மு.க.அழகிரி பாசகவில் சேரவிருக்கிறாரா? – கே.பி.இராமலிங்கம் சிறப்புப் பேட்டி

அரசியல் பயணத்தின் தொடக்கத்தில் பதினைந்து ஆண்டுகள் அதிமுகவிலும் அதன்பின் சுமார் முப்பதாண்டுகள் திமுகவிலும் பணியாற்றியவர் கே.பி.இராமலிங்கம்.

ஏப்ரல் 2020 இல் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட அவர் நவம்பர் 21 அன்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழகப்பயணத்தின் போது பாசகவில் இணைந்தார்.

அக்கட்சியில் இணைந்தபின் நம் தமிழ்வலை இணையதளத்துக்காக அவர் அளித்த சிறப்பு நேர்காணல்.

1. பாசகவில் இணைந்தது எப்படி? உங்களை அழைத்தது யார்?

பதில் : பாரதீய சனதாக் கட்சியின் தேசியத்தலைவர் திரு நட்டாஜி அவர்கள் சார்பில் தேசிய அமைப்புச் செயலாளர் திரு சந்தோஷ்ஜி அவர்கள் தொலைபேசி மூலமாகவும் தமிழ் மாநில பாசக பொறுப்பாளர் கர்நாடக மாநில அமைச்சர் திரு சிடி.இரவி மற்றும் தமிழகத் தலைவர் எல் முருகனும் நேரிலும் அழைத்தார்கள்.

2.அமித்ஷாவைச் சந்தித்தீர்களா? அவருடன் பேசியது குறித்து?

பதில்:-சந்தித்தேன்,அவர் என்னிடம்,உங்களோடு மாநிலங்களவையிலேயே மிக நெருக்கமாக உரையாடியுள்ளேன், பாரதீயசனதாக் கட்சி உங்கள் வரவால் மகிழ்ச்சியடைகிறது என்றார். அதற்கு நான், 15 ஆண்டுகாலம் எம்ஜிஆர் அவர்களுடனும் 30 ஆண்டுகாலம் கலைஞர் அவர்களுடனும் பணியாற்றிய நான் இனி என் வாழ்நாள்முழுவதும் நான் எப்படி பணியாற்றவேண்டும் என நீங்கள் கருதுகிறீர்களோ அதன்படி பணியாற்றுவேன், தாங்கள் காட்டும் பாதையில் தொடர்வேன் ‘what you want me to do I will do it sir’ என்று மிகப் பணிவாக உறுதியளித்தேன்.

3.மாணவப்பருவம் முதல் திராவிட இயக்கப் பாரம்பரியத்தில் வந்த நீங்கள் அதற்கு நேரெதிரான கொள்கை கொண்ட இடத்தில் சேர்ந்தது ஏன்?

பதில்:-பாரதீயசனதாக் கட்சி திராவிட பாரம்பரியத்திற்கு நேரெதிரான கட்சி என்பதை என்னால் ஏற்க இயலாது. அண்ணாவும்,எம்ஜிஆரும்,கலைஞரும் தேசத்தலைவர்கள் எப்படி இருக்கவேண்டும் என்று கருதினார்களோ அதற்கு ஒருபடிமேலேயே பாரதீயசனதாக்கட்சியின் ஆட்சித்தலைமையான பாரதப்பிரதமர் நரேந்தரமோடி அவர்கள் இருக்கிறார்கள்.

அவர், தேசப்பாதுகாப்பையும்,சமூக ஒற்றுமையையும் பாதுகாப்பதோடு பொருளாதார சீரமைப்பையும் மிகச்சிறப்பாக ஒழுங்குபடுத்துகிறார். 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் போதும் 2011 சட்டமன்றத் தேர்தலின் போதும் தேர்தல் பரப்புரையில் தலைவர் கலைஞரே பாஜக திராவிடபாரம்பரியத்திற்கு எதிரானது அல்ல என்று தமிழகத்தின் மேடைகளில் முழங்கியுள்ளார்.

ஆகவே திராவிட பாரம்பரியத்திற்கு எதிராக நான் போகவில்லை. திராவிடத் தலைவர்கள் வழியில் தான் என்முடிவை எடுத்துள்ளேன்.அதுமட்டுமல்ல முரசொலிமாறனை பாரதீயசனதாவின் தலைவர் பாரதப் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் அரசில் மத்திய அமைச்சராகவே பணியாற்றியதால் உதித்தது தான் ‘சன்டீவி ‘குழுமம் என்பதும் நாடு நினைவில் வைத்துள்ளது,மறப்பவர்களுக்கு நினைவூட்டும் பணி உள்துறை அமைச்சரால் எனக்கு வழங்கப்பட்டுள்ளது.

4.உங்களுடைய உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்காததால் இம்முடிவை எடுத்தீர்களா?

பதில்:-உண்மைதான், உழைப்பை அங்கீகரிக்க மறுப்பவர்களிடம் தாழ்பணிந்து வாழ பழக்கப்படாதவன் நான். கலைஞரிடம் 1990 ஆம் ஆண்டு சேரும் போது திமுக நாடாளுமன்றத் தேர்தலில் ஓர் இடத்தில் கூட வெற்றிபெறாத நிலையில் தான் சேர்ந்தேன். அறிவாலயம் செல்வதற்கு முதல்நாள் இரவு அண்ணன் துரைமுருகன் என்னைச் சந்தித்தபோது,என்னை கலைஞர் அன்போடு வைத்திருப்பாரா? பதவியைப்பற்றிக் கவலையில்லை எனக்கு மரியாதை முக்கியம் என்று சொன்னேன் உன்னை கலைஞர் மரியாதையாக வைத்திருப்பார் என்றார் அண்ணன் துரைமுருகன்.அவரது உறுதிக்கு மேலேயே மரியாதையாக என்னை வழிநடத்தினார் தலைவர் கலைஞர்,அந்த நிலை அவர் செயல்படமுடியாத தலைவரான பின்பு இல்லை என்பது உண்மை தான்.ஆமாம் கட்சித்தலைவர் இருக்கும்போதே அவர் மகன் செயல்தலைவர் என்றால் தலைவர் செயல்படமுடியாத தலைவர்தான்.

5. கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களைத் தேடித்தேடி பாசகவில் சேர்க்கிறார்கள் என்று சொல்லப்படுகிறதே?

பதில்:-அண்ணன் இராதாரவி,நயினார் நாகேந்தரன்,விபி துரைசாமி,அண்ணாமலை, கௌதமி,கஸ்தூரி,நக்மா,திருமதி குஷ்புசுந்தர் போன்றவர்கள் கவுண்டர்களா? இல்லையே!அறிவும் அனுபவமும் செல்வாக்கும் உள்ளவர்கள் பாசக வில் சேருகிறார்கள் என்று கருதுகிறேன்.

6.உங்களுடைய பெயரும் புகழும்தான் பாசகவிற்குப் பயன்படவிருக்கிறது. அப்படி இருக்கும்போது அக்கட்சியால் உங்களுக்கு என்ன பலன்?

பதில்:-என்னுடைய பெயரும் புகழும் கட்சிக்குப் பயன்படும் என்ற கேள்வியே எனக்குப் பெருமைதான்.என்னால் நான் சார்ந்துள்ள இயக்கம் பெருமை பெருகிறது என்றால் அந்தத் தொண்டர்கள் தலைவர்கள் என் மீது எத்தகைய பாசத்தைக் காட்டுவார்கள்? அந்தப் பாசம் தான் எனக்குப் பலன்? வேறு பலன்களை எதிர்பார்ப்பவன் நான் அல்ல என்பது தமிழகத்தின் தற்போதய பிரதான இயக்கங்களான திமுக,அதிமுக கட்சியில் உள்ள முக்கிய தலைவர்களுக்கே தெரிந்ததுதான்.

7.எரிவாயு உருளை பதிவு செய்யப்போனால் கூட இந்தியில் பேசுகிறார்கள். இதனால் அடித்தட்டு மக்கள் அவதியுறுகிறார்கள். இதுபோன்ற விசயங்களில் பாசகவுக்குள் உங்கள் குரல் ஒலிக்குமா?

பதில்:-உறுதியாக ஒலிக்கும்,மாநிலமக்களின் வாழ்வாதாரம் உயரவும்,தாய்மொழி உணர்வு, உள்நாட்டுப் பாதுகாப்பு இவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து மத்திய அரசின் திட்டங்கள் அந்த அந்த மாநில மொழிகளில் அறியப்படும் வகையில் மத்தியபேரசின் நடைமுறை அமைய பாரதப்பிரதமரை சந்திக்கும் போது என் கருத்துகளை வேண்டுகோளாக வைத்து நிறைவேற்றமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

8.நீங்கள் தலைவராக இருக்கும் இயற்கை நீர்வளப் பாதுகாப்பு இயக்கம் இனி என்னவாகும்?

பதில்:-நான் என்னுடைய ஜுன் 2 ஆம் தேதியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டபடி ‘இயற்கை நீர்வளப் பாதுகாப்பு இயக்கம்’தொடர்ந்து அரசியல் சார்பற்ற பொதுநல அமைப்பாக என் தலைமையிலேயே சுதந்தரமாக இயங்கும்.

9.வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு இருக்கிறதா?

தற்போது இயக்கத்தில் புதியதாக பிறந்துள்ள குழந்தை நான்.சட்டமன்றத் தேர்தலில் குழந்தைகள் நிற்க தேர்தல் சட்டத்தில் இடமில்லை.

10.மு.க.அழகிரியை நீங்கள் பாசவுக்கு அழைத்து வருவீர்கள் என்று சொல்லப்படுவது பற்றி..?

பதில்:-தங்களது கேள்வியிலே பதிலும் இருக்கிறது.சொல்லப்படுவதாக,ஆமாம் அப்படித்தான் சொல்லப்படுகிறது.ஆனால் அதில் உண்மையில்லை.அவரிடம் நான் சார்ந்துள்ள இயக்கத்தின் அருமை பெருமைகளை விளக்குவேன். நான் சார்ந்துள்ள இயக்கத்தை வலுப்படுத்த என்னைச் சார்ந்தவர்களை,நண்பர்களை,தோழர்களை அழைப்பேன். அப்படி என் அண்ணன் அழகிரியையும் அழைப்பேன்.என் அழைப்பை ஏற்பதும் ஏற்காததும் அவரது உரிமை. அதில் நான் தலையிடமாட்டேன்.ஆனால் என்றும் அவர் என் பாசத்திற்கும்,நேசத்திற்கும் உரிய அண்ணன் தான் அதில் மாற்றம் என் வாழ்நாளில் வராது.

– அ.தமிழன்பன்

Leave a Response