18 ஆண்டுகள் கடந்தும் தண்டனை பெற்ற சரவணபவன் இராஜகோபால்

2001ம் ஆண்டு சரவணபவன் ஓட்டலில் பணிபுரிந்த ஊழியரின் மகள் ஜீவ ஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரை கொலை செய்த வழக்கில் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் ராஜகோபால் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனையை இன்று உச்சநீதிமன்றம் உறுதி செய்து, ராஜகோபால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ஜீவ ஜோதி.

இவர் தமது தாய் மற்றும் கணவருடன் சென்னையில் வசித்து வந்தார். ஜீவஜோதியின் தந்தை, ராஜகோபால் நடத்தி வந்த சரவணபவன் ஹோட்டலில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், ஜீவ ஜோதியை திருமணம் செய்யும் ஆசையில் இருந்த ராஜகோபால் கடந்த 2001ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ம் தேதி ஜீவ ஜோதியின் கணவரை கடத்தி கோடைகாலனலில் அடியாட்களை வைத்து கொலை செய்துள்ளார்.

இந்த கொலை சமபவத்தில் சரவணபவன் ராஜகோபால் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் ராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 55 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. இதேபோல இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற 8 பேருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனையை பூந்தமல்லி கீழ்நீதிமன்றம் வழங்கியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து ராஜகோபால் மற்றும் கூட்டாளிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர். அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ராஜகோபால் உள்ளிட்ட 6 பேருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு பதிலாக ஆயுள் தண்டனையை விதித்து கடந்த 2009ம் ஆண்டு உத்தரவிட்டது.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பையும் எதிர்த்து ராஜகோபால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்.வி.ரமணா மற்றும் மகேஸ்வரி முன்பு விசாரணைக்கு வந்த போது, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளனர். மேலும் ஐகோர்ட் தீர்ப்பை ரத்து செய்யக்கோரி தொடுத்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

தற்போது மிகுந்த உடல்நலக் குறையில் அவதிப்பட்டாலும் 18 ஆண்டுகளாக விடாது துரத்திய வழக்கில் சிக்கியிருக்கிறார் இராஜகோபால்.

Leave a Response