வாரத்தில் ஆறுநாட்கள் அரசு அலுவலகங்கள் செயல்படும் – தமிழக அரசு அறிவிப்பு

மே 18 ஆம் தேதி முதல் 50 விழுக்காடு ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படும். வாரத்தில் 6 நாட்கள் வேலை நாட்களாக இருக்கும், சுழற்சி முறையில் அரசுப் பணியாளர்கள் பணியாற்றுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு சார்பில் தலைமைச் செயலர் பிறப்பித்த உத்தரவில்….

கோவிட் பேரிடரால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக மே 3 ஆம் தேதி முதல் அரசு அலுவலக ஊழியர்கள் எண்ணிக்கை 33 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. மே 18 ஆம் தேதி முதல் அரசு அலுவலகங்கள் சமூக விலகல் நடைமுறையுடன் வழக்கமான முறையில் இயங்கும்.

50 விழுக்காடு ஊழியர்களுடன் வரும் நாட்களில் அரசு அலுவலகங்கள் செயல்படும். அதே நேரம் ஊரடங்கு காரணமாக இழந்த வேலை நாட்களை ஈடுகட்டும் விதமாக வாரத்தில் 6 நாட்களும், சனிக்கிழமையும் அலுவலகங்கள் வழக்கமான அலுவலக நேரத்துடன் செயல்படும்.

கீழ்கண்ட நடைமுறைகள் வர உள்ளன:

* வாரத்தில் 6 நாட்களும் சனிக்கிழமையும் வேலை நாட்கள். வழக்கமான வேலை நேரத்துடன் இயங்கும்.

*அனைத்து அரசு அலுவலகங்களும் 50 விழுக்காடு ஊழியர்களுடன் இயங்கும்.

* ஊழியர்கள் 2 விதமாகப் பிரிக்கப்படுவர். ஒரு குழு திங்கள், செவ்வாய் பணியாற்றினால் அடுத்த குழு புதன் வியாழன் பணியாற்றும். முதல் குழு வெள்ளி, சனி பணியாற்றும்.

* இவ்வாறு சுழற்சி முறையில் பணியாற்றுபவர்கள் தேவைப்படின் அழைக்கும்போது பணிக்கு வருவார்கள்.

* அனைத்து குரூப்-ஏ தகுதி அலுவலர்கள், அலுவலகத் தலைமைப் பொறுப்பில் உள்ள அலுவலர்கள் வாரத்தின் அனைத்து நாட்களிலும் அலுவலகம் வரவேண்டும்.

* அனைத்து அலுவலர்கள்/ அலுவலக ஊழியர்கள், அலுவலகப் பணியாளர்கள் எந்நேரமும் அலுவலகப் பணிக்குத் தயாராக இருக்க வேண்டும், எந்தவித மின்னணு, இ-மெயில், காணொலி அழைப்புக்கும் அவர்கள் பதிலளிக்கத் தயாராக இருக்க வேண்டும்.

* தேவை இருப்பின் வழக்கமான அலுவலக நடைமுறை என்றில்லாமல் தேவைப்படின் இடையில் உள்ள அலுவலர் இல்லாமல் மேலே உள்ள துறைகளுக்கு தகவல், கோப்புகள் செல்லலாம்.

* இந்த நடைமுறை அனைத்து அரசு மாவட்ட அளவிலான அரசு அலுவலகங்கள்/ மக்களோடு நேரடித் தொடர்புள்ள கள அளவிலான ஆணையங்கள், போர்டுகள், பல்கலைக்கழகங்கள், கம்பெனிகள், பயிற்சி மையங்கள், கூட்டுறவு அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு சார் அலுவலகங்களுக்குப் பொருந்தும்.

* காவல்துறை, பொது சுகாதாரத்துறை, மாவட்ட நிர்வாக அலுவலகங்கள், அரசு கருவூலங்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு இது பொருந்தாது, அவைகள் வழக்கம்போல் மார்ச் 25 பிறப்பிக்கப்பட்ட பேரிடர் மேலாண்மைச் சட்டம் வழிகாட்டுதல் அடிப்படையில் செயல்படும்.

* தேவைப்படின் பேருந்து போக்குவரத்து அமைத்துத் தரப்படும். மேற்கண்ட உத்தரவை நடைமுறைப்படுத்துவதை சம்பந்தப்பட்டவர்கள் உரிய முறையில் கண்காணித்து அமல்படுத்தவேண்டும்.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Leave a Response