
2020 ஆம் ஆண்டு தொடக்கத்தை மக்கள் மகிழ்ச்சியாகக் கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில் அது பொறுக்காத மோடி தலைமையிலான மத்திய அரசு, அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் பயன்படுத்தும் தொடர்வண்டிக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
இந்திய ரெயில்வே நிர்வாகம் நேற்று இரவு ரெயில் கட்டணத்தை கிலோ மீட்டருக்கு ஒரு பைசாவில் இருந்து 4 பைசா வரை உயர்த்தி அறிவித்தது. அதன் விவரம் வருமாறு:-
குளிர்சாதன வசதி (ஏ.சி.) இல்லாத சாதாரண ரெயில்களில் இரண்டாம் வகுப்பு, தூங்கும் வசதி, முதல் வகுப்பு ஆகிய கட்டணங்கள் ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு பைசா உயர்த்தப்படுகிறது.
மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏ.சி. வசதி இல்லாத இரண்டாம் வகுப்பு, தூங்கும் வசதி, முதல் வகுப்பு ஆகிய கட்டணங்கள் ஒரு கிலோ மீட்டருக்கு 2 பைசா உயர்த்தப்படுகிறது.
அதேபோல மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் சேர்கார், முதல் வகுப்பு உள்பட அனைத்து ஏ.சி. வசதி கட்டணங்கள் ஒரு கிலோ மீட்டருக்கு 4 பைசா உயர்த்தப்படுகிறது.
இந்த கட்டண உயர்வு நேற்று நள்ளிரவு 12 மணி முதல் (ஜனவரி 1 முதல்) அமலுக்கு வந்தது. ஏற்கனவே பழைய கட்டணத்தில் டிக்கெட் வாங்கியவர்கள் 1-ந் தேதியோ அல்லது அதற்கு பின்னரோ உயர்த்தப்பட்ட கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டியதில்லை. அதேசமயம் 1-ந் தேதி அல்லது அதற்கு பின்னர் ரெயில் நிலையங்களிலோ, ரெயிலில் டிக்கெட் பரிசோதகர்களிடமோ டிக்கெட் வாங்குபவர்கள் உயர்த்தப்பட்ட கட்டணத்தை செலுத்த வேண்டும்.
ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ, வந்தே பாரத், தேஜஸ், ஹம்சபர், மஹாமனா, கைமான், அந்யோதயா, கரிப்ரத், ஜன் சதாப்தி, ராஜ்ய ராணி, யுவ எக்ஸ்பிரஸ், சுவிதா மற்றும் சிறப்பு கட்டண ரெயில்களுக்கும் இந்த கட்டண உயர்வு பொருந்தும்.
புறநகர் ரெயில்களில் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதேபோல ரெயில் டிக்கெட் முன்பதிவு கட்டணம், சூப்பர் பாஸ்ட் ரெயில்களுக்கான கூடுதல் கட்டணம் ஆகியவற்றில் எந்த மாறுதலும் இல்லை. இதில் ஏற்கனவே உள்ள கட்டணங்களே தொடரும்.
இவ்வாறு ரெயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2020 புத்தாண்டுப் பரிசாக இந்தச் சுமையைச் சுமத்தியுள்ளது மத்திய அரசு. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


