சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய மக்கள் – செங்கல்பட்டில் பரபரப்பு

சென்னை கோயம்பேட்டில் இருந்து திருச்சி நோக்கி புறப்பட்ட அரசு விரைவுப் பேருந்து நேற்றிரவு செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியைக் கடந்து சென்றது. அப்போது அங்கிருந்த சுங்கச்சாவடி ஊழியர் அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் சுங்கக்கட்டணம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் சுங்கச்சாவடி ஊழியருக்கும் பேருந்து ஓட்டுநருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி இருவரும் கைகலப்பில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த ஓட்டுநர் பேருந்தை சுங்கச்சாவடியின் குறுக்கே பக்கவாட்டில் நிறுத்தியதால் வேறு வாகனங்கள் எதுவும் சுங்கச்சாவடியைக் கடந்து செல்ல முடியவில்லை.

இதன் காரணமாக அப்பகுதியில் 5 மணி நேரமாக போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டதால் கடும் நெரிசல் காணப்பட்டது. இதற்கிடையில் நெரிசலில் சிக்கித் தவித்த பேருந்துகளில் இருந்த பயணிகள் சிலர் கீழே இறங்கி ஆத்திரத்துடன் டோல்கேட் பூத்துகள், சிசிடிவி கேமராக்கள், ஊழியர்களின் இருசக்கர வாகனங்கள் என அங்கிருந்த அனைத்தையும் அடித்து நொறுக்கினர்.

தகவல் அறிந்து அங்கு சென்ற காவல்துறையினர், பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போக்குவரத்து சீரானது. அரசு ஓட்டுநர் மற்றும் நடத்துநரைத் தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள் மற்றும் வன்முறையில் ஈடுபட்ட சிலரை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுங்கச்சாவடி என்கிற பெயரில் அரசாங்கம் நடத்தும் கட்டணக்கொள்ளையின் எதிர்வினையாகவெ இதுபோன்ற நிகழ்வுகள் அவ்வப்போது நடப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Response