தில்லி உபி அசாம் – பாஜகவின் கொடூர வன்முறைகளைப் பட்டியலிடும் பெ.மணியரசன்

ஜே.என்.யு. வன்முறை,துணை வேந்தர் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்….

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி.யினர் 5.1.2020 இரவு தில்லி சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடத்திய வன்முறை வெறியாட்டம், மோடி அரசு – இந்தியாவில் இட்லரின் பாசிச ஆட்சியை நிலைநிறுத்தும் வேலையில் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது.

நேரு பல்கலைக்கழகத்தின் வாயில்கள் மற்றும் சுற்றுச்சுவரைச் சுற்றி பல நாட்களாகக் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். முகமூடி அணிந்து கொண்டு, ஏ.பி.வி.பி. வன்முறையாளர்கள் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்களையும், பேராசிரியர்களையும் தாக்கிப் படுகாயப்படுத்திப் பல மணி நேரம் வன்முறை வெறியாட்டம் நடத்தியுள்ளனர்.

அப்பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் அயிசே கோஷைத் தேடிப் பிடித்துத் தாக்கியுள்ளனர். அம்மாணவியின் முகம் அடையாளம் தெரியாத அளவிற்குப் படுகாயப்படுத்தப் பட்டுள்ளது.

அதேபோல், இந்துத்துவா அரசியலை ஏற்காத பேராசிரியர்களையும், தேடித்தேடி தாக்கியுள்ளனர். தாக்கப்பட்டவர்களில் பலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. ஆனால், அனைத்திந்திய மருத்துவ அறிவியல் (எய்ம்ஸ்) மருத்துவமனையில் அனைவர்க்கும் முதலுதவி செய்து வலுக்கட்டாயமாக வெளியே அனுப்பி விட்டனர். இதை அம்மருத்துவமனையில் பணிபுரியும் அலுவலர்கள் சிலரே ஏடுகளுக்குத் தெரிவித்துள்ளனர்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து சனநாயக வழியில் போராடிய தில்லி ஜாமியா மிலியா இசுலாமியப் பல்கலைக்கழக மாணவர்களை, அலிகர் முசுலிம் பல்கலைக்கழக மாணவர்களை அண்மையில் காவல்துறையினர் கடுமையாகத் தாக்கினர். நேரு பல்கலையில் காவல்துறையினரின் கண்காணிப்பில் ஏ.பி.வி.பி.யின் முகமூடி வன்முறையாளர்கள் தாக்கியுள்ளனர். காவல்துறையினர் குவிந்திருந்த வாயில் வழியாகத் தான் முகமூடி வன்முறைக் கும்பல் சாவகாசமாக வெளியேறியுள்ளது.

உத்தரப்பிரதேசம் மீரட்டில் காவல்துறையினர் அப்பாவிகள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் படுகாயமுற்றவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு போனபோது அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க மறுத்துத் திருப்பி அனுப்பினர். அதில் இரண்டு பேர் இறந்து போனார்கள். உ.பி.யில் பா.ச.க.வின் யோகி ஆதித்தியநாத் ஆட்சி நடக்கிறது.

அசாமில் பா.ச.க.வின் சர்வானானந்தா கோனோவால் ஆட்சி, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்தவர்களை சுட்டுக் கொன்றது. அங்கும் காயம் பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகள் மறுத்துவிட்டன. பா.ச.க. அரசுகளின் அழுத்தத்தின் பேரில்தான் இம்மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்திருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

மோகன் பகவத் – மோடி அரசின் இந்துத்துவா கலகத் திட்டம் – ஒரே பாணியில் இருப்பதை நேரு பல்கலைக்கழகத் தாக்குதலும் அடையாளம் காட்டுகிறது.

நேரு பல்கலைக்கழக மாணவர்களையும், பேராசிரியர்களையும் படுகாயப்படுத்தித் தப்பித்த வன்முறைக் கும்பலில் உள்ள அனைவரையும் தளைப்படுத்தவும், இத்தாக்குதலுக்கு உடந்தையாகச் செயல்பட்ட அப்பல்கலைக்கழகத் துணை வேந்தரையும் கைது செய்து, பதவி நீக்கம் செய்யவும், இவ்வன்முறைச் சதியில் பங்கு கொண்ட – துணை நின்ற அனைவரையும் சிறையில் அடைக்கவும், ஒருங்கிணைந்த மக்கள் எழுச்சி அனைத்திந்திய அளவில் தேவை!

பா.ச.க.வினர் தமிழ்நாட்டில் அதே பாணி இந்துத்துவா கலகங்களை நடத்தாமல் தடுக்கத் தமிழ் மக்கள் கட்சி வேறுபாடு இன்றி, விழிப்பாய் இருக்க வேண்டும். பா.ச.க.வை விலக்கி வைக்க வேண்டும்!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response