இந்தி நடிகையின் செயலால் ரஜினிக்கு சிக்கல்

டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் ஆசிரியர் சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடந்து கொண்டு இருந்தது. அப்போது, அங்கு முகமூடி அணிந்து வந்த பாஜக மாணவர் அமைப்பினர், இரும்புக் கம்பி, கம்பு போன்றவற்றால் மாணவர்களைச் சரமாரியாக தாக்கினர். இந்தத் தாக்குதலில் பலர் காயம் அடைந்தனர்.

இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை இந்தத் தாக்குதல் ஏற்படுத்தியது. சோனியா காந்தி, ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். தாக்குதல் தொடர்பாக டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடத்தியவர்களைத் தேடி வருகிறது.

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தேச விரோத செயல்கள் அதிகம் நடப்பதால், நாங்கள் தான் இந்தத் தாக்குதலை நடத்தினோம் என்று இந்து ரக்‌ஷா தள் அமைப்பின் தலைவர் பிங்கி சவுத்ரி தெரிவித்துள்ளார். அவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

நேரு பல்கலைக்கழக தாக்குதலைக் கண்டித்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தியும் ஜே.என்.யூ. வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மாணவர்கள், பேராசிரியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து ஜே.என்.யூ. வளாகத்திற்கு வெளியே நடைபெற்று வரும் மாணவர்களின் போராட்டத்திற்கு பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே திடீரென நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். நடிகை மாணவர்களின் போராட்டத்திற்கு தனது ஆதரவு தெரிவித்தது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தீபிகாபடுகோனே நடித்துள்ள சாப்பாக் என்கிற இந்திப்படம் சனவரி 10 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அப்படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கத்திலேயே அவர் மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார் என்று விமர்சனங்கள் வருகின்றன. பாஜக ஆதரவாளர்கள் இவ்விமர்சனத்தை வைக்கிறார்கள்.

அதற்கு எதிர்வினையாக, ரஜினி நடித்துள்ள தர்பார் படம் சனவரி 9 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அப்படம் இந்தியிலும் வெளியாகிறது. அதனால் தீபிகாபடுகோனே போல தர்பார் படத்தை விளம்பரப்படுத்த ரஜினியும் மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கலாமே? என்கிற கருத்துகள் பகிரப்பட்டுவருகின்றன.

ரஜினி சும்மா இருந்தாலும் அவரைப் பற்றிய விமர்சனங்களுக்கு மட்டும் குறைவில்லை.

Leave a Response