ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனத்தின் முயற்சிக்கு தவெக அரசு துணை போயிருக்கிறது. மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் திட்டத்துக்கு அவசர அவசரமாக அரசு ஆணை பிறப்பித்திருப்பது ஏற்கத்தக்கதல்ல.
கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க தமிழ்நாடு அரசு துணை போவதா? மக்களின் உணர்வுக்கு எதிரான ஆணையை தவெக அரசு இரத்து செய்யவேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது….
கன்னியாகுமரி மாவட்டம்,கிள்ளியூரில் 1144 எக்டேர் பரப்பளவில் அணுக்கனிம சுரங்கம் அமைக்கும் ஒன்றிய அரசு பொதுத்துறை நிறுவனத்தின் முயற்சிக்கு தமிழக அரசு துணை போயிருக்கிறது.கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்ட மக்கள் மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வரும் திட்டத்திற்கு ஆதரவாக தமிழக அரசு அவசர அவசரமாக ஆணை பிறப்பித்திருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கல்ல.
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் ஒன்றிய அரசுக்குச் சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு (Indian Rare Earths Limited) தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும் நோக்குடன் கிள்ளியூரையடுத்த கீழ்மிடாலம், மிடாலம், இனையம், புத்தன்துறை, ஏழுதேசம், கொல்லங்கோடு ஆகிய கிராமங்களில் 1817 எக்டேர் பரப்பளவில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க 2015 ஆம் ஆண்டில் ஒன்றிய அரசு முடிவு செய்தது. இது தொடர்பான அணுசக்தித் துறையின் கோரிக்கையை ஆய்வு செய்த தமிழக அரசு 1144 எக்டேர் நிலத்தில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க 2020 ஆம் ஆண்டில் ஒப்புதல் அளித்தது.அதைத்தொடர்ந்து அந்த நிலங்களை அணுக்கனிமச் சுரங்கம் அமைக்க ஒதுக்கீடு செய்து 11.06,2021-ஆம் நாள் ஒன்றிய அரசு ஆணை பிறப்பித்தது.
அதன் தொடர் நடவடிக்கையாக அங்கு அணுக்கனிம சுரங்கம் அமைப்பதற்கான பொதுமக்களின் கருத்துக் கேட்புக் கூட்டம் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் ஒன்றாம் தேதி நடைபெறுவதாக இருந்தது.அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து 28.09.2024-ஆம் நாள் அறிக்கை வெளியிட்டேன்.மேலும் கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்ட மக்களும் இந்தத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.அதைத்தொடர்ந்து கருத்துக்கேட்புக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
ஆனாலும்,அணுக்கனிம சுரங்கத்தை அமைக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்த ஒன்றிய அரசு,டங்ஸ்டன், தாமிரம்,நிக்கல்,பிளாட்டினம் உள்ளிட்ட 24 வகையான முக்கியக் கனிமங்களையும்,தோரியம்,யுரேனியம், மோனசைட் உள்ளிட்ட 6 வகையான அணுக்கனிமங்களையும் தோண்டி எடுப்பதற்கான சுரங்கங்களை அமைப்பது குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்கும் கூட்டங்களை நடத்தத் தேவையில்லை என்றும்,இவற்றுக்கான சுற்றுச்சூழல் அனுமதியை இனி ஒன்றிய அரசே வழங்கும் என்றும் 2025 ஆம் ஆண்டில் ஒன்றிய அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டது.
ஆனாலும்,மக்களின் எதிர்ப்பு காரணமாக அணுக்கனிம சுரங்கம் அமைக்கும் நடவடிக்கைகள் கிடப்பில் போடப்பட்டிருந்தன.அணுக்கனிம சுரங்கம் அமைக்க 1144 எக்டேர் நிலங்களை ஒதுக்கி 11.06.2021 ஆம் நாள் ஒன்றிய அரசு பிறப்பித்த ஆணை ஐந்தாண்டுகளுக்கு மட்டும்தான் என்பதால்,இந்தத்திட்டம் காலாவதியாகி விட்டதாக அனைவரும் நினைத்துக் கொண்டிருந்த வேளையில் நிலஒதுக்கீட்டை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து கடந்த 10.06.2026-ஆம் நாள் தமிழக அரசு,அதற்குரிய அதிகாரத்தை பயன்படுத்தி அரசாணை பிறப்பித்திருக்கிறது.
அதிலும் நிலம் ஒதுக்கப்பட்ட ஆணை பிறப்பிக்கப்பட்டு 5 ஆண்டுகள் முடிவடையும் கடைசிநாளில் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதன்மூலம் இந்திய அருமணல் ஆலை ஒரு சில அனுமதிகளை மட்டும் பெற்று அணுக்கனிம சுரங்கத்தை அமைத்துவிட முடியும்.இதன்மூலம் கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்ட மக்களுக்கு சரி செய்யமுடியாத அளவுக்குப் பாதிப்புகள் ஏற்படும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம சுரங்கம் அமைக்கப்படவுள்ள கிள்ளியூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் அதிக அளவில் அணுக்கதிர்வீச்சு நிலவும் பகுதிகள் ஆகும்.மணவாளக்குறிச்சி பகுதியில் இயங்கும் இந்திய அருமணல் ஆலையால் ஏற்படும் கதிர்வீச்சு காரணமாக அங்குள்ள மக்கள்,புற்றுநோய்,சிறுநீரகப் பாதிப்பு, தோல்நோய்,ஆஸ்துமா,கருச்சிதைவு உள்ளிட்ட பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர்.அத்துடன் கூடுதலாக இப்போது அணுக்கனிம சுரங்கம் அமைக்கப்பட்டால்,அங்குள்ள மக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் பாதிப்புகள் அதிகரிக்கும்.இந்த உண்மைகள் அனைத்தும் தெரிந்திருந்தும் அணுக்கனிம சுரங்கம் அமைக்கும் ஒன்றிய அரசின் திட்டத்திற்கு தமிழக அரசு துணை போவதை ஏற்கமுடியாது.
மக்கள் நலனில் அக்கறை கொண்ட எந்த அரசும் மக்களின் விருப்பப்படி தான் செயல்பட வேண்டும்.ஆனால், மக்களின் விருப்பத்திற்கு மாறாக கிள்ளியூரில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க 1144 எக்டேர் நிலம் ஒதுக்கிய ஆணையின் செல்லுபடியாகும் காலத்தை மேலும் ஓராண்டு நீட்டித்து பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையை தமிழ்நாடு அரசு உடனடியாக இரத்து செய்யவேண்டும்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


