடக்க வேண்டிய கடினமான சவால்களைத் தாண்டி,எமது இலட்சியமான சுதந்திரத்தை நிச்சயம் ஒருநாள் அடைவோம்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து நிகழ்வுகளின் வரிசையில் தேனிசைச் செல்லப்பா அவர்களின் நினைவுகளைச் சுமந்த பாடல்கள் பாடப்பட்டதுடன்,நினைவுரைகளும் நிகழ்த்தப்பட்டன.

நினைவுரைகளைத் தமிழீழ இசையமைப்பாளர் செயல்வீரன்,கரைச்சிப் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன், பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன்,கிளி நகர வர்த்தக சங்கத்தின் தலைவர் இளையதம்பி விஜயசிங்கம்,”சங்குநாதப் புகழ்” பேபி ஆசிரியர்,ஆகியோர் நிகழ்த்தினர்.

கரைச்சிப் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்ற இந் நினைவேந்தல் நிகழ்வில்,நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்,மேனாள் வடக்கு மாகாணக் கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா,கரைச்சிப் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன்,பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன், உபதவிசாளர்கள்,பிரதேசசபை உறுப்பினர்கள், கிளி நகர வர்த்தக சங்கத்தின் தலைவர் இளையதம்பி விஜயசிங்கம்,போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் உறுப்பினர்கள்,ஈழத்தமிழ் கலைஞர்கள்,கட்சியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Response