மாற்று நாள் முறையில் இந்தியா நியூசிலாந்து போட்டி

இங்கிலாந்தில் நடந்து வரும் 12 ஆவது உலகக் கோப்பை மட்டைப்பந்து போட்டி இறுதிக்கட்டத்தை எட்டி விட்டது.

மான்செஸ்டரில் நேற்று நடந்த முதலாவது அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொண்டது.

‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணித்தலைவர் வில்லியம்சன் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இதன்படி நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மார்ட்டின் கப்திலும், ஹென்றி நிகோல்சும் களம் புகுந்தனர்.

முதல் பந்திலேயே கப்திலுக்கு எல்.பி.டபிள்யூ. கேட்டு இந்திய வீரர்கள் முறையிட்டனர். நடுவர் மறுத்ததால் டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்யப்பட்டது. டி.வி. ரீப்ளேயில் பந்து லெக் ஸ்டம்பை விட்டு விலகிச் செல்வது தெரிந்தது. இதனால் இந்தியாவின் டி.ஆர்.எஸ். வாய்ப்பு வீணானது.

முதல் 2 ஓவர் மெய்டன் ஆன நிலையில் 3 ஆவது ஓவரில் கப்தில் (1 ரன், 14 பந்து) பும்ராவின் பந்து வீச்சில் ஸ்லிப்பில் நின்ற கோலியிடம் கேட்ச் ஆனார். 2 ஆவது விக்கெட்டுக்கு அணித்தலைவர் கேன் வில்லியம்சன், நிகோல்சுடன் இணைந்தார். இருவரும் எச்சரிக்கையுடன், நிதானமாக ஆடினர்.

ஆனாலும் பவர்-பிளேயான முதல் 10 ஓவர்களில் அந்த அணி ஒரு விக்கெட்டுக்கு 27 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. நடப்பு உலகக் கோப்பையில் பவர்-பிளேயில் ஒரு அணியின் மோசமான ஸ்கோர் இது தான்.

அணியை சரிவில் இருந்து ஓரளவு மீட்ட இந்த ஜோடியை சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா பிரித்தார். அவரது பந்து வீச்சில் நிகோல்ஸ் (28 ரன், 51 பந்து, 2 பவுண்டரி) கிளன் போல்டு ஆனார்.

இதைத் தொடர்ந்து வில்லியம்சனும், ராஸ் டெய்லரும் கைகோர்த்து அணியை மீட்டெடுக்கப் போராடினர். இவர்களுக்கு சுழற்பந்து வீச்சாளர்கள் வெகுவாக நெருக்கடி தந்தனர். 15 முதல் 27-வது ஓவர் வரை பந்து பவுண்டரி பக்கமே போகவில்லை.

அணியின் ஸ்கோர் 134 ரன்களை (35.2 ஓவர்) எட்டிய போது வில்லியம்சன் 67 ரன்களில் (95 பந்து, 6 பவுண்டரி) சாஹலின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த ஜேம்ஸ் நீஷம் (12 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. ஆடுகளம் பேட்டிங்குக்கு கடினமாக இருந்த போதிலும் டெய்லர் கொஞ்சம் வேகமாக ரன்களை திரட்டினார்.

நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 211 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. தனது 50 ஆவது அரைசதத்தை நிறைவு செய்த ராஸ் டெய்லர் 67 ரன்களுடனும் (85 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்), விக்கெட் கீப்பர் டாம் லாதம் 3 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

தொடர்ந்து மழை பெய்ததால், நடுவர்களும், வீரர்களும் நீண்ட நேரம் காத்திருந்தனர். டக்வொர்த்-லீவிஸ் விதிமுறைப் படி 20 ஓவர்களில் இந்தியாவுக்கு 148 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்படலாம் என்ற சூழலும் வந்தது. ஆனால் விட்டு விட்டுப் பெய்த மழை அதற்கு இடம் கொடுக்கவில்லை.

இந்த உலகக் கோப்பையில் அரைஇறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கு மட்டும் மாற்றுநாள் (ரிசர்வ் டே) வைக்கப்பட்டுள்ளது. இதன்படி மழையால் பாதிக்கப்பட்ட இந்த அரை இறுதி ஆட்டம் மாற்று நாளான இன்று நடைபெறும்.

இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இன்றைய நாளில் நியூசிலாந்து அணி அதே நிலையில் இருந்து (211-5 ரன்) எஞ்சிய 23 பந்துகள் பேட்டிங் செய்யும். அதன் பிறகு இந்திய அணி ஆடும்.

இன்றும் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஒருவேளை இன்றும் ஆட்டத்தை பாதியில் கைவிட நேர்ந்தால், லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பெற்றதன் அடிப்படையில் இந்தியாவுக்கு இறுதிப்போட்டி அதிர்ஷ்டம் கிட்டும் என்று சொல்லப்படுகிறது.

Leave a Response