
தேர்தல் ஆணையத்தின் சிறப்புத் தீவிரத் திருத்தத்துக்கு (எஸ்ஐஆர்) எதிராக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு இந்தியா கூட்டணி கடிதம் எழுதியுள்ளது.
எஸ்ஐஆர் பணிகளுக்கு இந்தியா கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.இந்தநிலையில், எஸ்ஐஆர் பணிகள் வாக்குரிமையைப் பறிப்பதாகக் குற்றம்சாட்டி இந்தியா கூட்டணி சார்பில் 23 கட்சிகள், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதியுள்ளன.
இதுகுறித்து காங்கிரசு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள சமூகவலைதளப் பதிவில்….
ஜூன் 8 அன்று நடைபெற்ற இந்தியா கூட்டணிக் கூட்டத்தில் 21 அரசியல் கட்சிகளும், ஒரு சுயேச்சை உறுப்பினரும் பங்கேற்றனர்.அப்போது எஸ்ஐஆர் மற்றும் தேர்தல் தொடர்பான பிறவிவகாரங்கள் குறித்து தலைமை நீதிபதிக்கு ஒரு கூட்டுக்கடிதம் அனுப்புவது என்று முடிவு செய்யப்பட்டது.அதன்படி,23 அரசியல் கட்சிகள் மற்றும் ஒரு சுயேச்சை உறுப்பினரின் கையெழுத்துகளுடன் கூடிய கூட்டுக்கடிதம் இன்று தலைமை நீதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று அவர் பதிவிட்டுள்ளார்.
ஜூன் 8 ஆம் தேதி நடந்த இந்தியா கூட்டணிக் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி மற்றும் திமுக ஆகிய கட்சிகள் பங்கேற்கவில்லை.ஆனால்,இப்போது அனுப்பப்பட்ட கடிதத்தில் இவ்விரு கட்சிகளும் கையெழுத்திட்டுள்ளன.
தமிழகத்தில் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்து ஆட்சியில் பங்குபெற்ற காங்கிரசுக் கட்சி,திமுக கூட்டணியில் இருந்து விலகியது.இதனால்,இந்தியா கூட்டணிக் கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை.இந்தச் சூழலில்,இந்தியா கூட்டணியின் முக்கிய கட்சிகள் மேற்கொண்ட தீவிர பேச்சுவார்த்தைகளின் விளைவாக,தலைமை நீதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் திமுக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் கையெழுத்திட்டுள்ளன.
தவெக அரசு,பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்பட்டுவருவதால் அக்கட்சியை இந்தியா கூட்டணியில் சேர்க்க காங்கிரசு விரும்பவில்லை என்று கூறப்படும் தகவலை உறுதிப்படுத்தும் வண்ணம் இந்த நிகழ்வு நடந்துள்ளது.


