பெட்ரோல் டீசல் விலை கடும் உயர்வு – சுமையுந்து உரிமையாளர்கள் போராட்டம் அறிவிப்பு

தென்மாநில சுமையுந்து (லாரி) உரிமையாளர்கள் நலச்சங்கக் கூட்டமைப்பின் கூட்டம் சேலத்தில் நேற்று மாலை நடந்தது. இதில் தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் தென்மாநில சுமையுந்து உரிமையாளர்கள் நலச்சங்க கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சண்முகப்பா அளித்த பேட்டி:

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தில் உள்ளது. இந்தியாவிலுள்ள 18 மாநிலங்களை விட தமிழகத்தில் தான் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த வரியைக் குறைக்க வேண்டும். 15 ஆண்டு பழமையான வாகனங்களை அழிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் முடிவால் 6 இலட்சம் வாகனங்கள் பாதிக்கப்படும். 2005 முதல் சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதை நிறுத்த வேண்டும். அதேபோல் பாஸ்டேக் முறையினால் வாகன உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுங்கச்சாவடிகளில் தனியாகப் பணம் செலுத்தும் ஒரு வழியை ஏற்படுத்த வேண்டும். மத்திய அரசு டீசல் விலையைக் குறைக்கவும், மாநில அரசு வாட் வரியைக் குறைக்கவும் 15 நாட்கள் கெடு விதிக்கப்படும். அரசுகளின் கவனத்தை ஈர்க்க, வரும் 26 ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் கோரிக்கை மனு அளிக்க உள்ளோம். அதன்பிறகு பெங்களூருவில் நடைபெறும் மாநாட்டில், வரும் மார்ச் 15 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்வோம்.

15 ஆண்டுகளான வாகனங்கள் என்பதை 20 ஆண்டாக உயர்த்தாவிட்டால் பல இலட்சம் லாரி தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்வார்கள். எங்களது வேலைநிறுத்தப் போராட்டத்தில் லாரி உரிமையாளர்கள் மட்டுமல்ல, வணிகர்கள், விவசாயிகள், தொழிற்சங்கங்கள் என அனைத்துத் தரப்பினரும் பங்கேற்க உள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு வரும் தேர்தலிலும் எதிரொலிக்கும். விலை உயர்வால் பாமர மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். சேலம் ஓமலூர் சுங்கச் சாவடி, சென்னையில் ஒரு சுங்கச்சாவடி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபடுவோம். மத்திய அமைச்சர் மாற்று வாகனத்தை பயன்படுத்துங்கள் என்று கூறியுள்ளார். அதுபோன்ற வாகனங்களைக் கண்டுபிடித்துக் கொடுத்தால் ஓட்டத் தயாராக உள்ளோம். வேலை நிறுத்தப் போராட்டத்தில் தென் மாநிலங்களில் மட்டும் 26 இலட்சம் வாகனங்கள் பங்கேற்க உள்ளது.

இவ்வாறு சண்முகப்பா கூறினார்.

Leave a Response