கடைசிவரை சிறை செல்லாமல் தப்பிக்கும் சரவணபவன் இராசகோபால்

ஜீவஜோதி கணவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சரவணபவன் உணவக் உரிமையாளர் ராஜகோபால் நேற்று மாலை நீதிமன்றத்தில் ஆம்புலன்சில் வந்து சரண் அடைந்தார். அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

தஞ்சாவூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜீவஜோதி. இவர், பெற்றோருடன் சென்னை, வேளச்சேரியில் வசித்து வந்தார். இவரது தந்தை சரவணபவனில் மேலாளராகப் பணிபுரிந்து வந்தார்.

இந்தநிலையில், ஏற்கனவே இரண்டு மனைவிகளோடு வசித்து வந்த, சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் ஜீவஜோதியையும் 3-வது மனைவியாக்கிக் கொள்ள ஆசைப்பட்டார். ஆனால் ஜீவஜோதி, பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.

இந்தநிலையில், சாந்தகுமார் காணாமல் போனார். பின்னர் ஜீவஜோதி தனது கணவர் காணாமல் போனது குறித்து வேளச்சேரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர். விசாரணை நடத்தியதில் சாந்தகுமாரை, சரவணபவன் ராஜகோபால், கூலிப்படை வைத்து கொலை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து ராஜகோபால், டேனியல், தமிழ்செல்வன், சேது, காசி விஸ்வநாதன், கார்மேகம், ஜாகீர் உசைன், பாலு, பட்டுராஜன், முருகானந்தம், ஜனார்தனன் உள்ளிட்ட 11 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் 2004 ஆம் ஆண்டு ராஜகோபாலுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.55 லட்சம் அபராதமும், அவரது கூட்டாளிகள் 10 பேருக்கு சிறைத் தண்டனையும் விதித்து உத்தரவிட்டது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து ராஜகோபால் மற்றும் அவரது கூட்டாளிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அப்போது, அரசுத் தரப்பும் தண்டனையை அதிகரிக்குமாறு மேல்முறையீடு செய்திருந்தது.

வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ராஜ கோபால், பட்டுராஜன், ஜனார்த்தன், டேனியல், தமிழ்ச் செல்வன், கார்மேகம் ஆகிய 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்தும் ராஜகோபால் மற்றும் அவரது கூட்டாளிகள் கடந்த 2009 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ராஜகோபால், டேனியல், கார்மேகம், உசேன், காசிராஜன், பட்டுராஜன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும். தமிழ்செல்வன், சேது, முருகானந்தம் ஆகியோருக்கு 3 ஆண்டும். பாலு, ஜனார்தனன் ஆகியோருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்து, ஜுலை 7 ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சரண் அடைந்து சிறைக்குச் செல்லவும் கெடு விதித்திருந்தது.

அதன்படி, தண்டனைபெற்ற டேனியல், தமிழ்செல்வன், சேது, காசி விஸ்வநாதன், கார்மேகம், சாஹீர் உசைன், பாலு, பட்டுராஜன், முருகனந்தம் சென்னை 4 வது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் ஆஜராகி சிறைக்கு சென்றனர்.

ஆனால், ராஜகோபால், ஜனார்தனன் ஆகியோர் மட்டும் சரணடையாமல், தாங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறி, சரணடைய அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை நேற்று விசாரித்த உச்சநீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 9 பேரும் ஆஜராகிவிட்டனர். நீங்கள் மட்டும் ஏன் சரணடையவில்லை. மருத்துவக் காரணங்களைக் காட்டி விலக்கு அளிக்க முடியாது. ஒரு நாள் கூட உங்களால் சிறையில் இருக்க முடியாதா. உடல்நிலையைக் காரணம் காட்டுவதாக இருந்தால், கடைசி நேரத்தில் ஏன் மனு தாக்கல் செய்தீர்கள் என்று கேள்வி எழுப்பி உடனடியாக நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

இந்தநிலையில், நேற்று மாலை 5 மணியளவில் ராஜகோபால் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் சென்னை, உயர் நீதிமன்ற வளாகத்திற்கு வந்தடைந்தார். பின்னரே மற்றொரு குற்றவாளி ஜனார்தனும் ஆம்பூலன்ஸ் மூலம் வந்தடைந்தார். இருவரும் படுத்தபடியே ஆம்பூலன்ஸில் இருந்தனர்.

அவர்களைக் காண நீதிமன்றப் பணியாளர்கள், வழக்குரைஞர்கள் கூட்டம் சூழ்ந்து கொண்டது. இந்தநிலையில் இருவரின் வழக்கறிஞர்கள் முத்துகிருஷ்ணன், கணேசன் ஆகியோர், குற்றவாளிகளை ஆம்பூலன்ஸில் வைத்து விட்டு, மேலே சென்றனர்.

அப்போது 3 ஆவது மாடியில் இருக்கும் 4 ஆவது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நீதிபதி தானேந்திரன் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது.

அங்கு குற்றவாளிகளின் வழக்கறிஞர்கள், ஆஜராகி, ராஜகோபால் மற்றும் ஜனார்தனன் இருவராலும் மேலே வர முடியாது, நீங்கள் கீழே வந்து விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். இதற்கு அரசு வழக்குறைஞர் முரளிகிருஷ்ணன், கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், இருவரையும் லிப்டில் மேலே அழைத்து வரலாம் அதில் எந்த சிரமமும் இல்லை என்று வாதிட்டார்.

இதற்கு நீதிபதி, விசாரணை அதிகாரி வேளச்சேரி இன்ஸ்பெக்டரை அனுப்பி, அவர்களை மேலே அழைத்து வருவதற்கான சாத்தியக் கூறுகள் இருகிறதா என்பதைப் பார்க்கச் சொன்னார். அதனை சோதனை செய்ததில், வீல்சேர், ஸ்டெச்சரில் வைத்து லிப்டில் அழைத்து வரலாம் என்று இன்ஸ்பெக்டர் தெரிவித்தார்.

ஆனால் குற்றவாளிகளின் வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நீதிபதி, குற்றவாளி சேரில் எத்தனை நாட்களாக அமரவில்லை என்று கேட்டார். அதற்கு வழக்கறிஞர்கள் கடந்த 20 நாட்களாக அமரமுடியவில்லை என்று தெரிவித்தனர். அதற்கு அரசு தரப்பு வக்கீல், கடந்த வாரம் கூட அமர்திருந்ததாக தெரிவித்தார். இதனையடுத்து நீதிபதி மேலே அழைத்து வர உத்தரவிட்டார்.

அதன்படி வீல் சேரில் ஜனார்தனன் அழைத்து வரப்பட்டார். அவரின் பெயர், அங்க அடையாளங்களை சோதனை செய்த நீதிபதி சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இரண்டாவதாக ஆம்பூலன்ஸில் இருந்து ராஜகோபாலை இறக்கிய போது அவர் வலிக்குதே, வலிக்குதே என்று கத்தினார். அப்படியே ஸ்டெச்சரில் வைத்து லிப்ட் மூலம் மேலே அழைத்து செல்லப்பட்டார். அப்போது அவரிடமும் பெயர் மற்றும் அங்க அடையாங்களை கேட்டு சரிபார்த்துகொண்ட நீதிபதி சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

சரவணபவன் ராஜகோபாலை சிறையில் அடைக்க உத்தரவிட்ட பின்பு, போலீசார், அவரை மருத்துவப் பரிசோதனைக்காக சென்னை ஸ்டேன்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், உடல்நிலை சரியில்லாததாகவும், இங்கேயே, கைதிகள் வார்டில் சேர்க்கவும் அறிவுரை கூறியுள்ளனர்.

இதனால் அவர் எப்போது சிறைக்குச் செல்வார் என்று சட்ட வல்லூநர்களிடம் கேட்டபோது, மருத்துவர்களின் அறிக்கை மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவு என ராஜகோபாலின் விவரங்கள் அனைத்தையும் புழல் சிறைக்குக் கொண்டு சென்று சிறை அதிகாரிகளிடம் தெரிவிக்கப்படும்.

சிறை அதிகாரி, சிறை மருத்துவர் அறிக்கையை பார்த்து சிறைக்கு அழைத்து வரலாமா இல்லை, கைதி எண் கொடுத்து, ஸ்டேன்லி மருத்துவமனையில் சில நாட்கள் சிகிச்சை அளிக்கலாமா என்று முடிவு செய்வார் என்று கூறுகின்றனர்.

Leave a Response