விஜய்யை தொடர்ந்து நடிகர் சூர்யா அரசியலுக்கு வருகிறார்?

சூர்யா நடிப்பில் மே 15 ஆம் தேதி வெளியான ‘கருப்பு’ என்ற படம் உலகளவில் 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.தமிழ்நாட்டில் மட்டும் தயாரிப்பாளரின் பங்காக சுமார் 85 கோடி வசூல் என்கிற பெரும் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.நடிப்பு,திரைப்படத் தயாரிப்பு ஆகியனவற்றைத் தவிர்த்து சூர்யா அவரது ‘அகரம் அறக்கட்டளை’ மூலம் கல்வி உள்பட பல்வேறு சமூகப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில்,அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது.அதில் பேசிய வீரமணி என்பவர்,காலம் முடிவு செய்துவிட்டது.கடவுள் முடிவு செய்துவிட்டார்.சூர்யா மக்கள் தலைவராக வருவதை யாராலும் தடுக்க முடியாது என்று கூறினார்.

அந்தப்பேச்சு சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவியது.இதனால் சூர்யா அரசியலில் களமிறங்கப் போகிறார் என்கிற தகவல் ரெக்கை கட்டிப் பறக்கத் தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து நேற்று சூர்யா சார்பில், சூர்யா தலைமை நற்பணி இயக்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது…

கடந்த 28 ஆம் தேதி நடைபெற்ற மாநில,மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்புப் பேச்சாளராக கலந்துகொண்ட வீரமணி.இது எனது தனிப்பட்ட கருத்து என்று தெளிவாகக் குறிப்பிட்ட பின்னரே அவரது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.ஆனால்,அவரது உரையை தவறான விளக்கத்துடன் சோஷியல் மீடியாக்களில் பரப்பி,அது மன்றத்தின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்ற தோற்றத்தை உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

இதனை யாரும் நம்பவோ,பொருட்படுத்தவோ வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்.கடந்த 3 ஆண்டுகளாக வீரமணி மன்றத்தின் நிர்வாகத்தில் இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.அதேபோல்,சூர்யாவிற்கு அரசியலுக்கு வருவதற்கான எந்தவித எண்ணமும் இல்லை.அகரம் அறக்கட்டளை மற்றும் நற்பணி இயக்கத்தின் மூலமாக மக்களுக்கான சமூகச் சேவைகளை தொடர்ந்து ஆற்றி வருவதே அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளித்து வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திரைப்படத்துறையில் இருந்துகொண்டிருந்த நடிகர் விஜய் நேரடியாக முதலமைச்சர் ஆகியிருப்பதால் பல நடிகர்களுக்கு அரசியல் ஆசை வந்திருக்கிறது.அதன் வெளிப்பாடுதான் சூர்யா இரசிகரின் பேச்சு என்று சொல்லப்படுகிறது.

சூர்யா நற்பணி இயக்கம் இப்படி அறிக்கை வெளியிட்டாலும்,நல்லவர்கள் எல்லாம் வெளியில் இருப்பதால்தான் அல்லவர்கள் அரசியலில் அதிகாரம் செலுத்துகிறார்கள் என்று நடிகர் சிவகுமார் சொல்வார்,அந்த அடிப்படையில் பல்வேறு நற்பணிகள் செய்துவரும் சூர்யா அரசியலுக்கு வருவது நல்லது அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்கிற கருத்துகள் உலவிக்கொண்டிருக்கின்றன.

Leave a Response