தோனி வெளியேறும்போது கரைபுரண்ட கண்ணீர்

உலகக் கோப்பை மட்டைப்பந்துப் போட்டியில் இந்தியா–நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது அரைஇறுதி ஆட்டம் மான்செஸ்டரில் நேற்று முன்தினம் திட்டமிட்ட நேரத்தில் தொடங்கியது.

‘டாஸ்’ வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 211 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. பலத்த மழை பெய்ததால் அதன் பிறகு ஆட்டத்தைத் தொடர இயலவில்லை.

அரைஇறுதிசுற்றுக்கு மாற்று நாள் (ரிசர்வ் டே) உண்டு என்பதால் மறுநாள் இந்த ஆட்டம் விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதன்படி எஞ்சிய 23 பந்துகளை நேற்று தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி மேற்கொண்டு 28 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் சேர்த்தது. ஜடேஜாவினால் சூப்பராக ரன்–அவுட் செய்யப்பட்ட ராஸ் டெய்லர் அதிகபட்சமாக 74 ரன்கள் (90 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தார்.

பின்னர் 240 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்தியாவுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. நடப்பு தொடரில் 5 சதங்கள் விளாசிய சாதனையாளரான ரோகித் சர்மா (1 ரன்) வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி வீசிய ‘அவுட் ஸ்விங்’கில் விக்கெட் கீப்பர் லாதமிடம் கேட்ச் ஆனார். அடுத்து இறங்கிய விராட் கோலி (1) டிரென்ட் பவுல்ட்டின் வேகத்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் வீழ்ந்தார். டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்த போது, டி.வி. ரீப்ளேயில் பந்து லேசாக ஸ்டம்பு மீது இருந்த பெய்ல்சை தட்டுவது தெரிந்தது. கள நடுவரின் தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது என்று 3–வது நடுவர் கூறியதால் கோலி அதிருப்தியுடன் வெளியேறினார்.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் (1 ரன்) பந்தை விடுவதா? வேண்டாமா? என்ற குழப்பத்திற்கு மத்தியில் பந்தை தொட்டு விக்கெட் கீப்பர் லாதமிடம் பிடிபட்டார்.

பேட்டிங் தூண்களான 3 முதல்நிலை வீரர்களும் வந்த வேகத்தில் அடங்கியதால் இந்திய அணி ஊசலாடியது. அடுத்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக்குக்கு அணியைத் தூக்கி நிறுத்த கிடைத்த அற்புதமான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறினார். கார்த்திக் (6 ரன், 25 பந்து) ஹென்றி வீசிய பந்தை அடித்த போது, மிக தாழ்வாகச் சென்ற பந்தை ஜேம்ஸ் நீ‌ஷம் பாய்ந்து விழுந்து ஒற்றைக்கையால் கேட்ச் செய்து பிரமிக்க வைத்தார்.

‘பவர்–பிளே’யான முதல் 10 ஓவர்களில் இந்தியா 4 விக்கெட்டுக்கு 24 ரன்களுடன் தத்தளித்தது. இந்த உலகக் கோப்பையில் ‘பவர்–பிளே’யில் ஒரு அணியின் மோசமான ஸ்கோர் இதுதான்.

இதைத் தொடர்ந்து 5 ஆவது விக்கெட்டுக்கு ரிஷாப் பண்டும், ஆல்–ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவும் இணைந்து அணியை வீழ்ச்சியின் பிடியில் இருந்து மீட்டெடுக்க போராடினர்.

ஒரு பக்கம் புயல்வேகப் பந்து வீச்சு, இன்னொரு பக்கம் மிட்செல் சான்ட்னெரின் துல்லியமான சுழல் தாக்குதல் என்று நியூசிலாந்து இடைவிடாது குடைச்சல் கொடுத்தது.

ஸ்கோர் 71 ரன்களை (22.5 ஓவர்) எட்டிய போது ரிஷாப் பண்ட் (32 ரன், 56 பந்து, 4 பவுண்டரி) தேவையில்லாமல் சான்ட்னெரின் வீசிய பந்தை தூக்கியடித்து கேட்ச் ஆனார். இதே போல் ஹர்திக் பாண்ட்யாவும் (32 ரன், 62 பந்து, 2 பவுண்டரி) சிக்சருக்கு ஆசைப்பட்டு விக்கெட்டை தாரை வார்த்தார். இதனால் இந்திய அணி மறுபடியும் தடம் புரண்டது. அப்போது இந்தியா 6 விக்கெட்டுக்கு 92 ரன்கள் (30.3 ஓவர்) எடுத்திருந்தது.

இந்த இக்கட்டான சூழலில் தோனியும், ஆல்–ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும் கைகோர்த்து அணியை படிப்படியாக நிமிர வைத்தனர். நீ‌ஷம், சான்ட்னெரின் ஓவர்களில் சிக்சர்களை பறக்க விட்டு குஷிப்படுத்திய ஜடேஜா 39 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 8 ஆவது வரிசையில் இறங்கி அரைசதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையோடு அவர் தொடர்ந்து மட்டையை சுழட்டினார். அவருக்கு தோனி நன்கு ஒத்துழைப்பு தந்தார்.

இவர்கள் ஆடிய விதம் இந்தியாவுக்கு சற்று நம்பிக்கையைத் துளிர்விடச் செய்தது. அதே சமயம் உற்சாகத்தில் திளைத்த நியூசிலாந்து வீரர்கள் பதற்றத்திற்கு உள்ளானார்கள். இருப்பினும் பந்து வீச்சில் சாதுர்யமாக செயல்பட்ட நியூசிலாந்து பவுலர்கள் அவ்வப்போது யார்க்கர் மற்றும் வேகம் குறைந்த பந்துகளை வீசி மிரட்டினர்.

கடைசி 3 ஓவர்களில் இந்தியாவின் வெற்றிக்கு 37 ரன்கள் தேவைப்பட்டது. இந்த பரபரப்பான கட்டத்தில் ஜடேஜா (77 ரன், 59 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) பந்தை தூக்கியடித்து கேட்ச் ஆனார்.

அதன் பிறகு ஒட்டுமொத்த ரசிகர்களின் பார்வையும் தோனி மீது திரும்பியது. போராடிய தோனி (50 ரன், 72 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) ரன்–அவுட் ஆக இந்தியாவின் நம்பிக்கை முற்றிலும் சிதைந்தது. உலகக் கோப்பையில் தனது கடைசி ஆட்டத்தில் ஆடிய 38 வயதான தோனி, அணியை கரைசேர்க்க முடியாத சோகத்துடன் வெளியேறினார்.

இறுதி ஓவரில் வெற்றிக்கு 23 ரன் தேவையாக இருந்த போது பவுண்டரி அடித்த யுஸ்வேந்திர சாஹல் (5 ரன்) இதன் 3 ஆவது பந்தில் ஆட்டம் இழந்தார். இந்திய அணி 49.3 ஓவர்களில் 221 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆகி, போட்டியில் இருந்து வெளியேறியது.

சர்வதேச அரங்கில் வலுவான பேட்டிங் வரிசையை கொண்ட அணியாக கருதப்படும் இந்திய அணியின் மானம் மான்செஸ்டரில் பறிபோனதால் ரசிகர்கள் நொந்து போனார்கள்.

குறைந்த இலக்கை இந்திய அணி எப்படியும் எட்டிப்பிடித்து விடும் என்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினார்கள். இன்னும் பலர் தோல்வியைத் தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதனர். மொத்தத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது ஒரு துக்க தினமாகவே அமைந்து விட்டது.

ஆனாலும், சோகமாக தோனி வெளியேறியதைப் பார்க்கும்போது கண்ணீர் வந்தது.கலங்காதீர்கள் நன்றாக விளையாடினீர்கள் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என்று ஏராளமானோர் பதிவிட்டு வருகிறார்கள்.

Leave a Response