தொடர்ந்து போராடுவோம் – நாம்தமிழர்கட்சி வழக்கறிஞர் பாசறை அதிரடி

அண்மையில், ஆந்திர மாநிலம், திருப்பதி, எஸ்.ஆர்.புரம் வடமாலாபேட்டை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள சுங்கச்சாவடியில் தமிழக மாணவர்களும்,பொதுமக்களும் சுங்கச்சாவடி ஊழியர்களாலும், உள்ளூர் ஆட்களாலும் ஆயுதங்களைக் கொண்டு மிகக்கொடூரமான முறையில் தாக்கப்பட்டனர்.

சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தும் பாஸ்டேக் முறை பழுதாக இருப்பதாகக்கூறி, அதற்குப் பதிலாக இரு மடங்கு சுங்கக்கட்டணத்தைப் பணமாகச் செலுத்தக்கூறியதை எதிர்த்துக் கேள்வி கேட்டதற்காக தமிழர்களை இழிவாகப் பேசியும், தமிழக வாகனங்களை அடித்து உடைத்தும், பெண்கள், முதியவர்கள் எனப் பாராது தமிழகத்தைச் சேர்ந்த பொதுமக்கள், ஆந்திர சட்டக்கல்லூரிகளில் படிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஆகியோர் மீது ஆயுதங்களைக் கொண்டு கோரத்தாக்குதலைத் தொடுத்ததுமான கொடுஞ்செயல்கள் அரங்கேறின.

அதுமட்டுமின்றி தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களைக் குறிவைத்துத் தாக்குதலும் நடத்தப்பட்டது.

தமிழகமெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்நிகழ்வுக்குக் கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் பாசறை சார்பாக சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் பாசறை மாநிலச் செயலாளர் சங்கர் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் சங்கர், தவறை அவர்கள் செய்துவிட்டு அதைப்பற்றிக் கேட்டதற்காக தமிழக மாணவர்கள் மீது கொடூரதாக்குதல் நடத்தியுள்ளனர். அதோடு அவர்கள் மீதும் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆந்திர அரசாங்கம் உடனடியாக, மாணவர்கள் மீதான வழக்குகளை இரத்து செய்யவேண்டும். மாணவர்கள் மற்றும் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களைத் தேடித்தேடித் தாக்கியோர் அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அதோடு, பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் அவர்களுடைய வாகனங்களுக்கும் உரிய இழப்பீட்டை ஆந்திர அரசு வழங்கவேண்டும். தமிழக அரசு இதை வலியுறுத்திப் பெற்றுத்தர வேண்டும்.

அதுவரை நாங்கள் சனநாயக ரீதியாகவும் சட்டரீதியாகவும் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம்

இவ்வாறு வழக்கறிஞர் சங்கர் தெரிவித்தார்.

Leave a Response