12 தொகுதிகள் காலியாகும்வரை விஜய்யின் கேலிக்கூத்து தொடரும் – ஆர்.பி.உதயகுமார் தகவல்

அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் என அடுத்தடுத்து ஆளும்கட்சியான தவெகவில் இணைந்து வரும் சூழலில்,அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் ஆளும்கட்சியையும்,முதல்வர் விஜய்யையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக காணொலி ஒன்றில் ஆர்.பி.உதயகுமார் பேசியிருப்பதாவது….

அதிமுகவிலிருந்து ஒருசிலர் பதவி ஆசைக்காகச் சென்றாலும்,எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா வழியில் வந்த 1.5 கோடிக்கும் அதிகமான உண்மையான அதிமுக தொண்டர்கள் ஒருபோதும் டிஜிட்டல் விளம்பர தவெக கட்சிக்குச் செல்லமாட்டார்கள்.ஜனநாயகத் திருவிழாவில் ஆள் பிடிக்கும் வேலையை த.வெ.க அரசு செய்து வருகிறது.

தேர்தலில் தவெகவை எதிர்த்துப் போட்டியிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் விஜய்யின் மகுடிக்கு மயங்கியுள்ளனர்.இதில் இரட்டைஇலைச் சின்னத்தில் வெற்றி பெற்று மயங்கிப்போன ஆறாவது சட்டமன்ற உறுப்பினர் கரூர் விஜயபாஸ்கர்.எங்கே போய் நிற்குமோ? இந்த ஜனநாயகக் கேலிக்கூத்து.

இப்படிக் கொஞ்சமும் கூச்சமின்றி,அச்சமின்றி அரங்கேற்றிவரும் அரசியல் அலங்கோலத்தைத் தட்டிக்கேட்பதற்கு முதல்வர் விஜய்யின் மகுடிக்கு மயங்கிக் கிடக்கிற தமிழ்ச்சமுதாயத்துக்கு இப்போது வேண்டுமானால் துணிச்சல் இல்லாமல் இருக்கலாம்.ஆனால் இப்படியேதான் காலம் போகும் என்று முதல்வர் விஜய் நினைத்தால் அது தவறு. விரைவிலேயே தயாராகுங்கள் முதல்வரே.தமிழ்ச்சமுதாயம் உங்களுக்குத் துணிச்சலான முடிவைத் தருவதற்கு காத்துக்கொண்டிருக்கிறது என ஆர்.பி.உதயகுமார் எச்சரித்துள்ளார்.

தவெக அரசுக்குப் பெரும்பான்மை பலம் கிடைக்கிற வகையிலே 12 தொகுதிகளுக்கு மொத்தமாக இடைத்தேர்தல் நடத்த விஜய் திட்டமிட்டு இருக்கிறார்.அதுவரை இந்த அரசியல் அலங்கோலங்கள்,ஜனநாயக கேலிக்கூத்துகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.என்ன செய்வது?தற்போது காற்று தவெக பக்கம் வீசுகிறது.இருந்தாலும் இந்த ஜனநாயகக் கேலிகூத்தை நடத்துகிற ஆணவம் அழிவைத் தரும்

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response