அதிமுக எங்களை மதிக்கவில்லை – அன்புமணி வெளிப்படைப் பேச்சால் சர்ச்சை

2020 ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி பா.ம.க. சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஓமந்தூரில் நடைபெற்றது.மருத்துவர் இராமதாசு கலந்துகொண்ட இக்கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஏ.கே.மூர்த்தி, வேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாசு எம்.பி. பேசியதாவது….

தமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கிறது. அதில் மாற்றுக்கருத்து கிடையாது. நாம் கூட்டணிக்குச் சென்றாலும், நமது கொள்கையில் எள்ளளவு கூட பின்வாங்கவில்லை. பின்வாங்கப் போவதும் இல்லை. கூட்டணியே வேண்டாம் என்ற கொள்கையை மாற்றி, நாம் கூட்டணிக்குச் சென்றோம். ஆனால் அதைக் கூட அங்கீகாரம் செய்யவில்லையே என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது.

நாம், அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேரவில்லை என்றால், இன்று அ.தி.மு.க. ஆட்சியே இல்லை. தமிழகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க.விற்கு விட்டுக்கொடுத்தோம். அவர்கள் ஆட்சியைப் பிடிக்க வேண்டும், ஆட்சியைத் தொடர வேண்டும் என்றார்கள். அதனால் விட்டுக்கொடுத்தோம். ஆனால் நாங்கள் கேட்டது, கட்சியில் உழைக்கிறவர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலர் பதவி கொடுங்கள் என்றோம்.

ஆனால் குறைந்த அளவே கொடுத்திருக்கிறார்கள். ஆளும் கட்சியின் தலைமை எங்களது கருத்துகளையெல்லாம் ஏற்று, இனி வரும் காலங்களில் அதைச் சரிசெய்ய வேண்டும் என்று எனது அன்பான வேண்டுகோளை இந்தப் பொதுக்குழு மூலம் வைக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆளும் அதிமுகவுக்கு எதிராக அவர் வெளிப்படையாகப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response