பெரியகுளம் பெண் உயிரை பறித்தது ஓபிஎஸ் மகன் கார்?

பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி முத்தழகு (வயது 24). இவர் செங்கல் சூளையில் கூலிவேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் இரவு கைலாசப்பட்டியில் பெரியகுளம்-தேனி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பெரியகுளத்தில் இருந்து தேனி நோக்கி சென்ற கார் முத்தழகு மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் முத்தழகுவின் உறவினர்கள் கைலாசப்பட்டி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தை ஏற்படுத்திய காரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதாக உறவினர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் மறியல் செய்வதை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்நிலையில் நேற்று தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் முத்தழகு பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது உடலை பிரேத பரிசோதனை செய்யப்பட்டு ஆம்புலன்சில் கைலாசப்பட்டிக்கு கொண்டு வந்தனர். அப்போது தேனி-பெரியகுளம் சாலையில் கைலாசப்பட்டியில் ஆம்புலன்சை அவருடைய உறவினர்கள் மறித்தனர். பின்னர் உடலை வாங்க மறுத்து சாலை மறியலில் அவர்கள் ஈடுபட்டனர். தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் விபத்து ஏற்படுத்திய காரை உடனடியாக கண்டுபிடித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்து நடந்த பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

விரைவில் விபத்து ஏற்படுத்திய காரையும், டிரைவரையும் கண்டுபிடிப்பதாகவும், வேகத்தடுப்பு கம்பிகள் வைக்கப்படும் என்றும் போலீஸ் சூப்பிரண்டு கூறினார். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டனர். பின்னர் முத்தழகுவின் உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இந்தச் செய்தியில் உள்ள விபத்து ஏற்படுத்திய கார் ஓபிஎஸ்ஸின் மகனுடையதாம். அவருடைய ஓட்டுநர் இந்த விபத்தை ஏற்படுத்தியவராம்.

இந்தச் செய்தி காவல்துறை உட்பட எல்லோருக்கும் தெரியும் என்கிறார்கள். அதனால் விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு 15 இலட்சம் ரூபாயை நட்ட ஈடாக கொடுத்து சிக்கலைத் தீர்த்ததாக உள்ளூர் மக்கள் பேசிக்கொள்கின்றனர்.

Leave a Response