ஈரோடு மாவட்டத்தில் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் தேதி தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 2 பேருக்கு முதல் முதலாக கொரோனா தொற்று உறுதியானது. அதன்பிறகு ஒருசிலருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவர்கள் அனைவரும் கொரோனாவில் இருந்து மீண்டதால், சில நாட்களில் தொற்று இல்லாத மாவட்டமாக ஈரோடு மாறியது. ஆனால் மீண்டும் தொற்றுப் பரவல் வேகமெடுத்தது.
கொரோனா 2 ஆவது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு 3 ஆவது அலை மீண்டும் பரவியது.
பொதுமக்கள் பலர் ஆர்வமாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதன் காரணமாக 3 ஆவது அலை பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல் அமைதியாக ஓய்ந்தது. கடந்த மாதம் 15 ஆம் தேதி யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. அதன்பிறகு ஒருவர் அல்லது 2 பேருக்குத் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. கடந்த ஒரு வாரமாக யாருக்கும் புதிய தொற்று ஏற்படவில்லை.
இந்தநிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒரே ஒரு நபரும் நேற்று குணமடைந்தார். இதனால் கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு கொரோனா இல்லாத மாவட்டமாக ஈரோடு மாறியது.
ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரை மொத்தம் 1 இலட்சத்து 32 ஆயிரத்து 667 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர். இதில்1 இலட்சத்து 31 ஆயிரத்து 933 பேர் குணமடைந்து உள்ளனர். இதுவரை 734 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியதால் ஈரோடு மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.